April 24, 2024
  • April 24, 2024
Breaking News
January 13, 2021

மாஸ்டர் திரைப்பட விமர்சனம்

By 0 669 Views

சமீபத்தில்தான் ரஜினி வார்டனாக நடித்து மாணவர்களை சீர்திருத்திய பேட்டை படம் பார்த்தோம். இப்போது அதே கதையை விஜய்யை மாஸ்டராக்கி கூர்நோக்கு பள்ளியில் மாணவர்களை சீர்திருத்தம் செய்ய வைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இந்தப் படத்தில் இருக்கும் ஒரே வித்தியாசமும் ஆச்சரியமும் வில்லனாக இன்னொரு ஹீரோ விஜய் சேதுபதி நடித்து இருப்பதுதான். ஆனால் அவர் வில்லனா இல்லை ஹீரோவா என்று தெரியாத அளவுக்கு அவரிலேயே கதை ஆரம்பித்து அவர் மூலமே முடிகிறது.

கதை தொடங்குவது விஜய்சேதுபதி கேரக்டரில்தான். தென் மாவட்டத்தில் சிறிய வயதில் நிறைய கொடுமைக்கு ஆட்பட்டு கூர்நோக்கு பள்ளிக்கு எந்த தவறும் செய்யாமல் அனுப்பப்படும் அவர் அங்கு அனுபவிக்கும் சித்திரவதைகளின் மூலம் மிகப்பெரும் கொடூர னாக மாறி வெளியே வந்து அதே பள்ளி மாணவர்களை வைத்து எல்லா அயோக்கிய வேலைகளையும் செய்து வருகிறார்.

இன்னொரு பக்கம் சதா போதையிலேயே மூழ்கிக் கிடக்கும் கல்லூரி பேராசிரியராக இருக்கும் விஜய் அதன் காரணமாகவே அந்த கல்லூரியில் இருந்து மூன்று மாதங்களுக்கு விருப்ப ஓய்வு எடுக்க வைக்கப்பட்டு மேற்படி கூர்நோக்கு பள்ளி வாத்தியாராக வந்து சேர்கிறார்.

அப்புறம் என்னவாகும் என்பது அனைத்து குழந்தைகளுக்கும் தெரிந்த விஷயங்கள்தான்.

விஜய் இதுவரை ஏற்றிராத மாஸ்டர் பாத்திரம். ஆனால் சதா சர்வ காலமும் தண்ணி வண்டியாக இருக்கும் அவர் ‘சரக்கு மாஸ்டர்’ ஆகவே வருவது முற்றிலும் புதுசு. அதனால் இது வாத்தியார் வேடம் என்றாலும் நிஜ வாத்தியாரான எம்ஜிஆர் பாத்திரங்களில் இருந்து நிறைய விலகி நிற்கிறது.

ஆனால், அவரது பாடி லாங்குவேஜ் மற்றும் மேனரிசங்கள் அவரது ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைவரையும் ஈரக்கும் விதமாக இருக்கிறது.

ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி தூர்ந்து போக இனி விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எழ, அதற்கு நிறைய பதில் சொல்கிறார் விஜய். அதைவிட எதிர்காலத்தில் சிறந்த வாக்காளர்கள் உருவாக்க கல்லூரித் தேர்தல் அவசியம் என்றும் செய்தி சொல்கிறார். அது படம் சொல்லும் செய்தியும் கூட.

விஜய் அறிமுகக் காட்சிக்கு அரை மணிநேரம் காக்க வைத்த இயக்குனர் விஜய் சேதுபதிக்கு கொடுத்த பில்ட் அப்புக்கு அந்த அரை மணி நேரத்தையும் பயன்படுத்திக் கொண்டது இது விஜய் படமா இல்லை விஜய் சேதுபதி படமா என்று எண்ண வைத்து விடுகிறது.

இருவருக்குமான அறிமுகத்துக்கே அரைப்படம் முடிந்து விட இருவரும் சந்தித்து பிரச்சினை முடிவுக்கு வர அடுத்த பாதி என்று முழுதாக மூன்று மணிநேரம் எடுத்துக் கொள்கிறது படம்.  தயவு தாட்சண்யம் பார்க்காமல் அரை மணிநேரம் வெட்டி இருந்திருந்தால் நச்சென்று ஒரு படம் கிடைத்திருக்கும்.

விஜய் சேதுபதி ஏன் சிறுவர்களைக் கூட கொல்லும் அளவுக்கு  அவ்வளவு கொடூரன் ஆனார் என்று கொடுக்கும் லாஜிக்குகளுக்கு விஜய் ஏன் அவ்வளவு குடிகாரர் ஆனார் என்று ஒரு லாஜிக்கும் பின்னணியும் இல்லை. அதையும் சொல்லி இருந்தால் படம் 4 மணிநேரம் ஆகியிருக்கும்.

விஜய் போன்ற ஒரு சூப்பர் ஸ்டாரை கையில் வைத்துக்கொண்டு எப்படி ஒரு அதிரி புதிரி ஆக்ஷன் கதையைக் கொடுத்திருக்க முடியும்..? ஆனால் லோகேஷ் கனகராஜ் கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டிருக்கிறார்.

விஜய்யும், விஜய் சேதுபதியும் மோதும் கிளைமாக்ஸ் மகா சொதப்பல். டைசன் போன்று ஒரே குத்தில் ஆளைக் காலி செய்யும் விஜய் சேதுபதியும், மனிதர்களைத் தூக்கிப் போட்டு மிதிக்கும் விஜய்யும் ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் என்று பார்த்தால் மாறி மாறி பாட்டுப் பாடி நம் பொறுமையை சோதிக்கிறார்கள். இதைவிட கைதி படத்தில் லோகேஷ் காட்டிய கொசு மருந்து அடிக்கும் கிளைமாக்ஸ் பரவாயில்லை.

ஹீரோயினே தேவைப்படாத படத்துக்கு மாளவிகா மோக னனைக் கூட்டி வந்து தேவையில்லாத ஃபுட்டேஜ் கூட்டி இருக்கிறார்கள். மாளவிகாவுக்கு முகத்தில் உணர்ச்சிகளே வரவில்லை.

நடிப்பில் தன் பங்கை சரியாகச் செய்து கைத்தட்டல் வாங்கிக் கொண்டு போகிறார் விஜய் சேதுபதி. அவர் பேசும் நிறைய வசனங்கள் அவரே எழுதி பேசியதை போல் இருக்கிறது. அவருக்கு அடுத்தபடியாக அர்ஜுன் தாஸ் நடிப்பில் பளிச்சிடுகிறார். ஆனால் அவரது முகமும் குரலும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருக்கும் சிறுவராக நம்பவே முடியவில்லை. பார்த்தாலே தெரியும் இந்த சாதாரண விஷயத்தை டி என் ஏ டெஸ்ட் வைத்து விஜய் அறிந்து கொள்வது கொடுமை.

இவர்களுடன் ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், கௌரி, ஸ்ரீமன், சஞ்சீவ் என்று ஏகப்பட்ட பாத்திரங்கள். ஒருவருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான வேலைகள் எதுவும் இல்லை.

அனிருத்தின் இசையில் ‘ வாத்தி கமிங்’ தவிர வேறு ஒரு பாடலும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை மகா மட்டம். சத்தியன் சூரியனின் ஒளிப்பதிவு பாராட்டும் படியாக இருக்கிறது.

வாழ்க்கையில் வன்மத்தால் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படும் சிறுவர்களை தவறாக காட்டுவதுடன் அவர்களை கொல்லும் கொடிய காட்சிகளையெல்லாம் காட்டி சமூகத்துக்கு தவறான செய்தியை சொல்கிறது படம்.

குழந்தைகள் கூட ரசிக்கும் விஜய் இப்படி ஒரு படத்தில் நடித்து இருப்பது வேதனையான விஷயம்.

மாஸ்டர் – கோட்டை விட்ட பேட்டை..!