நேற்று மாஸ்டர் படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியது. இன்று படத்தின் வியாபாரத்தில் வெளியே தெரியாமல் நடந்த மாஸ்டர் பிளான் ஒன்று செய்தியாகி வினியோகஸ்தர்களை மகிழ்வித்திருக்கிறது.
பொதுவாக சினிமா வியாபாரத்தில் படத் தயாரிப்பாளருக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியே படத்தை விற்பார்கள். எந்த ஒரு நடிகரும் கூட தங்கள் கடந்த படத்தை புதிய படத்துக்கு அதிக விலை வைத்து விற்பதையே பெருமையாகக் கொள்வார்கள்.
அப்படி விஜய்யின் கடந்த படமான ‘பிகில்’ படத்தில் சுமார் 80 கோடி தயாரிப்பாளருக்கு லாபமாகக் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது. அந்த வகையில் இப்போது ‘மாஸ்டர்’ படத்தை 90 கோடிக்கு மேல் விற்றிருக்கலாம். இதில் இன்னொரு சிறப்பம்சமாக விஜய் சேதுபதியும் இருப்பதால் இந்தத் தொகை நியாயமானதே.
ஆனால், அப்படி விற்றால் வினியோகஸ்தர்களின் லாபம் குறைந்துவிடும் என்று கணக்கிட்டு தமிழ்நாடு விற்பனை வெறும் 65 கோடி என்ற அளவில் முடித்துக் கொண்டிருக்கிறார்களாம். இதைக் கேள்விப்பட்ட விஜய் கோபித்துக் கொள்ளாமல் இந்த செயலைப் பாராட்டியிருக்கிறார்.
வழக்கமாக தயாரிப்பாளரின் லாபத்துக்காக மாஸ்டர் பிளான் செய்யும் படத்துறையில் வினியோகஸ்தரின் லாபத்தைக் கணக்கில் வைத்து மாஸ்டர் பிளான் நடந்திருப்பதில் வினியோகஸ்தர்கள் மகிழ்ச்சியை சொல்லவே வேண்டியதில்லை.
கலக்கட்டும் ‘மாஸ்டர்’ வசூல்..!