July 27, 2024
  • July 27, 2024
Breaking News
May 19, 2023

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் திரைப்பட விமர்சனம்

By 0 155 Views

தன்னுடைய அடையாளம் திரில்லர் படம்தான் என்று இரண்டு மாதங்கள் முன்பு நிரூபித்த இயக்குனர் தயாள் பத்மநாபன் அதற்குள் இன்னொரு த்ரில்லருடன் நம்மை மிரட்ட வந்திருக்கிறார்.

ஆனால் கடந்த முறை போல் தியேட்டர்களில் இந்தப் படத்தை வெளியிடாமல் ஓடிடியில் வெளியிட்டு இருக்கிறார்.

தலைப்பில் உள்ள மாருதி நகர் காவல் நிலையத்தைச் சுற்றியே கதை நடக்கிறது.

போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் தன்னுடைய காதலரான மஹத் கொல்லப்பட்டதை அறிகிறார்.

ஒரு குழந்தை கடத்தப்படுவதை நேரில் பார்க்கும் மஹத் மாருதி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருக்கும் அமித் பார்கவிடம் புகார் செய்ய, அதன் பின்னணியில் இருக்கும் தாதாவான சுப்பிரமணியம் சிவாவுடன் இன்ஸ்பெக்டர் பார்கவும் கூட்டாளியாக இருக்கவே, சம்பவத்தை நேரில் பார்த்த காரணத்திற்காக மஹத் கொல்லப்படுகிறார்.

மஹத் கொலைக்குக் காரணமான அந்த இன்ஸ்பெக்டரையும் தாதாவையும் பழிவாங்க பிற நண்பர்களுடன் சேர்ந்து முயற்சிக்கிறார் வர்லட்சுமி. அதன் முடிவு என்ன ஆனது என்பதே கதை

மஹத் சிறிது நேரமே வந்தாலும் அவர் நடித்த கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கிறது.

அவரது காதலியாகவும் காவல்துறை அதிகாரியாகவும் வரும் வரலட்சுமி தன் பாத்திரத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிடுக்குடன் நடித்திருக்கிறார்.

அவருடைய நண்பர்களாக சந்தோஷ் பிரதாப், யாசர் அராஃபத், விவேக் ராஜகோபாலன் நடித்துள்ளனர். இதில் சந்தோஷ் பிரதாப் மட்டுமே கவனம் பெறுகிறார்.

பாதிப் படத்தில் உயர் அதிகாரியாக அறிமுகமாகும் ஆரவ் விசாரணை செய்யும் காட்சிகளில் கம்பீரமான உடல்மொழியை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.

சேகர் சந்துருவின் ஒளிப்பதிவும், மணிகாந்த் கத்ரியின் பின்னணி இசையும் ஓகே.

படம் பரபரப்புடன் நகர்ந்தாலும் அங்கங்கே தெரியும் லாஜிக் ஓட்டைகள் படத்தின் மீதான நம்பகத்தன்மையை சற்று குறைக்கிறது.

அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இது சினிமாதான் என்ற அளவில் பார்க்கும்போது ஓடிடிக்கு மிகச் சரியான நியாயம் சேர்க்கும் படமாக இருக்கும் இந்த மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்.