June 20, 2024
  • June 20, 2024
Breaking News
September 15, 2023

மார்க் ஆண்டனி திரைப்பட விமர்சனம்

By 0 135 Views

கொஞ்ச காலத்துக்கு முன்னால் சயின்ஸ் பிக்ஷன் எனப்படும் அறிவியல் புனைவுப் படங்கள் தமிழில் எடுத்தால் எடுபடாது – புரியாது என்றொரு கருத்து இருந்தது. ஆனால் தொடர்ந்து டைம் டிராவல், டைம் லூப், ஜாம்பி, மல்டி யுனிவர்ஸ் என்றெல்லாம் அறிவியல் புனைவுப் படங்கள் வெளிவந்து தமிழ் ரசிகர்களை இப்படிப் படங்களைப் பார்க்கத் தயார் படுத்தி விட்டது என்று சொல்லலாம்.

இந்த மார்க் ஆண்டனியும் சயின்ஸ் பிக்ஷன் வகையறா படம்தான். டைம் டிராவல் என்று இல்லாமல் ‘டைம் கால்’ என்று வேண்டுமானால் இதைச் சொல்ல முடியும். 

70களில் வாழ்ந்த விஞ்ஞானி செல்வராகவன் கடந்த காலத்துக்குப் பேசும் ஒரு டெலிபோனைக் கண்டுபிடிக்கிறார். அதை வைத்து கால் ஊனமான தன் மனைவியை சரியாக்கவும், அவள் விரும்பியபடியே ஆசிரியை ஆக்கவும் அவரால் முடிகிறது. இந்த போனை வைத்து பல அற்புதங்கள் நிகழ்த்த முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது அவர் கொல்லப்படுகிறார்.

20 வருடங்கள் கழிய, அவர் காரில் வைத்திருக்கும் அந்த டைம் கால் போன், கார் மெக்கானிக்காக இருக்கும் விஷால் வசம் கிடைக்க, கடந்த காலத்துக்குப் பேசி  அப்பாவுக்கு ஆதரவான  வக்கீல் நிழல்கள் ரவியை இறப்பிலிருந்து காப்பாற்றுகிறார்.

அதுவரை தன் அப்பா மிக மோசமானவர், அம்மாவைக் கொன்றவர் என்று நினைத்துக் கொண்டிருந்த விஷாலுக்கு நிழல்கள் ரவி மூலம் அவர் எவ்வளவு நல்லவர் என்று தெரிய வர, தன்னை எடுத்து வளர்த்த அப்பாவின் உயிர் நண்பர் எஸ்.ஜே.சூர்யாதான் எல்லா குழப்பங்களுக்கும் காரணம் என்று புரிந்து கொள்கிறார்.

இந்தப் படத்தில் காமெடியே விஷாலுக்கு அப்பாவாக விஷால் இருப்பதும், எஸ்.ஜே.சூர்யாவின் மகன் எஸ்.ஜே .சூர்யாவாக இருப்பதும் தான். 

மூத்த எஸ்.ஜே.சூர்யாவும், விஷாலும் நண்பர்களாக இருக்க, அவர்களுக்குப் பிறக்கும் விஷாலும், எஸ்.ஜே.சூர்யாவும் கூட நண்பர்களாகவே இருக்கிறார்கள்.

கெட்டவராக நினைத்த தன் அப்பா நல்லவராக மாறிய நேரத்தில் நல்லவராக நினைத்த தன் வளர்ப்பு அப்பா எஸ்.ஜே.சூர்யா கெட்டவராக மாறிப் போக, நல்ல அப்பாவை டைம் கால் போட்டு கூப்பிட நினைக்கிறார் அப்பாவியான இளைய விஷால்.

அதன் மூலம் தொடரும் கதையில் கார் மெக்கானிக்கான இளைய விஷால் ரவுடியாகவும், ரவுடியாக இருந்த எஸ்.ஜே.சூர்யா கார் மெக்கானிக்காகவும் இருக்கிறார்கள்.

டைம் கால் போனைப் பற்றி தெரிந்து கொள்ளும் இப்போதைய இளைய எஸ்.ஜே.சூர்யா இறந்து போன தன் அப்பாவை உயிர்ப்பிக்க அந்த போனைக் களவாடுகிறார்.

இந்தக் களேபரங்களின் ஒட்டுமொத்தக் கலவைதான் இந்தப் படத்தின் கதை.

அப்பாவித்தனமாக தெரிய வேண்டும் என்பதற்காக மீசை தாடி எல்லாவற்றையும் வழித்துக் கொண்டு வரும் இளைய விஷால் எல்கேஜி குழந்தை அளவுக்கு அப்பாவித்தனமாக நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக வரும் ரவுடி விஷால் உணர்ச்சிபூர்வமாக இருக்கிறார்.

ஆனால் கடைசியில் டைம் கால் மூலம் மீண்டு வரும் மொட்டை விஷால்தான் மாஸ். விஜய் பாணியில் தலையை தலையை ஆட்டிக்கொண்டு அவர் போடும் அனகோண்டா துப்பாக்கி சண்டையை ரசிக்க முடிகிறது.

ஆனால் பத்து லட்ச ரூபாய் சம்பளத்துக்கு 10 கோடிக்கு நடிக்க நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யாவால்தான் முடியும். அப்பா எஸ்.ஜே.சூர்யா 16 அடி பாய்ந்தால், மகன் எஸ்.ஜே.சூர்யா 32 அடி பாய, பதிலுக்கு அப்பா 64 அடி பாய ஒரே அதகளம்தான்.

அதுவும் ஜொள்ளரான அப்பா எஸ்.ஜே.சூர்யா தன் இளைய பிராயத்தில் சிலுக்கு சுமிதாவைக் கண்டு ஒரு பஸ்சுக்குள் ஆடும் ஆட்டம் மகா லந்து.

இந்த நால்வருமே படம் முழுதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்க, ஆந்திர சுனிலுக்கு வில்லன் போன்ற ஒரு பாத்திரம் கொடுக்கப்பட, அதை அவர் நிறைவாக செய்திருக்கிறார்.

நாயகியாக வரும் ரிது வர்மா, கதைக்குள் பட்டும் படாமலும் படம் முழுவதும் வருகிறார்.

காமெடிக்காக இணைக்கப்பட்டிருக்கும் ரெடின் கிங்ஸ்லி இதில் சதா வம்பளந்து கொண்டே இருக்கிறாரே தவிர, எந்த இடத்திலும் சிரிக்க வைக்கவில்லை.

முதல் பாதி மெதுவாக நகர்ந்தாலும் இந்தக் குழப்பமான கதையைப் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.

அதைப் புரிய வைத்து விட்ட காரணத்தால் இரண்டாவது பாதி பரபரப்பாக நகர்கிறது.

கடந்த படங்களில் வெற்றியை ருசிக்காமல் இருந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இந்த படம் வெற்றிப் படமாக அமையும்.

படத்தின் பலம் ஒரு குழப்பமான சயின்ஸ் பிக்ஷன் கதையைத் தெளிவாக சொல்லி இருப்பது. பலவீனம் என்று பார்த்தால் எல்லோரும் படத்தில் கத்திக் கொண்டே இருக்கிறார்கள். பற்றாக்குறைக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும் தன் பங்குக்கு கேப் விடாமல் அடித்து நகர்த்தி இருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் அபிநந்தன் ராமானுஜத்துக்கும், படத்தொகுப்பாளர் விஜய் வேலுக்குட்டிக்கும்தான் அதிகபட்ச வேலை என்று சொல்லலாம். எழுபதுகளில் நடக்கும் காட்சிகள், 90களில் நடக்கும் காட்சிகள் என்று வித்தியாசப்படுத்தி, அடுத்தடுத்து முன்பின் காலக்கட்ட காட்சிகள் வந்தாலும் அதை நயமாகத் தைத்திருப்பதில் இவர்கள் பங்கு மகத்தானது.

அதேபோல் ஆடை வடிவமைப்பாளர், சிகை அலங்காரக் கலைஞர், கலை இயக்குனர் எல்லோருக்குமே பெண்டு நிமிரும் அளவுக்கு வேலை இருந்திருக்கிறது.

பிரம்மாண்டக் காட்சிகளை அதி பிரம்மாண்டமாக்க பணத்தைத் தண்ணீராக செலவழித்து இருக்கிறார்கள்.

இத்தனை உழைப்புக்கும் மக்கள் நல்ல ரிசல்ட் தருவார்கள் என்று நம்பலாம்.

மார்க் ஆண்டனி – அக்மார்க் கமர்ஷியல்..!