April 25, 2024
  • April 25, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • ஜல்லிக்கட்டு படமெடுத்ததற்கு 100 கோடி நஷ்டஈடு கேட்ட பீட்டா
August 5, 2019

ஜல்லிக்கட்டு படமெடுத்ததற்கு 100 கோடி நஷ்டஈடு கேட்ட பீட்டா

By 0 694 Views
Director MS Raju

Director MS Raju

2017ல் மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம் ‘மெரினா புரட்சி’ என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது.

நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்கியுளார். யூடியூப் ‘புட் சட்னி’ புகழ் ராஜ்மோகன், மெரினா புரட்சியில் பங்கெடுத்த நவீன், சுருதி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் படத்தொகுப்பு செய்துள்ளார். அல்ருஃபியான் இசையமைத்துள்ளார். இந்தப்படம் தணிக்கை அதிகாரிகளால் சான்றிதழ் வழங்க மறுக்கப்பட்டு, ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பப்பட்டு, பின் நீதிமன்ற கதவுகளை தட்டி ஒரு வழியாக சென்சார் (U) சான்றிதழ் பெற்றுள்ளது.. இந்தநிலையில் இந்த மெரினா புரட்சியில் கலந்துகொண்ட இளைஞர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நிகழ்வு நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நடிகர் பொன்வண்ணன், இயக்குனர் வசந்தபாலன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், எழுத்தாளர் லட்சுமி சரவணகுமார், பத்திரிகை விமர்சகர்கள் கேபிள் சங்கர், ஆர்.எஸ்.அந்தணன், சமூக ஆர்வலர்கள் சரவணா ராஜேந்திரன், அருள்தாஸ், இந்தப்படத்தை வெளியிடும் ஜேசு.சுந்தரமாறன், தமிழியம் தலைவர் மா.சோ.விக்டர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

படத்தின் இயக்குனர் எம்எஸ் ராஜு பேசும்போது, “இந்தப் படத்தில் போராட்டத்தில் கலந்து கொண்ட எல்லோருடைய உணர்வுகளும் அவர்களது பங்களிப்பும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.. இந்தப் படத்தை எடுத்து சென்சார் சான்றிதழ் வழங்குவதற்கு நான் பட்ட போராட்டம் ஒரு வகை என்றால் இந்த விழாவை நடத்துவதற்கு அதைவிட இன்னும் போராடவேண்டியிருந்தது.

இந்த நிலையில் இன்று ஜல்லிக்கட்டு விசாரணை கமிஷன் என்னையும் என் மனைவியையும் இந்த படத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நாங்கள் காட்டியிருக்கும் விஷயங்களுக்கு கைவசம் வைத்திருக்கும் ஆதாரங்களுடன் எங்களை ஆஜராக சொல்லி சம்மன் அனுப்பியுள்ளது.

இன்னொரு பக்கம் இந்த படத்தில் பீட்டா பற்றி நாங்கள் கூறியுள்ளதற்காக எங்கள் மீது 100 கோடி ரூபாய் கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்கிறது பீட்டா நிறுவனம். நானும் மற்ற இயக்குனர்கள் போல் கமர்சியலாக ஒரு படத்தை இயக்கிவிட்டு போய் இருக்கலாம் என்கிற எண்ணத்தை தான் இவையெல்லாம் ஏற்படுத்துகின்றன.

இந்த மெரினா புரட்சி ஆவணப்படுத்தப்பட வேண்டும் என நினைப்பது தவறா..? “உனக்கேன் இந்த வேண்டாத வேலை..?” என்று பலரும் கேட்கின்றனர். இந்தப் போராட்டத்தை ஆவணப்படுத்தும் முயற்சியில் யாருமே இறங்கவில்லை.. என்னைக் குறை சொல்பவர்கள் யாராவது ஒருவர் இதை செய்திருந்தால், நான் இந்த படத்தை எடுத்திருக்கவே மாட்டேன்.

போராட்டத்தின் பின்னணி என்ன என்று புலனாய்வு செய்து அதில் மறைந்துள்ள உண்மைகளையும் சேர்த்துதான் இந்த படத்தை உருவாக்கி உள்ளேன். அதனாலேயே இந்தப் படத்தை வெளியிட விடாமல் முடியாமல் இவ்வளவு எதிர்ப்புகளை சந்தித்து வருகிறேன். இந்த படத்தை உலகமெங்கும் திரு ஜேசு சுந்தரமாறன் வெளியிட முன் வந்ததற்கு, இப்படிப்பட்ட ஒரு மாபெரும் போராட்டம் வருங்கால சந்ததியினருக்கு தெரியாமல் போய்விட கூடாது என்கிற தமிழ் உணர்வு தான் காரணம்..

உலகின் பல நாடுகளில் இந்த படத்தை வெளியிட முடிந்த எங்களால் இந்தியாவில் தமிழகத்தில் இந்த படத்தை வெளியிடுவதற்கு இவ்வளவு போராட்டம் நடத்த வேண்டியிருக்கிறது” என்றார்