எம்.டி.ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக், ஆஷா, பவர் ஸ்டார், ஜனனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ’மரிஜுவானா’. தேர்ட் ஐ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள்.
இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் 51 காட்சிகளை நீக்க வேண்டும். அல்லது ‘ஏ’ சான்றிதழ் கொடுக்க முடியும் எனக் கூறியுள்ளனர். ஆனால், படக்குழுவினரோ அவ்வளவு காட்சிகளை நீக்கினால் கதைக்களமே போய்விடும். நீங்கள் ‘ஏ’ சான்றிதழே கொடுங்கள்..! என்று கூறியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் ஆனந்த் கூறுகையில், “இன்றைய இளைஞர்களில் பலர் போதைக்கு அடிமையாகி தீய வழிகளுக்குச் செல்கிறார்கள். இதற்குக் காரணம்என்ன என்பதைச் சொல்லும் படம் ’மரிஜுவானா’. உண்மையை அப்படியே சொல்லியிருக்கிறோம். ஆகையால் தணிக்கை அதிகாரிகள் “படத்தின் கருத்து நன்றாக இருக்கிறது. ஆனால், 51 கட் கொடுக்க வேண்டியுள்ளதே..!’ என்றார்கள். எவ்வளவோ எடுத்துரைத்தும் கேட்கவில்லை.
படத்தின் காட்சிகளைத் தூக்கினால், கதைக்களமே போய்விடும் என்பதால் ‘ஏ’ சான்றிதழ் வாங்கிவிட்டோம். இளைஞர்களுக்கான படம் என்பதால் அவர்கள் பார்த்தாலே போதுமானது..!” என்றார்.
மேலும் படம் குறித்து கேட்ட போது, “மரிஜுவானா என்றால் ‘கஞ்சா’ என்று அர்த்தம். ஆனால், படத்தில் ‘கஞ்சா’ எந்தக் காட்சியிலும் இடம் பெறாது. இலையையும் சாணத்தையும் வைத்துதான் காட்சிப் படுத்தினோம். ஒருவன் போதை பழக்கத்தில் இறங்குவதால் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்து விடும் என்பதெல்லாம் ஓவர் என்பது பல போதையாளர்களின் எண்ணம்.
தன் போதையும் குடியும் எப்போதும் தன் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே இவர்கள் கருதுகிறார்கள். ஆனால், போதை இவர்களை மயக்கி, வீழ்த்தி சாலைக்கு இழுத்து வந்து விடுகிறது. அதன் பின் அந்தக் குடும்பம் என்ன ஆகிறது…? போன்ற பல கேள்விகளைப் போதை பின்னணி கதையாக உருவாக்கி இருக்கிறேன். இளைஞர்களுக்கான படமாக மட்டுமில்லாமல், பெற்றோர்களுக்கான விழிப்புணர்வும் கொண்ட படம் இது” என்றார்.
மரிஜுவானா பட இசை வெளியீடு இன்று சென்னை காமராஜ் அரங்கில் நடக்கிறது.