November 22, 2024
  • November 22, 2024
Breaking News
August 21, 2018

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன விமர்சனம்

By 0 1144 Views

‘யு டியூப்’களிலும், ‘வாட்ஸ் ஆப்’ குரூப்புகளிலும் நாம் அன்றாடம் பார்த்து பதைபதைக்கும் சங்கிலிப் பறிப்புகளின் பின்னணியும், அதற்கான கடுமையான சட்டங்கள் வேண்டும் என்று ஓங்கி ஒலிக்கும் குரலும்தான் இந்தப்படம்.

இயக்குநர் ராகேஷின் இந்த முயற்சிக்கான பாராட்டுடனேயே ஆரம்பிக்கலாம்.

சங்கிலிப் பறிப்புச் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறும் தலைநகரில் அவர்களிடமிருந்தே அந்த நகைகளை அபகரிக்கும் ஹீரோ நிமிர்ந்து உட்கார வைக்கிறார். ஆனால், அதைத் தொடர்ந்து அவரும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்து சங்கிலிகளைக் குறிவைக்க, அது ஏன் என்கிற சஸ்பென்ஸ்தான் மீதிக்கதை.

நாயகனாக திலகர் படத்தில் ஹீரோ ஆன ‘துருவா’. முதல் படத்தை நினைவுபடுத்தாமல் இந்தப்படத்தில் பொருந்தியுருப்பதே அவருக்கு வெற்றிதான். ஆக்‌ஷன், அடிதடி தாண்டி ஒரு அன்பான மகனாகவும் அடையாளம் தெரிகிறார் அவர். பிளேஷ்பேக் தெரியும்வரை வில்லனாகத் தெரிபவர் அதற்குப்பின் ஹீரோவாகத் தெரிவதற்கும் நம்பகமாக இருக்கிறார்.

படத்தின் பின்பாதியில் வந்தாலும் அதிகம் கவர்கிறார் துருவாவின் அம்மாவாக வரும் சரண்யா பொன்வண்ணன். இந்த சுயநல அம்மா தன் பையனுக்குப் பெண் பார்ப்பது சுவாரஸ்யமானது.

தொடக்கத்தில் ‘ஐஸ்வர்யா தத்தா’வே ஹீரோயின் என்று நம்மை நினைக்க வைத்து கதையில் ஒரு திருப்பம் கொடுத்து ‘அஞ்சனா பிரேம்’ அந்தப் பட்டத்தைத் தட்டிப்போக வைத்திருக்கிறார் இயக்குநர். அஞ்சனாவும் மிச்சம் வைக்காமல் அதில் பொருந்தியிருக்கிறார். ஆனால், அந்த பிளாஷ்பேக் தெரிந்தும் ஐஸ்வர்யாவுக்கு எந்த ஏமாற்றமும் இல்லை என்பது நமக்கு ஏமாற்றம்தான்.

இவர்கள் தவிர ராதாரவி, மைம் கோபி, அருள்தாஸ், ராம்ஸ் என்று வரும் எல்லா முகங்களுமே பயமுறுத்துகின்றன.

பெண்களிடம் பறிக்கப்படும் நகைகள் எப்படி கைமாற்றப்பட்டு எப்படி உருக்கப்பட்டு எப்படி மீண்டும் நகைவியாபாரிகளிடமே போய்ச்சேருகின்றது என்ற வலைப்பின்னலைப் பார்க்கும்போது நாம் வாங்கும் நகைக்கடைகள் மீதே சந்தேகக்கண் வைக்கத் தோன்றுகிறது.

நகைப்பறிப்பின் பின்னணியை ஆராய்ந்து திரைக்கதை எழுதியிருப்பதில், இதன் பின்னணியில் இருப்பது நகைக்கடைக்காரர்கள்தான் என்று சொல்லியிருப்பது கற்பனையா அல்லது அதில் எவ்வளவு உண்மை என்று இயக்குநரிடம்தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால், நகைப்பறிப்பை வெறும் கொள்ளையாக மட்டும் எடுத்துக்கொள்ளாமல் அதை உயிர்ப்பறிப்பாகக் கருத வேண்டும் என்று போலீஸ் அதிகாரியாக வரும் ஜே.டி.சக்ரவர்த்தி சொல்லும்போது அதிலிருக்கும் நியாயத்தை உணரமுடிகிறது. படத்தில் சொல்லப்பட்டிருப்பதைப் போன்றே சம்பந்தப்பட்டவர்களை சுட்டுத் தள்ளினால் ஒழிய இந்த நகைப்பறிப்பும், அப்பாவிப் பெண்களின் உயிர்ப்பறிப்பும் குறைய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.

இதற்குமுன் ‘மெட்ரோ’ என்ற படம் இதேபோல் நகைப்பறிப்புத் திருடர்களின் பின்னணியை விளக்கியது. இப்போது இந்தப்படமும் அதே வழியில் பயணித்தாலும் இதுபோன்ற விழிப்புணர்வுப் படங்கள் அடிக்கடி வருவது அவசியம்தான்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவும், அச்சுவின் இசையும் பட்ஜெட்டுக்குத் தக்கவாறு பயணித்திருக்கின்றன.

மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – ஒரு நல்ல நோக்கம் கொண்ட படத்துக்கு எதற்காக பொருத்தமில்லாமல் இவ்வளவு நீளத்தில் ஒரு தலைப்பு..?