July 22, 2025
  • July 22, 2025
Breaking News
May 30, 2025

மனிதர்கள் திரைப்பட விமர்சனம்

By 0 111 Views

நாலு பேர் நாலு விதமாகப் பேசுவார்கள் என்று பொதுவாக மனிதர்களைப் பற்றி விமர்சனம் செய்வது உண்டு. அதை மெய்ப்பிக்கும் வகையில் பின்னப்பட்ட கதை இது. 

ஒரே இரவில் ஒரு காரில் பயணிக்கும் ஐந்து பேரின் மனநிலை எவ்வாறு மாறிக் கொண்டே செல்கிறது என்பதைப் படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குனர் இராம் இந்திரா.

ஆறு நண்பர்கள் ஓர் இரவில் ஒன்றாக சேர்ந்து மது அருந்தும் வேளையில், மோதல் ஏற்பட்டு அதில் ஒருவர் இறந்துவிட அவரை என்ன செய்வது என்று தெரியாமல் காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு பயணிக்கும் மீதி 5 பேரின் மன நிலைகள்தான் கதை.

அதை ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் ஜேனரில் கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.

அந்த ஐந்து பாத்திரங்களாக கபில் வேலவன், தக்ஷா, அர்ஜுன் தேவ் சரவணன், குணவந்தன், சாம்பசிவம் ஆகியோர் வருகிறார்கள். 

அது சரிதான். ஆனால் நடந்துவிட்ட ஒரு சம்பவத்தை நினைத்து சற்று நேரம் பதட்டமாக இருந்தால் சரி… அந்த இரவு நெடுக ஒவ்வொருவரும் அரற்றும் அரற்றே படம் முழுதும் நீடிக்கிறது.

ஒரே தளத்தில் ஒரே இடத்தில் பயணிக்கும் கதையில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் மட்டுமே எடுபடும் என்று இயக்குனர் நினைத்ததில் தவறில்லை. ஆனால் பதற்றத்தில் அழுகின்ற ஒரு பாத்திரம் சதா நேரமும் அழுது கொண்டே இருப்பதை நம்புவதற்கு முடியவில்லை.

காருக்குள்ளும் காருக்கு வெளியுமாக பயணப்பட்டு காரின் ஸ்பீடுக்கு கேமராவை ஓட்டி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் அஜய் ஆபிரஹாம் ஜார்ஜ். இரவின் இயல்பான ஒளியில் படமாக்கி இருக்கும் அவரது திறமை பாராட்டுக்குரியது. படத்தின் ஹைலைட், லைட்டுகளே இல்லாத ஒளிப்பதிவுதான்.

அனிலேஷ் எல்.மேத்யூவின் இசையும் காட்சிகளின் உணர்வுகளுக்கு ஏற்ப பயணப்பட்டு இருக்கிறது.

அனைத்து காட்சிகளும் ஒன்று போலவே இருக்க, படத்தொகுப்பாளர் தின்சாவுக்கும் இது சவாலான வேலைதான்.

படத்தின் கதை மாந்தர்களின் மனங்களில் பயணப்பட்டு கதையை எழுதி இயக்கியிருக்கும் இராம் இந்திரா, பார்வையாளர்களின் மனநிலையையும் கருத்தில் கொண்டு அதை மெருகேற்றி இருக்க வேண்டும்.

ஒரு குறும்படத்தை சற்று நீட்டி எடுத்தது போல் அமைந்திருக்கிறது இந்தப் புதிய முயற்சி. 

மனிதர்கள் – புனிதர்கள் அல்லர்..!

– வேணுஜி