April 29, 2024
  • April 29, 2024
Breaking News
July 23, 2022

மஹா திரைப்பட விமர்சனம்

By 0 608 Views

ஒரு முன்னணி ஹீரோ எவ்வளவு வயதானாலும் எத்தனை படங்களில் வேண்டுமானாலும் நடித்துக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு கதாநாயகி, கதாநாயகியாகவே வாழும் காலம் சினிமாவில் மிகக் குறைவுதான். இதில் விதிவிலக்காக சில கதாநாயகிகள் மட்டும் காலங்கள் போனாலும், களை இழக்காமல் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானாலும் கதாநாயகியாக பல இந்திய மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி இந்த மஹா படத்தின் மூலம் தன்னுடைய அரை சதத்தை நிறைவு செய்கிறார்.

தன்னுடைய ஐம்பதாவது படம் ஒரு மைல் கல்லாக இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதில் தப்பில்லை. அதற்கு ஏற்றார் போல் வழக்கமாக கதாநாயகியாக ஒரு ஹீரோவின் அரவணைப்பில் வராமல் கதாநாயகியை முதன்மைப்படுத்தும் ஒரு கதையைத் தேடி யூ.ஆர்.ஜமீல் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தைத் தேர்வு செய்து இருக்கிறார்.

கைப்பிடிக்கும் முன்னரே காதலன் ஒரு கட்டத்தில் என்ன ஆனார் என்பது மர்மமாக இருக்க, தன் ஆறு வயது பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் ஹன்சிகாவுக்கு அந்த குழந்தையையும் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் – அதன் விளைவாக அவர் எந்த அளவுக்குப் போவார் என்பதை இந்தப் படம் சொல்கிறது.

ஹன்சிகாவுக்காக இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்திருக்கிறார் என்பது படத்தின் சிறப்பு.

ஒரு விமான பைலட்டாக வானில் இருந்து இறங்கி வரும் சிம்பு தன் காதலி ஹன்சிகாவை அழைத்துக் கொண்டு காரில் வரும்போது ஒரு ரவுடி கும்பலால் பிரச்சனை ஏற்பட பரபரப்பான ஆக்ஷன் காட்சியில் அத்தனை பேரையும் அடித்துத் துவைக்கிறார் சிம்பு.

சிம்பு வரும் காட்சிகள் அனைத்துமே அற்புதமாக படமாக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக அவருக்கு எழுதப்பட்டிருக்கும் வசனம் அவருக்காக மட்டுமே எழுதப்பட்டதா அல்லது அவரே அதை எழுதிப் பேசினாரா என்கிற அளவில் அவரது வாழ்க்கையை முன்னிறுத்தியே அவை அமைந்திருக்கின்றன.

உதாரணத்துக்கு ” சரியான நேரத்துக்கு வந்துட்டியே..?” என்று சிம்புவை பார்த்து நண்பர் கேட்க, “சரியான நேரம்தான் நம்ம தேடி இதுவரைக்கும் வரல. இப்ப வந்து இருக்கு..!” என்கிறார் சிம்பு. அதேபோல்… “சில பெண்களை நான் கடந்து வந்திருக்கிறேன். அவங்களைப் பிரியும் போதெல்லாம் அவ்வளவு அழுதும் இருக்கேன். நான் உண்மையானவனா இருக்கிறதுதான் அத்தனை பிரச்சினைகளுக்கும் காரணம்..!” என்று ஹன்சிகாவிடம் சிம்பு பேசும்போது அது அவரது சொந்த வாழ்க்கையை சொல்வது போலவே இருக்கிறது.

இது இப்படி இருக்க… அங்கே கட் பண்ணி இன்னொரு காலகட்டத்திற்கு வந்தால் சிறுமிகளை கடத்தி கொடூரமாக கற்பழித்து கொல்லும் ஒரு சைக்கோ கொலைகாரனை அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர்.

சிம்பு இல்லாத ஹன்சிகாவின் வாழ்க்கையின் இன்னொரு பகுதிக்கு வந்தால் அவர் தனது பெண் குழந்தையுடன் அன்பான ஒரு வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார். இப்போது வில்லன் ஹன்சிகாவின் குழந்தையை குறிவைத்து கடத்த அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் பரபரப்பான த்ரில்லராக விரிகிறது.

தன்னுடைய ஐம்பதாவது படம் தன் நடிப்புக்கு தீனி போடுவதாக இருக்க வேண்டும் என்று ஹன்சிகா விரும்பியது போலவே அவரது நடிப்புக்கு சரியான வாய்ப்பை தந்திருக்கிறது இந்த படத்தின் திரைக்கதை. தன் பெண் குழந்தை கடத்தப்பட்ட நிமிடத்தில் இருந்து அவர் படும் பாடு பெண்களை மட்டுமல்லாமல் ஆண்களையும் கரைய வைத்து விடும்.

போனில் மட்டுமே அவருடன் தொடர்பு கொள்ளும் வில்லன் ஹன்சிகாவை ஓட ஓட விரட்டி அவரிடமிருந்து பலன்களைப் பெறுவதை பார்த்தால் நமக்கே பரிதாபமாக விடுகிறது.

கிளைமாக்ஸ்… இதுவரை எந்த சினிமா கதாநாயகியும் போல் ஹீரோவை நம்பிக் கொண்டிருக்காமல் தன்னுடைய திறமையின் மூலமே வில்லனை கண்டுபிடித்து தீர்த்து கட்டுவதில் ஹன்சிகாவின் கேரியரை உயர்த்திப் பிடிக்கிறது.

இன்னும் சில காட்சிகளில் சிம்பு வந்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும் என்கிற அளவில் அவர் வரும் காட்சிகள் எல்லாம் கலகலப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கின்றன.

ஹன்சிகாவின் நடிப்புக்கு அடுத்தபடியாக அவரது பெண் குழந்தையாக வரும் மானஸ்வி கொட்டாச்சியின் நடிப்பை கண்டிப்பாக சொல்லியாக வேண்டும். அம்மா எழுந்து கொள்வதற்கு முன் தான் எழுந்து வீட்டில் அத்தனை வேலைகளையும் செய்யும் அந்தச் சுட்டிக் குழந்தையை பார்த்தால் அப்படியே எடுத்து உச்சி மோரத் தோன்றுகிறது. அப்படி ஒரு சின்னஞ்சிறு மலரை வில்லன் கடத்திக் கொண்டு போகும் போது நாம் அடிவயிற்றைப் பிசைகிறது.

அவள் எப்படியும் உயிருடன் மீண்டும் விடுவாள் என்று நாம் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அந்த விஷயத்தில் கொஞ்சம் கருணை காட்டி இருக்கலாம் இயக்குனர்.

இவர்களுக்கு அடுத்து ஸ்கோர் செய்திருப்பது இன்ஸ்பெக்டராக வரும் தம்பி ராமையா. அவர் கேரக்டரில் இருக்கும் சஸ்பென்ஸ் யாரும் எதிர்பாராதது.

இந்த வழக்கை எடுத்து நடத்தும் அசிஸ்டன்ட் கமிஷனராக ஸ்ரீகாந்த் வருகிறார். ஆனால் வழக்கமான சினிமா போலீசாகவே எதையும் கண்டுபிடிக்காமல் கடைசியில் எல்லாம் நடந்து முடிந்தவுடன் துப்பாக்கியை தூக்கிப் பிடித்துக் கொண்டு ஸ்பாட்டுக்கு வரும்போது ‘எப்படி இருந்த ஸ்ரீகாந்த் …?’ என்று ரோஜா கூட்டமாக நமது நினைவுகள் ஃப்ளாஷ் பேக் போகின்றன.

சைக்கோ வில்லனாக நடித்திருக்கும் சுஜித் சங்கருக்கு சரியான சதிகார முக வெட்டு. போதை மருந்தை எடுத்துக்கொண்டு அவர் செய்யும் அராஜ செயல்களை பார்க்கும் போது நமது ரத்தம் சூடாகிறது.

பள்ளியில் இருந்து குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பும் போது பல விதமான பாதுகாப்பு முறைகள் இன்றைய காலகட்டத்தில் கையாளப்படுகின்றன.

அப்படியெல்லாம் இல்லாமல் சர்வ சாதாரணமாக ஒரு குழந்தை கடத்தலுக்கு துணை போகும் அந்தப் பள்ளியை நினைத்தால் கோபமாக வருகிறது. கள்ளக்குறிச்சி பள்ளி நிலவரம் இன்றைய காலகட்டத்தில் பற்றி எரிந்து கொண்டிருக்க இப்படி ஒரு பள்ளி மெத்தனமாக இருந்தால் சும்மா விட்டு விடுவார்களா தெரியவில்லை.

அதுவும் பள்ளிப் பணியாளர்களே குழந்தையை கடத்த உதவுவதாக வருவது ஏற்புடையதாக இல்லை. குறைந்தபட்சம் அவர்களைக் கூட கைது செய்ய முடியாத காவல்துறையை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் புத்துணர்ச்சி தருகின்றன. பின்னணி இசையிலும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது. படத்தின் ஆகப்பெரிய பலம் மதியின் ஒளிப்பதிவுதான். சிம்பு ஹன்சிகா காதல் காட்சிகள் வைரமாக ஜொலிக்கின்றன.

மஹா – ராட்சசர்கள் ஜாக்கிரதை..!