வில்லனாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் காமெடியும் செய்ய வேண்டும் என்கிற பாத்திரத்தில் சென்ற தலைமுறைக்கு அசோகன் இருந்தார். அந்த இடத்தை இப்போது நிரப்பிக் கொண்டிருப்பவர் ஆனந்தராஜ்.
அவரை எத்தனை மிரட்டலாகவும் காட்டலாம் அதே நேரத்தில் அவரைக்காட்டி சிரிக்கவும் வைக்கலாம். இந்த விஷயமே இயக்குனர் ஏ. எஸ்.முகுந்தனை அவரை நோக்கித் திருப்பி விட்டிருக்கிறது.
சென்னையின் முக்கிய ரவுடியாக இருக்கும் ஆனந்தராஜ், ஏரியா ஏரியாவுக்கு ஆட்களைப் பிரித்து அவர்களுக்கு அசைன்மென்ட் கொடுத்து, அமௌன்ட்டும் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தாதாயிசத்தை ஒரு ப்ரொபஷனல் கம்பெனியாகவே நடத்தி வருவதால் படத்துக்கு இந்தத் தலைப்பு.
ஆனால் செய்யும் குற்றங்களில் குற்றம் செய்த யாரும் மாட்ட மாட்டார்கள். அதில் போலீசில் சரணடைவதற்கு என்று இன்னொரு குரூப்பையும் கையில் வைத்திருக்கிறார் அவர்.
இதனால் போலீசுக்கு பெரும் தலைவலி ஏற்பட அவரை எப்படியும் ஒழித்தே தீருவது என்று களம் இறங்குகிறார் காவல் அதிகாரி சம்யுக்தா. இன்னொரு பக்கம் அவர் செய்யும் பாவமும் தலைக்கு மேலே கத்தியாக தொங்கிக் கொண்டிருக்கிறது.
இந்தப் பிரச்சினைகளிலிருந்து அவர் தப்பினாரா அல்லது தண்டனை பெற்றாரா என்பதுதான் கதை. கிளைமாக்சில் யாரும் எதிர்பார்க்காத ஒரு திருப்பமும் உண்டு.
ஆனந்தராஜை விட்டால் இந்தப் பாத்திரத்திற்கு தமிழில் ஆளே இல்லை எனலாம். செய்வது தவறான தொழிலாக இருந்தாலும் துரோகத்தை மட்டும் தாங்கிக் கொள்ள முடியாமல் இருப்பது அவருடைய குணம்.
அதேபோல் எல்லா குற்றங்களையும் செய்பவர் ஆயுதக் கடத்தல் என்று வரும்போது மட்டும் என் நாட்டுக்கு எதிராக எதையும் செய்ய மாட்டேன் என்று மறுப்பது ஆச்சரியமான கேரக்டரைசேஷன்.
நாயகி சக்யுக்தாவுக்கு, காவல்துறை அதிகாரியாக பாத்திரத்தை போலவே, அவர் அணிந்து வரும் காக்கிச்சட்டையும் நச்சென்று பொருந்துகிறது. ஆனால் என்ன ஒரு குறை… மிரட்டல் தொணியில் பேசாமல், ஹஸ்கி வாய்சிலேயே பேசிக் கொண்டிருக்கிறார் அவர்.
ஆனந்தராஜின் முதல் மனைவியாக நடித்திருக்கும் தீபா, இரண்டாவது மனைவியாக வரும் சசிலயா இருவரும் கும்மென்று இருந்தும் அவருக்கு உருப்படியான வாரிசு பிறக்காதது வருத்தம் அளிக்கவே செய்கிறது.
பிறந்த ஒரு மகனும் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சிச்சுவேஷன் சாங்கில் அசத்திக் கொண்டிருப்பதை ரசிக்கலாம்.
ஆனந்தராஜின் மகளாக வரும் ஆராத்யாவும் அழகிலும் நடிப்பிலும் கவர்கிறார்.
ஆனந்தராஜை போட்டுத்தள்ள சபதம் எடுத்து ஒவ்வொரு முறையும் சொதப்பும் கேரக்டரில் முனீஸ்காந்த் ராமதாஸ் நம்மை சிரிக்க வைக்க முயல்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் எதுவும் குறையில்லை. எல்லாமே நிறையத்தான் இருக்கிறது.
பளிச்சென்று படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் அசோக்ராஜ்
வி.சுகந்தி அண்ணாதுரை எழுதி இருக்கும் இந்தக் கதை முடிவில் வன்முறைப் பாதையில் செல்வோரை ஒரு கணம் யோசிக்க வைக்கும்.
அதை முடிந்த வரையில் சிதைக்காமல் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஏ.எஸ்.முகுந்தன், கமர்சியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கிறார்.
லாஜிக்கை எல்லாம் ஓரம் கட்டி விட்டால் படத்தை ரசிக்கலாம்.
மதறாஸ் மாஃபியா கம்பெனி – பாவத்தின் சம்பளம்..!
– வேணுஜி