November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • மாநாடு வெற்றி விழாவுக்கு வராத சிம்புவுக்கு எஸ் ஏ சி சூடு
December 21, 2021

மாநாடு வெற்றி விழாவுக்கு வராத சிம்புவுக்கு எஸ் ஏ சி சூடு

By 0 458 Views

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, “சமீபகாலமாக ஓடிடி வந்துவிட்டது, கொரோனா வந்துவிட்டது, மழை வந்தால் கூட்டம் வராது என்றெல்லாம் பலவிதமான எதிர்மறை வார்த்தைகளாகவே பேசப்பட்டு வருகின்றது.

ஆனால் இவை அனைத்தையும் மாநாடு திரைப்படத்தின் வெற்றி தகர்த்து விட்டது. நல்ல படம் வந்தால் மக்கள் குடையை பிடித்துக்கொண்டு கூட கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்பதை இந்தப்படம் நிரூபித்துவிட்டது..!” என்றார்.

திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் பேசும்போது,

“இந்த படத்தின் வெற்றி விழாவை கொண்டாட வேண்டும் என தயாரிப்பாளர் முடிவு செய்தபோது, சற்று பொறுங்கள்.. 25-வது நாளில் வெற்றி விழாவை நடத்துங்கள் என்று கேட்டுக்கொண்டேன்..

காரணம் இப்போது பல படங்களுக்கு இரண்டு மூன்று நாட்களிலேயே சக்சஸ் மீட் கொண்டாடுகிறார்கள். ஆனால் அது உண்மையான வெற்றி அல்ல.. தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருமே அந்தப்படத்தால் பயன்பெற்று, அவர்களும் சேர்ந்து கலந்து கொள்ளும் இதுபோன்ற வெற்றி விழாக்கள் தான் ஒரு படத்தின் உண்மையான வெற்றி விழா..!” என்றார்.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா பேசும்போது,

“இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்னவென்றால் பார்த்தான்.. புடிச்சது.. ரிப்பீட்டு.. பார்த்தான்.. புரியல.. ரிப்பீட்டு என்று சொல்லலாம்.. பிடித்தவர்கள் திரும்ப திரும்பப் பார்த்தார்கள்.. முதல் தடவை படம் பார்த்து புரியாதவர்கள் இரண்டாம் முறை அது என்ன என்று புரிந்து கொள்வதற்காக திரும்பவும் பார்த்தார்கள்.

அதேபோல இயக்குனர் வெங்கட்பிரபு 80 நாட்களில் இந்த படத்தை எடுத்து தருவதாக கூறி, 68 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்து தயாரிப்பாளருக்கு பக்கபலமாக இருந்துள்ளார்.. அதுமட்டுமல்ல இந்த கோவிட் காலகட்டத்தில் தயாரிப்பாளரின் சுமையை குறைக்கும் விதமாக தனது சம்பளத்தில் 30 சதவீதத்தையும் விட்டுக் கொடுத்துள்ளார்..!” என்றார்.

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பேசும்போது, “சினிமாவிற்கு வந்து ஐம்பது வருடங்களாக நடித்து வருகிறேன்.. கிட்டத்தட்ட ஓய்வு பெறும் நிலையில் இருக்கும் இந்த சமயத்தில் தான், உனக்கு ரிட்டயர்மென்ட் இல்லை.. இன்னும் பதினைந்து வருடங்கள் நீ நீடிக்கலாம் என இந்த மாநாடு படம் எனக்கு புரோமோஷன் கொடுத்துள்ளது…!” என்றார்.

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது,

“சிம்புவுக்கு நீண்ட நாள் கழித்து அவரை மேலே தூக்கிக் கொண்டு வந்துள்ள படமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. அதேபோல எஸ்.ஜே.சூர்யாவிற்கும் இது முக்கியமான படமாக அமைந்துவிட்டது.. இந்த படத்தை இரண்டு முறை தியேட்டரில் பார்த்தேன்.. கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரியான ஒரு கதையை சின்ன குழந்தைகளுக்கு கூட புரிகிற வகையில் இயக்கியுள்ள வெங்கட் பிரபு தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ஜானரை அறிமுகப்படுத்தி உள்ளார்.

சிம்புவுக்கு இந்த படம் நிச்சயமாக ஒரு திருப்புமுனை படம் தான். சிம்புவை நம்பி சுரேஷ் காமாட்சி மிகப்பெரிய முதலீடு செய்து இந்த படத்தை தயாரித்துள்ளார். இவ்வளவு பெரிய வெற்றிபெற்ற இந்தப்படத்தின் நாயகன் சிம்பு இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. அவர் ஏதோ படப்பிடிப்பில் இருக்கிறார் என்று சொன்னார்கள்..

ஆனாலும் இந்த விழாவில் அவர் நிச்சயமாக கலந்து கொண்டிருக்க வேண்டும். வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த சமயத்தில் அந்த வெற்றி கிடைத்ததும் உடனே மாறிவிடக்கூடாது..!” என்று பேசினார்.

இயக்குனர் வெங்கட்பிரபு பேசும்போது,

“ இந்த படத்தோட கதைய முதல்ல டைம் லூப் இல்லாமல்தான் தயார் பண்ணி இருந்தேன்.. ஆனால் அந்த சமயத்தில் என்ஜிகே, சர்க்கார் போன்ற படங்கள் இதே அரசியல் பின்னணியில் வெளியானதால், அதன்பிறகுதான் டைம் லூப்புக்கு கதையை மாற்றினோம்.

இந்த படம் 68 நாட்களில் முடிவடைந்ததற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் தான். சிக்கலான இந்த கதையை எல்லோருமே எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக படத்தொகுப்பு செய்த பிரவீணுக்கு இரண்டாவது முறையாக தேசிய விருதை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டுமே இருந்தது அதில் மாஷா அல்லா என்கிற வார்த்தையை பயன்படுத்தி முதலில் அந்தப்பாடலை எழுதி படமாக்கியும் விட்டோம். அதன்பின் யுவன் சங்கர் ராஜாவும் அவர் மனைவியும் அந்த பாடலில் மாஷா அல்லா என்கிற வார்த்தைகளை பயன்படுத்தினால் அவ்வளவு சரியாக இருக்காது என கூறியதால் பாடலாசிரியர் மதன் கார்க்கி மெஹ்ருசைலா என்கிற புதிய வார்த்தையைக் கண்டுபிடித்து மாற்றி எழுதிக் கொடுத்தார்.

ஒரு காலத்துல என்னோட கம்பெனில படம் பண்ணுவதற்காக இயக்குனர் வாய்ப்பு கேட்டு வந்தார் சுரேஷ் காமாட்சி. இன்னைக்கு அவரோட கம்பெனிஇல நான் படம் இயக்கியிருக்கிறேன்.. அந்த அளவுக்கு அவர் வளர்ந்து விட்டார்!” என்று கூறினார். 

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது,

“இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே பக்கபலமாக இருந்தவர்கள் உத்தம்சிங் மற்றும் திருப்பூர் சுப்பிரமணியம் இருவரும் தான். இந்த படம் தொடங்கிய சமயத்தில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. சிம்புவுக்கும் எனக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் அவரை நான் எப்போதும் எங்கேயும் விட்டுக்கொடுக்க மாட்டேன். 

அதேபோல இந்த படத்தின் கதையைக் கேட்டதுமே, எஸ் ஜே சூர்யா இந்த படம் ஹிந்தியில் கூட நல்ல விலைக்குப் போகும்.. அதனால் எனக்கு சம்பளம் தவிர எக்ஸ்ட்ராவாக லாபத்தில் கொஞ்சம் சதவீதம் கொடுங்கள் என தமாஷாக கூறினார்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை இந்த படத்தை தாங்கி பிடித்தது. இளையராஜா சாருக்கு இசைஞானி என பெயர் வைத்துவிட்டு, இவருக்குத்தான் இளையராஜா என பெயர் வைத்திருக்க வேண்டும். இந்த படம் தாமதமானாலும் எல்லாமே பாசிட்டிவாக தான் அமைந்தது..!”என்று கூறினார்.