February 26, 2024
  • February 26, 2024
Breaking News
June 30, 2023

மாமன்னன் திரைப்பட விமர்சனம்

By 0 183 Views

“சமூக நீதியும், உரிமையும் விட்டுக் கொடுத்து வருவதல்ல…” என்ற கருத்தைக் கடத்த புனையப்பட்டிருக்கும் அரசியல் படம் இது.

மிகவும் முக்கியமான இந்தக் கருத்தைச் சரியாகக் கட்டமைத்திருக்கிறாரா இயக்குனர் மாரி செல்வராஜ் என்பதைப் பார்க்கலாம்.

சேலம் மாவட்டம் காசிபுரம் என்ற ரிசர்வ் தொகுதியில் ஆளும்கட்சி எம்.எல்.ஏ வாக இருக்கிறார் பட்டியல் இனத்தைச் சேர்ந்த (மாமன்னன்) வடிவேலு. அவரது மகன் அதிவீரனாக வரும் பட்டதாரியான உதயநிதி ஸ்டாலின், அடிவகை தற்காப்புக் கலை ஆசானாகவும், பன்றிகள் வளர்ப்பதில் ஆர்வமுள்ளவராகவும் வருகிறார்.

இன்னொரு பக்கம் அதே ஊரில் ஆதிக்கசாதியைச் சேர்ந்த பகத் பாசில், அதே ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளராக இருக்கிறார். தந்தையிடம் இருந்து, தான் பெற்ற பெருமையாகக் கருதும் அந்த ஆதிக்க மனோபாவத்தைத் தன் வாரிசுக்கும் விட்டுச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் அவர், அதற்காக எதையும் செய்யத் துணிந்தவராக இருக்கிறார். 

ஒரு எம்எல்ஏவாக இருந்தும் தாழ்த்தப்பட்டவராக இருக்கும் வடிவேலுவை தன் எதிரில் அமரக் கூட அனுமதிக்காதவராக இருக்கும் அவரிடம் தன் தந்தைக்கான மரியாதையைப் பெற்றுத் தரப் போராடும் உதயநிதியால் அது முடிந்ததா என்பதுதான் கதை.

உண்மையில் ஒரு செங்கல்லை வைத்துத் தன் தந்தையை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த நிஜ நாயகனான உதயநிதிக்கு இந்த நிழல் நாயகன் வேடம் சற்றே குறைவானதுதான். ஆனால் நம்பகமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.

டைட்டில் தன்னைத் தாங்கி இல்லை என்றபோதும், கிளைமாக்ஸ் வரை வடிவேலுவின் கதையாக இது இருந்தபோதும், நடிப்பதற்கான ஸ்கோப் வடிவேலுவுக்கும், தனக்கு எதிரியாக நடிக்கும் பகத் பாசிலுக்கும் தான் இருக்கிறது என்பது தெரிந்தும், முக்கியமாக திராவிடக் கட்சிகளின் சமூக நீதி குறித்த ஆற்றாமையை இந்தப்படம் முன் வைத்தபோதும்… எதையும் மாற்றத்துக்கு உள்ளாக்காமல் இதில் நடிக்க ஒத்துக்கொண்ட உதய நிதியின் பெருந்தன்மை… பாத்திரத்திற்காக பன்றிகளுடன் புழங்கிய சகிப்புத் தன்மை ஆகியற்றைப் பாராட்டியே ஆக வேண்டும்.

தன் முன்னால் வடிவேலு அமர்வதை விரும்பாத பகத் பாசில், “அவர் உக்கார மாட்டாரு. அப்ப இருந்தே அப்படித்தான். யார் சொன்னாலும் கேக்க மாட்டாரு…” என்று எகத்தாளமாகச் சொல்ல, “நீங்க சொன்னீங்களா..?” என்று அழுத்தமாகக் கேட்கிறாரே..? அங்கே இருக்கிறது ‘உதய்ணா’ வின் அற்புத நடிப்பும்.

“மா…மன்னா… மாமா… மன்னா…” என்றெல்லாம் சகட்டுமேனிக்கு ஏகடியம் செய்யப்பட்ட நகைச்சுவைப் புயலான வடிவேலுவை உண்மையிலேயே ஒரு மாமன்னனாக சித்தரித்திருக்கும் இந்தப் பாத்திரம் அவருக்கு மாரி செல்வராஜ் கொடுத்திருக்கும் லைஃப் டைம் கேரக்டர் என்று சொல்ல வேண்டும். 

அவர் ஒன்றும் நடிக்கத் தெரியாதவர் அல்ல… நகைச்சுவையிலேயே அதிக உயரம் தொட்டு விட்ட பிறகு இந்த உருக்கமான பாத்திரம் எல்லாம் நொறுக்குத் தீனி போன்றதுதான் – இயல்பாக நடித்துக் கடந்திருக்கிறார்.

அவரது உடல், மொழி மற்றும் உடல் மொழி எல்லாவற்றிலும் நகைச்சுவையே ஓடிக் கொண்டிருக்க, அது தெரிந்து விடாமல் நடித்து விட வேண்டும் என்கிற உள்ளுணர்வை அவருக்கும், அவரைப் பார்த்ததுமே சிரித்துப் பழகிவிட்ட நாம் எங்கேயாவது சிரித்து விடப் போகிறோம் என்ற எச்சரிக்கையை நமக்கும் கடத்தியிருக்கும் இந்த மாமன்னன் பாத்திரம், புதிய அனுபவத்தைத் தந்து விட்டது.

அதேபோல்தான் பகத் பாசிலும். மலையாளத்தில் இதைவிட வெவ்வேறு பாத்திரங்களில் பரிமளித்தவருக்கு இந்த வேடம் ஒரு பாப்கார்ன் சாப்பிடுவது போலத் தான். ஆனால், அதையும் கூட சர்வ கவனத்துடன் மசாலாப்பொடி கலந்து நடித்து மிரட்டி நமக்கு ஊட்டி இருக்கிறார் மனிதர்.

அது என்னமோ அவர் வரும் படங்களில் எல்லாம் அவரது சட்டையை உருவி விடுகிறார்கள். 

ஹீரோவின் பிளாஷ்பேக் கேட்டு அவரைக் காதலிப்பதில் இயல்பான ஹீரோயினாகத்தான் வருகிறார் என்றாலும் கவனிக்க வைக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

பட்டியலினச் சிறுவர்கள் கிணற்றுக்குள் குளித்துக் கொண்டிருக்க, சாதி வெறியர்கள் அவர்களைக் கல்லால் அடித்துக் கொல்லும் காட்சி கலங்க வைக்கிறது. ஆனால் இந்தக் காட்சியை மிக நீ…..ளமாக காட்சிப் படுத்தியிருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

அதேபோல் இடைவேளைக்கு முன்னர் வடிவேலுவை பகத் பாசில் முன்னிலையில் உட்கார வைக்க உதயநிதி போராடும் காட்சியும் அழுத்தமான உணர்ச்சியைப் பொங்க வைக்கக்கூடியது.

ஆனால், அந்த அழுத்தம் அங்கேயே படம் முடிந்து விடுவதைப் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதற்குப் பின்னான படம் வெறும் புட்டேஜுக்கு மட்டுமே என்றாகி விடுகிறது.

இவையெல்லாம் படத்தின் நேர்மறையான பக்கங்கள் என்றால் எதிர்மறையான விஷயங்களையும் தொட்டுச் சொல்லத்தானே வேண்டும்..?

ராசிபுரம் என்பதை காசிபுரம் என்று மாற்றியதில் தொடங்கி, ஒரு தலைவி செய்த புரட்சிகரமான காரியத்தை இன்னொரு தலைவர் செய்தது போல் மாரி செல்வராஜ் கட்டமைத்திருப்பது ஏன்..? இந்தக் காட்சி கண்டிப்பாக தலைவியின் புகழையே பறை சாற்றும் என்பதில் சந்தேகமில்லை..!

இதே வரலாற்றுக் காலப் பிழை இதற்கு முந்தைய அவரது கர்ணன் படத்திலும் இருந்தது என்றிருக்க, ஆவணங்களை மாற்றி அவர் சொல்லும் கருத்துகள் எப்படி நம்பகமானவையாக ஏற்றுக் கொள்ளப்படும்..?

இதையெல்லாம் மாற்றிக் கொண்டு அறத்தின் வழி பயணப்பட்டால் மாரி செல்வராஜ் எதிர்காலத்தில் முதல்நிலை இயக்குனராக இருப்பார்.

எந்தக் கருத்தாக இருந்தாலும் அதை மட்டுமே எதிர்பார்த்து எந்த ரசிகனும் தியேட்டர் பக்கம் வருவது இல்லை. அதைத் தாண்டி ஒரு படமாக பொதுப்புத்தி கொண்ட ரசிகன் ரசிக்கும் அளவில் தன் படங்கள் இருக்கிறதா என்ற கேள்வியையும் அவர் தன் படைப்புகளின் முன்னால் வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில் மாமன்னனை இன்னும் விறுவிறுப்பான படமாக எடுத்திருக்க முடியும். 

என்னதான் ஏ.ஆர்.ரஹ்மான் இசை என்றாலும் அதைக் கொண்டு போய்ச் சேர்த்தது ரெட் ஜெயன்ட் என்ற பெரும் நிறுவனம். அப்படியும் படத்தின் உணர்ச்சியை இசை கடத்தியதாக முழுமையாகக் கொள்ள முடியவில்லை. கர்ணனின் உணர்வையும், உணர்ச்சியையும் இசைப்புயல் இதில் முற்றாக நிறைவேற்ற முடியவில்லை என்பதே உண்மை.

(அம்பேத்கரின் ஆழந்த சிந்தனை அவரது குரலிலேயே ஒலிக்க படம் முடிவடையும் இடத்தில் தொடர்பே இல்லாமல் ‘ஜிகு ஜிகு ரயிலே…’ என்று ரஹ்மான் பாடுவது ஒட்டவே இல்லையே..?)

இதற்கு மாற்றாக சந்தோஷ் நாராயணன், புதியவரான டென்மா போன்றவர்களைப் பயன்படுத்தி இருந்தால் இன்னும் உணர்ச்சி மேம்பட்டிருக்கும்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு இயல்புக்கு நெருக்கமாக இருக்கிறது. 

மாரி செல்வராஜ் படங்களில் இதுவரை இல்லாத அளவில் மாமன்னன் படத்தில் உணரப்படும் ஏகப்பட்ட லாஜிக் மீறல்களில் சில…

பத்து வருடங்களாக ஒரு தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் வடிவேலு அந்தத் தொகுதிக்குள் குடியிருக்காமல் எங்கோ ஒரு நடுக்காட்டில் தனியாக வீடு கட்டிக்கொண்டு ஏன் இருக்க வேண்டும்..?

கோவில் கொடைக்குக் கூடப் பன்றியை பலியிடுவதை விரும்பாத உதயநிதி ஸ்டாலின் அந்தப் பன்றிகளை வளர்த்து என்னதான் செய்கிறார்..?

எந்த தற்காப்புக் கலை ஆசானாவது மாணவர்களிடம் மோதலைத் தோற்றுவிக்கும் போக்கில் “நீயும் திருப்பி அவனை அடித்தால் அவன் பயப்படுவான்…” என்று தவறாகப் பாடம் எடுப்பாரா..?

தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் தனி ஒரு மனிதனாக இருந்து ஆளும் கட்சி எம்எல்ஏவாக பத்து வருஷம் ஆட்சி அதிகாரத்தைக் கையில் ஏந்திய நிலையிலும் அதில் கிடைக்காத தங்கள் பாதுகாப்பு ஒரு (கள்ளத்) துப்பாக்கியிலும், கத்தியிலும் கிடைத்துவிடும் என்று அவற்றைப் பதுக்கி வைத்திருக்கும் வடிவேலுவின் மனநிலை என்னவாக இருக்கிறது..?

(முதல்வரிடம் இருந்து போன் கால் வராமல் இருந்திருந்தால், பகத்தின் ஆட்கள் அவரது வீடு புகும் நிலையில் அப்பாவும், மகனுமாக ஏழெட்டுப் பேரைக் கொன்று கொலைப்பழியை அல்லவா மேற்கொண்டிருப்பார்கள்..?)

கல்வியும், அதிகாரமுமே ஒரு இனத்துக்கு உயர்வைக் கொண்டு வரும் என்கிற அளவில் உதயநிதி கல்வியையும், வடிவேலு அதிகாரத்தையும் கையில் கொண்டிருந்தும், அவர்களைக் கையில் கள்ளத் துப்பாக்கியையும், கத்தியையும் ஏந்த வைத்திருக்கும் மாரி செல்வராஜ் சொல்லும் அரசியல்தான் என்ன..?

ஆளுங்கட்சி எம்எல்ஏவின் வீடு தாக்கப்படும் நிலையிலும் பாதுகாவலுக்காக போலீஸ் அவர் வீட்டுப் பக்கம் வரமாட்டார்களா..?

நல்லவரான வடிவேலு பாடும் பாடல்கள் எல்லாம் எம்ஜிஆர் பாடல்களாக இருக்க, எதிரியான பகத் பாசிலின் கொட்டடியில் ஒலிக்கும் பாடல் சிவாஜி படப் பாடலாக இருக்க… இது என்ன குறியீடு..?

தேர்தல் பிரச்சாரத்தில் வடிவேலுவை எந்தத் தெருக்குள்ளும் அனுமதிக்காத மக்கள் அவர் ஊருக்கு நல்லது செய்ததாக சொல்லும் வீடியோவைப் பார்த்து மட்டும் திருந்தி விடுவார்களா..?

இவற்றையெல்லாம் சரி செய்திருந்தால் மாமன்னன், எந்தக் காலத்திலும் கொண்டாடப்படும் மாபெரும் வெற்றிப் படமாக மகுடம் சூட்டி இருப்பதை எந்த சக்தியாலும் தடுத்திருக்க முடியாது.

இனி வரும் படங்களில் இப்படியான குறைகளை மாரி செல்வராஜ் தவிர்ப்பார் என்று நம்புவோம்.

மாமன்னன் – மாரி செல்வராஜ்  வரிசையிலேயே மூன்றாவது படம் மற்றும் இடம்..!

– வேணுஜி