October 10, 2024
  • October 10, 2024
Breaking News
September 27, 2023

மால் திரைப்பட விமர்சனம்

By 0 353 Views

ஆஹா தமிழ் ஒடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் இது.

நான்கு கிளைகளில் விரியும் தொடர்பில்லாத கதாபாத்திரங்களை ஒரு நேர்க்கோட்டில் சந்திக்க வைக்கும் ஒரு சம்பவத்தை பரபரப்பாக சொல்வதுதான் ‘மால்’ திரைப்படத்தின் களம்.

ஒருபக்கம் தஞ்சையில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருக்கும் சோழர் சிலையை மீட்பதற்கான முயற்சியில் காவல்துறை தனிப்படை ஈடுபடுகிறது.

இன்னொரு பக்கம், சிலை கடத்தல்காரர் சாய் கார்த்திக்கிடம் இருந்து சோழர் சிலையை கைப்பற்ற ஒரு கும்பல் திட்டம் போடுகிறது.

மூன்றாவதாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் கஜராஜ் வீட்டில் திருடுவதற்கு அஸ்ரப் மற்றும் தினேஷ் குமரன் திட்டம் போடுகிறார்கள்.

நான்காவது கிளையாக தன்னுடன் பணியாற்றும் ஜெய்யிடம் காதலை சொல்ல விஜே பப்பு முயற்சிக்கிறார்.

இவர்கள் அனைவரும் சோழர் சிலையால் ஒரு வட்டத்திற்குள் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட, இவர்கள் எப்படிப்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள், அதில் இருந்து மீண்டார்களா, இல்லையா, சோழர் சிலை என்னவானது என்கிற கதையை அறிமுக இயக்குனர் தினேஷ் குமரன், திறமையாகக் கையாண்டிருக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ், சாய் கார்த்திக்கின் மனைவியாக நடித்திருக்கும் கெளரி நந்தா மட்டுமே தெரிந்த முகங்களாக இருக்க, மற்ற நடிகர்கள் அனைவருமே புதுமுகங்களாக இருந்தாலும், பொருத்தமான தேர்வாக இருப்பதே பாதி வெற்றி உறுதி செய்து விடுகிறது.

திருடர்களாக நடித்திருக்கும் அஸ்ரப் மற்றும் தினேஷ் கார்த்திக் சீரியஸான இந்த படத்தில் அவ்வபோது நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.

கஜராஜின் அனுபவ நடிப்பு படத்திற்கு  கைகொடுத்திருக்கிறது. வில்லனாக வரும் புதுமுகம் சாய் கார்த்திக் கவனம் ஈர்க்கிறார். அவருக்கு இந்தப் படம் பிற படங்களில் வாய்ப்புகளையும் பெற்றுத் தரும். அவர் மனைவியாக நடித்திருக்கும் நடிகை கெளரி நந்தாவுக்கு பெரிய வாய்ப்பு இல்லை.

ஒளிப்பதிவாளர் சிவராஜ்.ஆர், படத்தொகுப்பையும் கவனித்திருப்பது சிறப்பு. இரண்டையுமே சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக படத்தில் பெரும்பான்மையாக வரும் இரவு நேரக் காட்சிகளை மிக நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார்.

பத்மயன் சிவானந்தத்தின் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. 

குறைந்த பட்ஜெட்டில் சில பாத்திரங்களை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு எந்த குழப்பமும் இல்லாமல் நேர்த்தியான படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் தினேஷ் குமரன் பாராட்டுக்குரியவர்.

இந்த படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி இருந்தாலே வெற்றியைப் பெற்றிருக்கும்.

மால் – பெரிய பட்ஜெட் படங்களை விட மேல்..!