November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘அரணம்’
April 5, 2023

பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘அரணம்’

By 0 334 Views

பிரபல பாடலாசிரியர் பிரியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ஹாரர், கிரைம், திரில்லர் படம் ” அரணம் “தமிழ்த்திரைக்கூடம் திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ” அரணம் ” என்று பெயரிட்டுள்ளனர்.

மஸ்காரா போட்டு மயக்குறியே, மக்காயலா மக்காயலா, வேலா வேலா வேலாயுதம், உசுமுலாரசே உசுமுலாரசே, செக்ஸி லேடி கிட்ட வாடி, மனசுக்குள் புது மழை விழுகிறதே போன்ற ஹிட் பாடல்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய பிரபல பாடலாசிரியர் பிரியன் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

கதாநாயகியாக வர்ஷா நடித்துள்ளார். ராட்டினம், எட்டுத்திக்கும் மதயானை, சத்ரு போன்ற திரைப்படங்களின் கதைநாயகன் லகுபரன் மற்றும் கீர்த்தனா ஆகியோரும் நடித்துள்ளனர்.

நித்தின்.K.ராஜ், E.J.நௌசத் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

இசை – சாஜன் மாதவ்
படத்தொகுப்பு – PK
பாடல்கள் – பிரியன், முருகானந்தம், பாலா, சஹானா
கலை – பழனிவேல்
ஸ்டண்ட் – Rugger ராம்குமார்
நடனம் – ராம்சிவா, ஸ்ரீசெல்வி
மக்கள் தொடர்பு – மணவை புவன்
தயாரிப்பு – தமிழ்த்திரைக்கூடம்
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரியன்.

படம் பற்றி இயக்குநர் பிரியன் பகிர்ந்தவை…

வாழ்க்கையின் அதிசயமே அடுத்த நிமிடம் நடக்கும் நாம் எதிர்பாரா ஆச்சர்யங்களும் அதிர்ச்சிகளும்தான். அப்படி ஒரு மனிதன் வாழ்வில் நடக்கும் சில சம்பவங்கள் அதை எதிர்கொள்கையில் அவன் காணும் பெரும் நிகழ்வுகள் என யூகிக்கவே இயலாத வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் கதை இது.

ஒரு பெரிய ஜமீன் வீட்டில் வாழ்ந்து வந்த ஜமீன்தாரின் ஊதாரி மகன் திடீரென இறந்துவிட.. அவன் பேயாக இருப்பதாக நம்பப்படும் நிலையில் அந்த ஜமீன்தாரும் அதே வீட்டில் இறந்துவிட.. அவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட கதிர் தன் புதுமனைவியுடன் அந்த ஜமீன் வீட்டுக்குக் குடியேறுகிறான். மகிழ்ச்சியாய் அவர்கள் வாழத்துவங்குகையில் பங்களாவை சுற்றிலும் சில அமானுஷ்யங்கள் நடக்கிறன. அவை என்ன? எதிர்பாரா மர்மங்கள் நிறைந்த அவற்றை கதிர் தன் தம்பியின் துணையோடு எப்படிக் கண்டுபிடித்துத் தன் குடும்பத்தைக் காக்கிறான் என்பதை ஹாரர், கிரைம், திரில்லர் வடிவில் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

படத்தின் முதல்பாதி முழுக்க ஒருதிசையிலும், இரண்டாம் பாதி முழுக்க twists and turns ஆகவும் இதுவரை கண்டிரா ஒரு வழக்கமுடைத்த பிரத்தியேக திரைக்கதை அனுபவத்தை அரணம் நிச்சயமாக வழங்கும்.

திரைப்படப் பாடலாசிரியராக இதுவரை 500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறேன். இப்போது ஒரு நடிகனாக, இயக்குநராக உங்கள் முன் வந்திருக்கிறேன். பாடல்களுக்கு கொடுத்த அதே அன்பையும், ஆதரவையும் இப்பொழுதும் எப்பொழுதும் தர வேண்டுகிறேன். நல்லன நடக்கும். நன்றி..!