October 10, 2024
  • October 10, 2024
Breaking News
September 20, 2024

லப்பர் பந்து திரைப்பட விமர்சனம்

By 0 18 Views

லகான்’ காலத்திலிருந்து நாம் கிரிக்கெட் விளையாட்டைப் பல படங்கலில் பார்த்து விட்டோம். இது இன்னும் ஒரு கிரிக்கெட் விளையாட்டுப் படம் என்றாலும், பிரச்சினை கிரிக்கெட்டில் வெல்வது அல்ல என்ற அளவில் வித்தியாசத்தைக் காட்டி இருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.

இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை. அதை லப்பர் பந்தின் விலையின் மூலமாகவே சொல்லிவிடும் இயக்குனரின் சாமர்த்தியம் பாராட்ட வைக்கிறது. 

முதல் காலகட்டத்தில் இளைஞராக இருக்கும் அட்டகத்தி தினேஷ் லோக்கல் கிரிக்கெட்டில் எந்த அணிக்கும் ஆடும்… ஆனால், நட்சத்திர வீரராக இருக்கிறார். விஜயகாந்த் பாட்டை போட்டுவிட்டு கால்சட்டையைக் கணுக்காலுக்கு மேல்  மடித்து விட்டுக் கொண்டு மட்டையைச் சுழற்றினால் போதும்… அந்த அணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. 

அதே காலகட்டத்தில் இதுபோன்ற அணிகளில் ஆடி விட வேண்டும் என்று விரும்பும் திறமையான பள்ளிச் சிறுவன் ஒருவன், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த ஒரே காரணத்துக்காக அணிகளில் சேர்த்துக் கொள்ளப்படாமல் இருக்கிறான்.

காலம் உருண்டோட இப்போது பள்ளிச் சிறுவன் இளைஞனாகி தினேஷ் போன்றே இன்னொரு ஏரியாவில் நட்சத்திர வீரனாக இருக்கிறான். அவர்தான் ஹரிஷ் கல்யாண்.. பள்ளிச் சிறுவனாக இருந்த போதே தினேஷின் ஆட்டத்தில் குறை கண்டு அவர் விக்கெட்டை எளிதாக வீழ்த்தி விட முடியும் என்று நம்புபவர். 

அதன்படியே இப்போது இருவரும் ஒரு களத்தில் மோத நேர, யாராலும் வீழ்த்த முடியாத தினேஷின் விக்கெட்டை அப்பளமாக ஹரிஷ் நொறுக்க இருவருக்கும் ஈகோ போர் ஆரம்பித்து விடுகிறது.

இந்த ஈகோ போரில் யார் ஜெயித்தார்கள் என்பதுவும்கூட கதை அல்ல. 

தன்னளவில் ஒரு ஹீரோவாக குறிப்பிடத் தகுந்த படங்களில் தன் திறமையை அடையாளமாகப் பொருத்தி விடும் தினேஷுக்கு அதைப் போன்றே ஒரு பாத்திரம் இந்த படத்தில். முதல் பந்தை கடவுளுக்கும் ஆட்டத்தின் கடைசி பந்தை எதிர் அணிக்கு விக்கெட் ஆகவும் தரும் வழக்கம் உள்ள அவர் இளைஞனாக இருக்கும் போதும் நடுத்தர வயதுள்ளவராக வரும்போதும் ஏற்படும் மாற்றத்தை உடல் மொழியின் மூலமும் சின்ன சின்ன வித்தியாசங்கள் மூலமும் காட்டி அசர அடிக்கிறார்.

அப்படிப்பட்ட வீரர் காதல் மனைவிக்கு பயந்தவராக வருவது இன்னொரு சுவாரசியம்.

இப்படி வந்தால்… ஹரிஷ் கல்யாண் தன் வீட்டின் வெளிப்புறத்தைக் கூட ஐபிஎல் அணிக்குத் தாரை வார்த்து விடும் கிரிக்கெட் வெறியராக வரும் அவர் ஒரு பக்கம் ஈகோ கிளாஷ் இருந்தாலும் இன்னொரு பக்கம்… களத்தில் இறங்கி விட்டால் கருமமே கண்ணாக காரியத்தில் சாதிக்கும் அளவில் கவர்கிறார்.

பிடிவாதக்கார தினேஷின் தங்கையை அவர் அறியாமல் ஹரிஷ் கல்யாண் காதலிக்க… அந்தக் காதல் ஒன்று சேர்ந்ததா என்பதும் கூட கதை அல்ல.

ஆனாலும் மேற்படி கிரிக்கெட் போட்டியின் வெற்றி, ஹீரோக்களுக்கிடையேயான ஈகோ பிரச்சனை, காதல் இவையெல்லாம்தான் கதையை தாங்கிச் செல்லும் காரணிகளாக இருக்கின்றன. 

படத்தில் தினேஷின் அண்டர் பிளேவைத் தாண்டி கவனிக்க வைப்பது அவர் மனைவியாக வரும் சுவாசிகாவின் நடிப்பு தான். கிரிக்கெட் சத்ருவாக இருக்கும் அவர் கணவன் எங்கே விளையாடச் சென்றாலும் அங்கே போய், விளையாடும் பிட்ச்சை நாசப்படுத்தி விடுவது டெரரிசம்..!

காதலனை கண்டிப்பதில் அம்மாவுக்குத் தப்பாக மகளாக நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் மிரட்டி இருக்கிறார். முக்கிய கிரிக்கெட் போட்டி இருந்தாலும் தன் சொல்லுக்கு தன் காதலன் கட்டுப்படுவான் என்பதை தன் அம்மாவிடம் நிரூபித்து பெருமிதத்தோடு பார்க்கும் பார்வையில் சஞ்சனா… அம்மா சுவாசிகாவை மிஞ்சினா..!

தினேஷின் நண்பராக நடித்திருக்கும் ஜென்சன் திவாகரும், ஹரிஷ் கல்யாணின் நண்பராக வரும் பால சரவணனும் மைதானத்திற்கு ஓரத்தில் மோதிக்கொள்ளும் காட்சிகள் கிரிக்கெட்டை விட சுவாரசியமாக இருக்கின்றன. 

தினேஷின் அம்மாவாக வரும் கீதா கைலாசம்,  ஹரிஷ் கல்யாணின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி மற்றும் டி.எஸ்.கே உள்ளிட்டவர்களும் இயக்குனரின் திறமையால் அவரவர் பாத்திரங்களில் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவாகட்டும், இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையாகட்டும் படத்துடன் இணைந்து பயணித்துப் பரவசப்படுத்தி இருக்கின்றன.

படத்தின் இயக்குனர் தெளிவாக இருந்து விட்டாலே எல்லா கிராஃப்ட் கலைஞர்களும் தங்கள் பணிகளில் பரிமளித்து விடுவார்கள். 

அப்படி தமிழரசன் பச்சமுத்து என்ன சொல்லப் பகிறோம் எப்படி சொல்ல போகிறோம் என்பதில் மிகத் தெளிவாக திட்டமிட்டு வேலை செய்திருப்பது இந்தப் பட வெற்றிக்கு அடி கோலி விடுகிறது.

சமீபகாலத்தில் சாதிய விஷயங்களை தொட்டுப் படம் எடுப்பவர்கள் பெரும்பாலும் துருத்தலாக அந்த விஷயத்தை கையாளுகிறார்கள். அதுவே பிற இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. 

அதுவே இந்தப் படத்திலும் அடிநாதமாக இருந்தாலும் அந்த விஷயத்தை துருத்தலாக இல்லாமல் சொல்லி இருப்பது அப்படிச் சொல்லத் தெரியாதவர்களுக்கான பாடம்.

லப்பர் பந்து – வெற்றிக் கோடு..!

– வேணுஜி