July 15, 2024
  • July 15, 2024
Breaking News
July 27, 2023

லவ் திரைப்பட விமர்சனம்

By 0 288 Views

படம் தொடங்கியது முதல் எண்டு கார்டு வரை இந்தப் படத்துக்கு ‘ லவ் ‘ என்று ஏன் தலைப்பு வைத்தார்கள் என்பது புரியவில்லை. யாரும் யாரையும் லவ்வவே இல்லை.

அப்பாவின் பிசினஸ்ஸை கவனித்துக் கொள்ளும் கோடீஸ்வரி வாணி போஜன் சொந்தத் தொழில் செய்து தோற்றுப் போன பரத்தை நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் மூலம் திருமணம் செய்து கொள்கிறார். இருவரும் ‘ லவ் ‘ பண்ணவில்லை என்பதைக் குறித்துக் கொள்க.

இரண்டு பேரின் குடும்பங்கள் குறித்தோ நண்பர்கள் குறித்தோ எந்தவிதமான குறிப்பும் இல்லாமல் ஒரு பாடலில் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். ‘ஒரு வருடம் கழித்து’ என்று முன்னோக்கிப் போகிறது கதை.

அப்போதும் பரத் வேலையில்லாமல் வீட்டிலேயே இருக்க, செக்கப்புக்காக மருத்துவமனை போகும் வாணி போஜன் கர்ப்பம் தரித்திருப்பது உறுதி ஆகிறது. குழந்தை வேண்டாம் என்ற திட்டத்தில் இருக்கும் அவருக்கு இது மன உளைச்சலைத் தர, வீட்டுக்கு வந்து பார்த்தால் எந்நேரமும் வேலை இன்றி டிவி பார்த்துக் கொண்டிருக்கும் கணவனின் மேல் கோபம் வந்து, வாய் சண்டை முற்றிக் கைச்சண்டையாகி அது வாணி போஜனின் கொலையில் வந்து முடிகிறது.

அந்த நேரம் பார்த்து வீட்டின் காலிங் பெல் அடிக்க, பரத்தின் நண்பர் விவேக் பிரசன்னா வருகிறார். தன் மனைவியைப் பற்றி புலம்பியபடி அவளைக் கொல்ல முடியாமல், தான் தற்கொலை பண்ணும் முடிவில் இருப்பதாகக் கூறுகிறார் குடிபோதையில் இருக்கும் விவேக். 

பாத்ரூமில் மனைவியின் பிணத்தை மறைத்து வைத்துக் கொண்டு விவேக்கை சமாளித்துக் கொண்டிருக்கும் பரத்துக்கு இன்னொரு பிரச்சனை இன்னொரு நண்பன் டேனியல் ஆனி போப் வடிவில் வருகிறது.

இன்னொரு நண்பனின் மனைவியை பரத் வீட்டுக்கு அழைத்து வந்து தனியே பேச வேண்டும் என்று ஒரு பெட் ரூமுக்குள் போய் கதவை சாத்திக் கொள்கிறார் டேனியல். அங்கே அவரது மனைவியிடம் இருந்து போன் வர அதில் உடன் வந்த பெண்ணுக்கு மனத்தாங்கல் ஆகி அவள் கோபித்துக் கொண்டு வெளியேற… பரத்தின் நிலையைப் பார்த்து நமக்கு ரொம்பவே பரிதாபமாக ஆகிவிடுகிறது.

இந்நிலையில் மூன்றாவது நபராக வாணி போஜனின் அப்பா ராதாரவி வந்துவிட… இன்னும் கதையில் கிரிப் ஏறுகிறது.

அடுத்து ஒரு போலீஸ் வந்து காலிங் பெல் அடிப்பதோடு இடைவேளை.

ஏதோ சுவாரசியமான கதை இருப்பது போல் தானே தெரிகிறது..? ஆனால் அது எல்லாம் அப்படியே இடைவேளைக்குப் பின் தலைகீழாகி எப்படி எப்படியோ மாறி உல்டாவான கிளைமாக்ஸ் உடன் பட முடிகிறது.

பட ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஏகப்பட்ட லாஜிக் குறித்த கேள்விகள் எழுகின்றன.

ஒரு கோடீஸ்வரன் தன் மகளுக்கு இப்படியா வேலை இல்லாத ஒருவனை மணமுடித்து வைப்பார்? இருவரையும் பேச வைத்த பிறகுதான் ராதாரவிக்கே தெரியுமாம் பரத்துக்கு வேலை இல்லை என்பது – ரொம்ப போங்கான கற்பனை.

சரி… பேசச் சொன்ன அப்பாவே வேண்டாம் என்கிறாரே என்று விட்டுத் தொலைய வேண்டியதுதானே வாணி போஜன்..? அவர் பிடிவாதக் காரியாம். பரத்தான் வேண்டும் என்று அவரைக் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார் – அது ஏன் என்றும் புரியவில்லை.

பரத் வேலையில் செட்டில் ஆகும் வரை குழந்தை வேண்டாம் என்று முடிவு எடுக்கிறார்கள். அது என்ன ஆனது என்று தெரியவில்லை. ஒரே வருடத்தில் வாணி போஜன் கர்ப்பம் தரிக்கிறார்.

ராதாரவி திருமணப் பரிசாக கொடுத்த பிளாட்டைக் கூட வேண்டாம் என்று சொல்கிற அளவுக்கு சுயமரியாதைக்காரராக இருந்த பரத் பிறகு வீட்டில் டிவி பார்த்துக் கொண்டு செட்டிலாகி விடுவதும் பலம் இல்லாத திரைக் கதையைக் காட்டுகிறது.

ஆரம்பத்தில் இயல்பாக இருக்கும் பரத், ஒரே வருடத்தில் ஏன் அவ்வளவு கொடூரமாக மாறிப் போனார் என்பதற்கு எந்த வலுவான காரணங்களும் இல்லை.

கடைசியில் ஒரு திருப்பத்தோடு படம் முடிந்தாலும் அந்தத் திருப்பத்தில் ஒரு செய்தியோ, சுவாரசியமோ, ஏன் இப்படி நடந்தது என்கிற விவரணையோ எதுவுமே இல்லை.

பார்வைக்கு சித்தப்பா, பெரியப்பா போல் தெரியும் பரத், தன்னை நாயனாக நிறுவிக்கொள்ள இன்னும் கொஞ்சம் மெனக்கெட வேண்டி இருக்கிறது. நடிப்பிலும் வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பவராகவே இருக்கிறார்.

பார்வைக்கு பளிச்சென்று இருக்கும் வாணி போஜன் கேரக்டரைசேஷன் குறைபாட்டால் நடிப்பில் மிளிராமல் போனாலும் பேர் பாதிப் படத்தில் பிணமாகவே வந்து நடிக்காமல் நடிக்கிறார்.

வரவர குடிகாரன் வேடம் என்றாலே “கூப்பிடு விவேக் பிரசன்னாவை…” என்று ஆகிவிட்டது. அவரும் குடித்த மாதிரியே நடித்துவிட்டுப் போகிறார்.

டேனியல் ஆனி போப்பும் அப்படியே வசனங்களை டெலிவரி செய்துவிட்டுப் போகிறார்.

பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தைக் கூட்டி இருக்கிறது. ரோனி ரபேல் இசை ஓகே.

ஆறே ஆறு கேரக்டர்கள்… ஒரே ஒரு லொகேஷன்… என்று சுவாரஸ்யம் இல்லாத களத்தை வைத்துக்கொண்டு முதல் பாதியில் ஏதோ ஒரு கதையைச் சொல்ல முயலும் இயக்குனர் ஆர்.பி.பாலா மலையாளத்தில் இரவல் வாங்கிய இந்தக் கதையை அப்படியே எடுத்துத் தந்திருக்கிறார்.

நமக்கு எழும் கேள்விகள் எல்லாம் மூலப் படமான மலையாளப் படத்தைப் பார்க்கும் போது அவருக்கும் தோன்றியிருக்க வேண்டும் – அதையெல்லாம் சரி செய்திருக்கவும் வேண்டும்.

அதில் விட்ட கோட்டையால் திரைக்கதையில் தத்தளிக்கிறது படம்.

லவ் – கில்..!