May 4, 2024
  • May 4, 2024
Breaking News
July 29, 2023

எல்ஜிஎம் திரைப்பட விமர்சனம்

By 0 201 Views

எல் ஜி.எம் என்றால்..? ‘லெட்ஸ் கெட் மேரிட்..!’ அப்படி என்றால்… “நாம கல்யாணம் கட்டிக்கலாம்..!” என்பதுதான். தலைப்பில் இவ்வளவு காம்ப்ளிகேஷன் இருந்தாலும் கதை என்னவோ சிம்பிளான லைன்தான்.

ஐடி துறையில் வேலை பார்க்கும் அம்மா பிள்ளையான ஹரிஷ் கல்யாணும், இவானாவும் காதலர்களாக இருக்க, திருமணம் செய்து கொள்ள ஒரு கட்டத்தில் முடிவெடுக்கின்றனர். அப்போதுதான் இவானா ஒரு ஹீலியம் குண்டைத் தூக்கிப் போடுகிறார்.

அதாவது கல்யாணம் ஆன பின் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள தனியாகத்தான் வாழ வேண்டும் – ஹரிஷ் கல்யாணின் அம்மா தங்களுடன் இருக்கக் கூடாது என்ற கண்டிஷன்தான் அது.

ஹரிஷ் கல்யாணின் அம்மா நதியா. சிங்கிள் மதராக படாத பாடுபட்டு ஹரிஷ் கல்யாணை அவர் வளர்த்து ஆளாக்கி இருக்க, அம்மாவை விட்டுவிட்டு எப்படி வருவார் ஹரிஷ்..? இதனால் கல்யாணத்தில் தடை ஏற்படுகிறது.

பிறகு இவானாவின் ஐடியாப்படி இரு வீட்டாரும் ஒரு சுற்றுலா செல்லத் திட்டமிடுகின்றனர். அதன் மூலம் மாமியாரைப்  புரிந்து கொள்ள முடியும் என்பது இவானாவின் திட்டம். ஆனால் இந்த விஷயம் நதியாவுக்குத் தெரியாமல் நடக்க, தெரிந்த போது என்ன ஆனது… இந்த பிரச்சனை எங்கே போய் முடிந்தது..? என்பதை இயக்குனர் ரமேஷ் தமிழ்மணி ஜாலி ரைடாக சொல்ல முடிவெடுத்திருக்கிறார். முடிவெடுத்ததெல்லாம் சரி அதை முடிக்க முடிந்ததா என்பதுதான் கேள்வி.

திருமணம் செய்து கொள்ளும் எந்தப் பெண்ணும் மாமியார் மாமனார் உடன் வாழ சம்மதிப்பதே இல்லை என்ற இன்றைய நாட்டு நடப்பை பிரதானமாக எடுத்துக்கொண்டு கதையை வடிவமைத்திருக்கும் ரமேஷ் தமிழ்மணி, கே.பாக்கியராஜ் பாணியில் அதற்கு ஒரு சுவாரஸ்யமான சிறந்த திரைக்கதை அமைத்திருக்க வேண்டும். 

முதல் பாதியில் அதை ஈடு செய்திருப்பவர் இரண்டாவது பாதியில் அதைச் செய்யத் தவறி இருக்கிறார்.

இள வயது எஸ் .வி.சேகரின் முகச் சாயலில் தோற்றமளிக்கும் ஹரிஷ் கல்யாண் ஒரு நாயகனாக எப்படி நடிக்க வேண்டும் என்பதை நிச்சயம் கற்றுக் கொள்ள வேண்டும். அவுட் லுக்கில் ஒரு யூத் ஐகானாகத் தெரியும் அவர், நடிப்பில் ஓல்டு ஸ்கூல் மேடை நாடக பாணியிலேயே நடித்துக் கொண்டிருப்பது கண்டிப்பான ஒரு குறைதான்.

இவானா முதல் படத்தை விட இந்த தன் இரண்டாவது படத்தில் தோற்றத்திலும் நடிப்பிலும் அடுத்த சுற்றை எட்டிப் பிடித்து இருக்கிறார். 

உடன் நடிப்பவர்கள் எத்தனை பெரிய கில்லாடியாக இருந்தாலும் அவர்களுடன் மல்லாடி, தன் நடிப்பில் தூக்கிச் சாப்பிட்டு விடக்கூடிய நதியாவுக்கு இதில் சோளப் பொரி அளவுக்கு கூட நடிப்புக்கான வாய்ப்பு தரப்படவில்லை. ஆனாலும் முதல் பாதியை விட்டதைப் பின் பாதியில் ஈடுகட்டி நதியா ஆஜர் போட்டு விடுவது ஆறுதல்.

திரைக்கதை பஞ்சராகும் இடங்களில் எல்லாம் யோகி பாபுவும், ஆர்.ஜே.விஜய்யும் பேட்ச் அப் போட்டு வல்கனைசிங் செய்து வண்டி ஓட வகை செய்து விடுகிறார்கள்.

இயக்குனரே படத்துக்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் எல்லாம் பரவாயில்லை ரகம். எல்ஜிஎம்முக்கு பிஜிஎம் சரியாகப் பொருந்தி இருக்கிறது.

வெங்கட் பிரபு வி டிவி கணேஷ் என்று ஏகப்பட்ட தெரிந்த முகங்கள் படத்துக்குள் இருந்தும் இந்தப் படத்துக்கான யுஎஸ்பி என்பது மேற்படி சமாச்சாரங்கள் எதுவும் இல்லை.

நம்ம ‘தல ‘ தோனி இந்தப் படத்தை தயாரித்து இருப்பதுதான் இதன் ஹைலைட்டே. பாலிவுட் முதற்கொண்டு தோனி அழைத்தார் என்றால் அதனை சினிமா பிரபலங்களும் படமெடுக்கத் தயாராக இருக்க, தன் மனைவி தயாரித்திருக்கும் இந்தப் படத்தை தமிழில் தான் முதலில் தயாரிப்பேன் என்ற அவரது முடிவுக்கு தமிழ் ரசிகர்கள் தலை வணங்க வேண்டும்.

அதுதான் இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பைக் கூட்டி இருக்க, அவரது இந்த முதல் முயற்சியைக் கை கொடுத்து உற்சாகப்படுத்தி வெற்றி கொள்ளச் செய்ய வேண்டும்.

அதுவே தமிழில் படம் எடுத்த அவரது முயற்சிக்கு தமிழ் ரசிகர்கள் அவருக்குச் செய்யும் கைம்மாறாக இருக்கும்.

குடும்பத்தோடு எம்ஜிஎம் போக முடிவு எடுத்தால், கூடவே இந்த எல்ஜிஎம்மையும்  போய்ப் பார்த்து வாருங்களேன்.

எம்ஜிஎம் அனுபவத்துக்குக் குறைவில்லாமல் இருக்கும் இந்த எல்ஜிஎம்.

தோனியின் தமிழ்ப்பட முயற்சிக்கு ஒரு விசில் போடலாம்..!

 – வேணுஜி