இந்த சீசனில் வந்த அதி பயங்கரமான படம் என்கிற முன்னறிவிப்பு இந்த படத்தை மிகவும் எதிர்பார்க்க வைத்தது.
அமானுஷ்யம் கலந்த இந்த சஸ்பென்ஸ் திரில்லர் – ஹாரர் படத்தை ஆஸ்குட் பெர்கின்ஸ் எழுதி இயக்கி இருக்கிறார்.
இதில் மைக்கா மன்றோ மற்றும் நிக்கோலஸ் கேஜ் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். FBI – யில் புதிதாக பணிக்கு வரும் மைக்கா மன்றோ ஒரு சவாலான புலன் விசாரணையை ஏற்க நேர்கிறது.
அதன்படி புறநகர் பகுதிகளில் தன் குடும்பத்தை கொடூரமாகக் கொள்ளும் குடும்பத் தலைவர்கள் தானும் தற்கொலை செய்து கொள்ளும் வினோதமான நிகழ்ச்சி தொடர்ந்து நடந்து வர, அந்த கொடூர நிகழ்வுகளுக்கும் தனது வாழ்க்கைக்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதை உணர்கிறார் மைக்கா மன்றோ.
அறிவியல் தாண்டிய அமானுஷ்யம் அந்த கொலைகளுக்குப் பின்னணியில் இருக்க, அவரது அறிவுறுத்தலின் பேரில் இந்த கொலைகளுக்குக் காரணமாக அறியப்படும் நிக்கோலஸ் கேஜ் கைது செய்யப்படுகிறார்.
ஆனால் விசாரணையில் அவரும் தற்கொலை செய்து கொள்ள, அதற்குப் பின்னும் கொலைகள் நின்றபாடு இல்லை என்ற நிலையில் அடுத்து நடக்கும் காட்சிகள் நம்மை திகில் அடைய வைக்கின்றன.
சிறுவயதிலிருந்தே மனநலம் குன்றிய தாயால் வளர்க்கப்படும் மைக்கா மன்றோ தானும் ஒரு உளவியல் சிக்கலுடனேயே வளர்கிறார். வளர்ந்தும் கூட அவர் நடவடிக்கைகளில் பயமும் பதட்டமும் இருப்பதை தனது நடிப்பின் மூலம் அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் மன்றோ.
நிக்கோலஸ் கேஜ் இதில் ஏற்றிருக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பது அவர்தானா என்று சந்தேகமாகவே இருக்கிறது. அவரது சாயல் கொஞ்சமும் தெரியாத அளவில் அவருக்கு ப்ரோஸ்தட்டிக் மேக்கப் போடப்பட்டுள்ளது.
அந்த மேக்கப்புக்குள் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்கிற நிலையில் நிக்கோலஸ் கேஜிக்கு என்ன வேலை இருக்கிறது என்று தெரியவில்லை.
பிறந்தநாள் பரிசாக செய்யப்படும் ஒரு பொம்மை படத்தில் முக்கிய காரணியாகவும், அந்த பொம்மையை பார்த்தாலே நமக்கு திகிலாகவும் இருக்கிறது.
மைக்கா மன்றோ மற்றும், நிக்கோலஸ் கேஜுடன் பிளேர் அண்டர்வுட், மைக்கேல் சோய்-லீ, கீர்னன் ஷிப்கா, டகோட்டா டால்பி பீட்டர் ஜேம்ஸ் பிரையன்ட், லாரன் அகலா, அலிசியா விட் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
ஜில்கியின் ஜில்லட வைக்கும் இசையில்
ஆண்ட்ரஸ் அரோச்சி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
இந்தத் தொடர் கொலைகளை நிறுத்த தன்னால் மட்டுமே முடியும் என்கிற நிலையில் மைக்கா மன்றோ கிளைமாக்சில் எடுக்கும் முடிவு பரிதாபகரமானது.
ஆனால் முன்னறிவித்த அளவுக்கு அப்படி ஒன்றும் அதிபயங்கரமான படமாக இது இல்லாமல் திகில் பிரியர்களுக்கு பிடித்த படமான அளவில் மட்டுமே இருக்கிறது.