September 1, 2025
  • September 1, 2025
Breaking News
September 1, 2025

லோக்கா – சாப்டர் 1 சந்திரா திரைப்பட விமர்சனம்

By 0 22 Views

சூப்பர் ஹீரோக்களை பார்த்துவிட்ட இந்திய பட உலகம் இப்போது சூப்பர் உமன்களை பற்றிப் படம் எடுக்கத் தொடங்கிவிட்டது. 

சமீபத்தில்தான் இதே படம் தயாரிக்கப்பட்ட கேரளாவில் ககனாசாரி என்ற படம் வெளியானது. அதில் கதாநாயகி 150 வயதுள்ள வினோத சக்திகள் கொண்ட ஏலியனாக வந்தார். 

இதிலும் கிட்டத்தட்ட அதேபோன்ற பாத்திரம்தான் நாயகி கல்யாணி பிரியதர்ஷனுக்கு. பார்வைக்கு 20 வயதில் இளமை தோற்றத்துடன் இருக்கும் அவர் உண்மையில் யார் என்ற பிளாஷ்பேக் தெரிய வரும்போது நாம் அதிர்ந்து போகிறோம். இவருக்கும் அப்படிப்பட்ட வினோத சக்திகள் இருக்கின்றன. இவரது வயதும் 120.

பெங்களூருக்கு ரயிலில் வந்திறங்கும் பெண்ணாகத் தெரிபவருக்கு தங்குவதற்கும் வேலை செய்வதற்கும் ஏற்பாடுகளை சிலர் செய்து கொடுக்கின்றனர். அவர் தங்கும் அறைக்கு நேர் எதிரே இருக்கும் கட்டடத்தின் அறையில் தங்கி இருக்கும் நாயகன் நஸ்லெனின் கண்களுக்கு தேவதையாக தெரிகிறார் கல்யாணி.

கல்யாணிக்கும் பார்த்த மாத்திரத்திலேயே நஸ்லேனை பிடித்து விடுகிறது. அந்த அறையில் நஸ்லேனுடன் சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் தங்கியிருக்கிறார்கள். 

இது ஒரு புறம் இருக்க இன்னொரு புறம் அந்த நகரில் உடல் உறுப்புகளை திருடும் கும்பல் ஒன்று ஆட்டோவில் அலைந்து கொண்டு இரவில் வரும் ஆண்கள் மற்றும் பெண்களை பிடித்துக் கொண்டு போகிறது.

அவர்களின் அட்டூழியத்திற்கு அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் சாண்டி (நம்ம டான்ஸ் மாஸ்டர் தான்) யும் உடந்தையாக இருக்கிறார். அவர் கண்களிலும் கல்யாணி பட்டுவிட அதற்கு பின் தான் தொடங்குகிறது யுத்தம். 

உண்மையில் கல்யாணி யார், அவரது தேவை என்ன, சாண்டியை அவரால் வெல்ல முடிந்ததா போன்ற கேள்விகளுக்கு எல்லாம் மீதி படம் பதில் சொல்கிறது.

சந்திரா என்ற பாத்திரத்தில்  சூப்பர் உமனாக கல்யாணி பிரியதர்ஷன் கலக்கியிருக்கிறார். அதிகம் உணர்ச்சிகளைக் காட்டிக் கொள்ளாத அவரது முகபாவம் வித்தியாசமான பாத்திரத்திறகு அவரைப் பொருத்தமாக ஆகியிருக்கிறது. சண்டைக் காட்சிகளில் புயல் வேகம் காட்டுகிறார் கல்யாணி. 

கல்யாணிக்கு பெரும் ஆற்றல் இருப்பதால் நாயகன் நஸ்லெனுக்கு கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிதான் இருக்கிறது. கல்யாணியை துரத்தி துரத்தி காதலித்தாலும் உண்மையில் அவர் யார் என்று தெரிகிற நொடியில் நஸ்லேன் மல்லாக்க சாய்வது நல்ல காமெடி.

அவருடன் நடித்திருக்கும் சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன் ஆகியோரும் தங்களது பங்கை சரியாக செய்திருக்கிறார்கள்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கவுடா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சாண்டி மிரட்டுகிறார். 

இரண்டாம் பாதியில் யாரும் எதிர்பார்க்காத நேரங்களில் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் இருவரும் தலைகாட்டி கொஞ்சம் தொய்வாகம் இடங்களை நிரப்பி நிறைவு செய்கிறார்கள்.

ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை வேற லெவல். 

ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவியின் கைவண்ணத்தில் கலரிஸ்டும் கைகோர்த்து புதுவிதமான வண்ணக் காட்சிகளை வடித்திருக்கிறார்கள்.

படத்துக்காக போடப்பட்ட செட்டுகள், சண்டை காட்சிகள் எல்லாமே நமக்கு புதுவித அனுபவத்தை தந்திருக்கின்றன.

இதில் புரியாத நிறைய கேள்விகளுக்கு லோக்கா சாப்ட்டர் 2 பதில் சொல்லக் கூடும்..!

– வேணுஜி