விறுவிறுப்பான ராபரி திரில்லர் ‘லாக்கர்’!
படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டத்தின் நடுவே தான் மட்டுமே ஒரு பெண்ணாக நடித்தது குறித்து லாக்கர் பட நாயகி நிரஞ்சனி வெளிப்படையாகப் பேசினார்.
தமிழில நீண்ட இடைவெளிக்குப் பின்…
ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து ‘லாக்கர் ‘என்றொரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள்.இவர்கள் இருவருமே சினிமாவின் மீது தீராத காதல் கொண்டவர்கள்.
இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது.
இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே இறுதிப்பக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.எதற்கும் துணிந்தவன் , கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும் மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்பவர்.
கள்ளச்சிரிப்பு என்ற ஜீ5க்கான இணைய தொடரிலும் நடித்துள்ளார்.
கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். இவர் சில பைலட் படங்களிலும் ஆல்பங்களிலும் நடித்துள்ளவர்.
வில்லனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார்.இவர் தரமணி, ரெஜினா போன்ற படங்களில் நடித்தவர்.பிரின்ஸ், மிரள், குட் நைட் போன்ற படங்களில் நடித்த சுப்ரமணியன் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இவர் தரமணி எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்.களப்பணி அனுபவத்திற்காக ஓம் பிரகாஷ் மற்றும் பல்லு போன்ற ஒளிப்பதிவாளர்களிடம் பணியாற்றியவர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற சேனல்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்துள்ளவர்.நிறைய விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் வீடியோக்கள் எடுத்துள்ளவர்.இவர் டெல்டா என்கிற இன்னொரு படத்திலும் ஒளிப்பதிவுப் பணி செய்து வருகிறார்.
அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார்.இவர் ஏற்கெனவே நடிகர் தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணன் வேற மாதிரி என்ற பாடல் இசை அமைத்தவர். ஏராளமான இசை ஆல்பங்களுக்கும், மை டியர் எக்ஸ் இணையத் தொடருக்கும் இசையமைத்துள்ளவர்.
படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கார்த்திக் நேத்தா,விஷ்ணு இடவன் என இரு பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர்.
படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் கண பார்த்தி.இவர் பென்குயின், குருதி ஆட்டம் போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்.இப்படிப் பல்வேறு திறமைக் கரங்கள் இணைந்துள்ளன.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு மற்றும் அறிமுக விழா இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது.
விழாவில்,இரட்டை இயக்குநர்களில் ஒருவரான யுவராஜ் கண்ணன் பேசும்போது,
“இதில் பணியாற்றிய பலருக்கும் இது முதல் படம் என்பதால் தங்களது சொந்தப் படம் போலவே உணர்ந்து பணியாற்றி இருக்கிறார்கள். தயாரிப்பாளர் ”தம்பிகளா நல்லா பண்ணுங்க” என்று ஊக்கப்படுத்துவார். எங்கள் மீது நம்பிக்கை வைத்தார். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை என்று நினைக்கிறேன்.படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.
இன்னொரு இயக்குநர் ராஜசேகர் என் பேசும்போது,
” நானும் யுவராஜும் 2013ல் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து அறிமுகமாகி நண்பர்களாக இருக்கிறோம். நான் எந்தக் கதை சொன்னாலும் பொறுத்துக் கொள்பவர் யுவராஜ்.நாங்கள் சில ஆண்டுகளாகக் குறும்படங்கள் ,முயற்சிகள் என்று செய்து திரை உலகில் நுழையப் போராடிக் கொண்டிருந்தோம் .இந்த தயாரிப்பாளரைச் சந்தித்தபோது அவர் கேட்டபடி கதையை 20 நாளில் தயார் செய்து கொடுத்தோம் .
அப்படித்தான் இந்தக் கதை உருவானது..அவர் எங்கள் மீது நம்பிக்கை வைத்தார் .அதை நாங்கள் வீணாக்கவில்லை. அவர் செலவு செய்த ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் உழைத்தோம். அது நல்ல படமாக வந்துள்ளது.இதில் பங்கு பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
நாயகன் விக்னேஷ் சண்முகம் பேசும்போது ,
”எனக்கு முதலில் யுவராஜ் அறிமுகமானார். இயக்குநர் ராஜசேகர் எனது குறும்படங்கள் போஸ்டர் வந்துவிட்டால் கூட அதைப் பார்த்துப் பாராட்டி வாழ்த்துபவர். அது எனக்கு அவரது நல்ல பண்பைக் காட்டியது. ஒருநாள் கதை சொல்லப் போவதாக கூறினார் .ஏதோ ஒரு கதையை நன்றாக இருக்கிறதா என்று கேட்பதற்காக சொல்வதாக நினைத்தேன். ஆனால் என்னை வைத்து இயக்குவதாகச் சொன்ன போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படித்தான் இந்தப் படத்தில் வந்து நடித்திருக்கிறேன்.
இதற்கு முன் நான் நடித்த இறுதிப்பக்கம் ,கள்ளச்சிரிப்பு போன்ற படைப்புகள் கொடுத்த இயக்குநர்கள் வழியாகத்தான் இந்த மேடையை நான் அடைந்திருக்கிறேன். அப்படி வாய்ப்பு கொடுத்த அவர்களுக்கு என் நன்றி”என்றார்.
கதாநாயகி நிரஞ்னி அசோகன் பேசும்போது,
“எனது குறும்படத்தைப் பார்த்து விட்டுத்தான் இந்த லாக்கர் பட வாய்ப்பு வந்தது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட போது முதலில் நான் நம்பவில்லை. ஏனென்றால் நிறைய போலிகள் உலா வருகிற காலம் இது. உண்மையாக இருக்குமா என்று நான் சந்தேகப்பட்டேன்.
அவர்களின் அலுவலகம் சென்றபோது எனக்கு இரண்டு விஷயங்கள் பிடித்தன .ஒன்று அவர்கள் கதை விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. அவ்வளவு அருமையாக இருந்தது. அடுத்தது முதல் படத்திற்காக அவர்களது முன் தயாரிப்பு ஆச்சரியப்பட வைத்தது. எல்லாவற்றையும் தெளிவாகத் திட்டமிட்டு வைத்திருந்தார்கள்.
அதேபோல் தான் படப்பிடிப்பும் நடந்தது .படம் திறந்தவெளியில் படமாக்கப்படுகிற போது கூட பருவ கால நிலை மாற்றத்தால் திடீரென்று மழை வரும். ஆனால் அதைக் கண்டு மிரண்டு விடாமல் அதற்கு ஒரு மாற்றுத் திட்டம் வைத்திருந்தார்கள். இப்படி மிகவும் சரியாகத் திட்டமிட்டு வைத்திருந்தது எனக்கு ஆச்சரியமூட்டியது.
எல்லோருக்கும் முதல் படம் என்கிற போது ஒரு அழுத்தம் இருக்கும். அந்த அழுத்தம் தெரியாத அளவிற்கு அவர்கள் துல்லியமாகத் திட்டத்துடன் இருந்தார்கள் .ஒளிப்பதிவாளர் தாஸ் எனக்கு தனிப்பட்ட முறையில் நான் திரையில் நன்றாகத் தெரிய வேண்டும் என்று கவனத்துடன் அறிவுரைகள் சொல்வார்..
ஸ்டண்ட் மாஸ்டர் சுரேஷ் இதில் ஒரு பாம் ப்ளாஸ்ட் காட்சி எடுக்கும் போது ரியலாக எடுத்தார். ஆனால் அதை எடுக்கும்போது பாதுகாப்பு விதிகளைச் சரியாகக் கடைப் பிடித்தார். யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக மிகவும் அக்கறையாக செயல்பட்டார் .பாம் சப்தம் வந்து காது பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்ளச் சொன்னார்.நாயகன் விக்னேஷ் சண்முகம் உடன் நடிக்கும் சக நடிகராக எனக்கு செளகரியமாக இருந்தார்.படக்குழுவினர் யாரும் ஈகோ பார்க்கவில்லை.
இந்தப் படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டம் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் நான் ஒருத்தி மட்டும் தான் பெண். இருந்தாலும் அந்த பாலினபேதம் ஏதும் உணரத் தோன்றாமல் சௌகரியமாக பாதுகாப்பாக உணர்ந்தேன். இப்படி ஒரு நல்லதொரு அனுபவம் இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது. அதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருமே நல்ல பங்களிப்பைக் கொடுத்துள்ளார்கள். இந்த படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் இதை சரியான முறையில் விநியோகம் செய்யும் ஜெனிஷ் அவர்களுக்கும் நன்றி” என்றார்.
விழாவில் படத்தின் ட்ரெய்லரை படக் குழுவினர் வெளியிட, உதவி இயக்குநர்கள் பெற்றுக் கொண்டார்கள்.படம் முழுக்க உழைக்கும் உதவி இயக்குநர்கள் மீது பாராமுகம் காட்டும் திரையுலகில் இது ஒரு புதிய முன்னுதாரணமாக இருந்தது.