தமிழ் சினிமாவில் இப்போது ஆந்தாலஜி டிரெண்ட் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் முன்னணி இயக்குநர்களான கெளதம் மேனன், ஏ.எல்.விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘குட்டி ஸ்டோரி’.
அனைவருமே காதலை கதைக்கருவாக வைத்து இந்த நான்கு குறும்படங்களையும் இயக்கி இருப்பது ஹைலைட்.
கெளதம் மேனனின் எதிர்பாரா முத்தம் படத்தில் அவரே நாயகன் ஆகியிருக்கிறார். கல்லூரி பருவ நண்பர்களை நீண்ட நாட்களுக்கு பின் சந்திக்கும்போது கல்லூரி கால காதலை பற்றி பேசும் கெளதம் மேனன், அமலா பாலுடனான நட்பை பற்றி சொல்கிறார்.
கெளதம் மேனனின் கல்லூரி பருவ கதாபாத்திரமாக நடித்துள்ள வினோத் கிஷன் அந்த பாத்திரத்துக்கு மிகச் சரியான தேர்வு. அமலா பாலின் நடிப்பும், ரோபோ சங்கரின் காமெடியும் கச்சிதம்.
மனோஜ் பரம ஹம்சாவின் ஒளிப்பதிவு இன்னொரு முறை கௌதம் மேனனின் காதலுக்கு கட்டியம் கூறி இருக்கிறது.
ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள அவனும் நானும் படத்தில் அமிதாஷ், மேகா ஆகாஷ் இருவரின் எல்லைமீறிய காதலால் மேகா ஆகாஷ் கர்ப்பமாகிறார். இதை தனது காதலன் அமிதாஷிடம் தெரிவிக்கும் போதிலிருந்து அமிதாஷின் போன் ஸ்விட்ச் ஆப்பில் இருக்கிறது.
இதற்கு அடுத்த நகர்வுகள் பழைய தமிழ் படங்களை ஒத்த பாச சென்டிமென்ட்களோடு முடிவடைகிறது.
மதுவின் இசை, அரவிந்த் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு படத்துக்கு பலம். படத்தின் களம் பழையது என்றாலும் படைத்திருக்கும் விதத்தில் புதிதாக இருக்கிறது.
அனிமேஷன் விளையாட்டை மையமாகக் கொண்டு ஒரு காதலைச் சொல்லி இருக்கிறார் வெங்கட் பிரபு.
லோகம் என்ற அனிமேஷன் விளையாட்டில் நாயகன் வருனுடன் ஒரு பெண்ணும் இணைய அவர் மீது வருண் காதல் வயப்படுகிறார். காதல் கைகூடியதா என்பதில் எதிர்பாராத ட்விஸ்ட் கொடுத்து முடிக்கிறார்.
வருண், சாக்ஷி, சங்கீதா ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தில் பிரேம்ஜி இல்லையே என்று பார்த்தால் அவர் பின்னணி இசை மூலம் அடையாளம் தெரிந்து இருக்கிறார். இளசுகளின் நாடியை சரியாக பிடித்திருக்கும் வெங்கட்பரபு
அனிமேஷன் ரொம்பவும் நம்பி இருப்பதால் தொய்வாக நகர்கிறது படம்.
நலன் குமாரசாமி இயக்கியிருக்கும் நான்காவது படமான ஆடல் பாடலில் விஜய்சேதுபதியும், அதிதி பாலனும் கணவன் மனைவியாக வருகிறார்கள். ஒரு பெண் குழந்தையும் இருக்க, விஜய் சேதுபதியின் கள்ளக்காதல் அவரது மனைவி அதிதி பாலனுக்கு தெரிந்து விடுகிறது. அதன்பின் என்ன முடிவெடுத்தார்கள் என்பது மீதிக்கதை.
விஜய்சேதுபதியின் நடிப்பை நம்பியே திரைக்கதையை அமைத்திருக்கிறார் நலன் குமாரசாமி. அதை புரிந்துகொண்டு விஜய்சேதுபதியும் மிக இயல்பாக நடித்து பாத்திரத்திறகு வலு சேர்க்கிறார். ரொம்ப நாள் கழித்து நடித்திருக்கும் அதிதி பாலனும் நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார்.
எட்வின் லூயிஸ் விஸ்வநாத் பின்னணி இசை ஆணின் குரலில் அமைந்து வித்தியாசமாக ஒலிக்கிறது. சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
இன்றைய இளைய தலைமுறை காதல் நிலைகளுக்கு இந்த நான்கு படங்களே சாட்சி.
குட்டி ஸ்டோரி – 4 இன் 1 லவ் பேக்கேஜ்..!
Related