இது சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் யுகம். மாநகரில் சில கொலைகள் தொடர்ந்து நடப்பதும் அதை செய்வது யார் என்று போலீஸ் துப்பறிவதும் கடைசியில் எதிர்பாராத ஒருவர் கொலையாளியாக இருப்பதும் சமீபகால படங்களில் நாம் காணும் கதையாக இருக்கிறது.
ஆனால் தலைப்புக்கு தகுந்தாற்போல் இந்தப் படத்தில் நடக்கும் குற்றம் புதிதாகத்தான் இருக்கிறது.
வேலைக்குப் போன நாயகி சேஷ்விதா கனிமொழி, இரவு வீடு திரும்பவில்லை. தன் அப்பாவான அசிஸ்டன்ட் கமிஷனர் மதுசூதனனிடம், தான் ஆட்டோவில் வருவதாகக் கடைசியாக தகவல் தெரிவித்திருக்கிறார்.
இரவு முழுதும் காத்திருந்து மகள் வீடு திரும்பாததால் கவலை கொள்ளும் மதுசூதனன் ராவ், மறுநாள் காலையில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக தகவல் வருவதை அடுத்து பதற்றம் அடைகிறார்.
அடுத்து மேலும் சில இளம் பெண்கள் கொல்லப்படுவார்கள் என்று நாம் எதிர்பார்த்தால் அப்படி நடக்கவில்லை.
இது இப்படி இருக்க, இன்னொரு பக்கம், ஒரு பெண்ணைக் கொலை செய்துவிட்டதாக நாயகன் தருண் விஜய் தானே முன்வந்து போலீஸில் சரணடைகிறார்.
சேஷ்விதா கனிமொழியின் மேலேயே மொத்த போலீசின் கவனம் இருப்பதால் இவர்தான் சேஷ்விதாவைக் கொலையை செய்தாரா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்குகிறது போலீஸ்.
ஆனால் தருண் விஜயோ போலீசிடம் மேலும் இரண்டு கொலைகளைச் செய்திருப்பதாக இன்னொரு குண்டைத் தூக்கிப் போடுகிறார். ஆனால் விசாரணையில் அவர் கொலை செய்ததாக சொல்லப்படும் இரண்டு பேரும் உயிருடன் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
அப்படியானால், அவர் முதலில் கொன்றதாக சொல்லும் பெண் சேஷ்விதா கனிமொழிதானா..? என்பதுடன் தருண் விஜய் யார் ? எதற்காக தானே வந்து போலீசில் சரணடைகிறார் ? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிறது மீதிப் படம்.
அறிமுக நாயகன் என்றாலும் தருண் விஜய் தன் முதல் படத்திலேயே பலம் வாய்ந்த கேரக்டரில் நடித்துப் பாராட்டு பெறுகிறார்.
நல்ல உயரமும் உயரத்துக்கு ஏற்ற உடல் வாகும் நிறமும் ஒருங்கே அமையப்பெற்ற தருண் விஜய், ஆக்ஷனில் அருண் விஜய்க்கு போட்டியாவார் என்று எதிர்பார்க்கலாம்.
வழக்கமாக நன்றாக சண்டையிடுபவர்கள் நடிப்பில் பெரிதாக பரிமளிக்க மாட்டார்கள். ஆனால் நடிப்பிலும் நன்றாக ஸ்கோர் செய்கிறார் தருண் விஜய்.
நீதிபதியை அவர் அங்கிள் என்று அழைக்கும்போது சமகால அரசியல் நினைவுக்கு வந்து தியேட்டரே குபீர் என்று சிரிக்கிறது. இதைப் போன்று நல்ல ஸ்கிரிப்டுகளை கேட்டு நடித்தால் தருண் விஜய் தமிழ் படஉலகில் அசைக்க முடியாத ஹீரோவாக வருவார். அந்த கொரில்லா வடிவிலான உடல் மொழி அசத்தல்..!
சேஷ்விதா கனிமொழியின் கண்களே அவருக்கான பாதி வசனத்தை பேசி விடுகின்றன. அத்துடன் எளிதாக நாம் கண்டுபிடித்து விட முடியாத பாத்திரத்தை ஏற்றதில் இந்தப் படத்தில் கவனம் பதிக்கிறார்
அவரது அப்பாவாக வரும் மதுசூதனன் ராவ், ராம்ஸ், நிழல்கள் ரவி, பாய்ஸ் ராஜன் உள்ளிட்டோர் தத்தமது பண்பட்ட நடிப்பின் மூலம் நமக்கு ஒரு நியாயமான சினிமா அனுபவத்தை தந்திருக்கிறார்கள்.
இதுவரை எந்த அறிமுக இசையமைப்பாளரும் இங்கு வீண் போனதில்லை. அந்த வகையில் இந்தப் பட இசையமைப்பாளர் கரண் பி.க்ருபாவும் படத்தின் நாடி பிடித்து இசைத்து நம் கவனத்தைக் கவருகிறார்.
ஜேசன் வில்லியம்ஸின் ஒளிப்பதிவும் அசாத்தியமானது. படத்தின் தன்மை புரிந்து நம்மை பதட்டம் அடைய வைத்திருக்கிறார்.
இந்தக் கிரைம் திரில்லருக்கு படத்தொகுப்பாளர் எஸ்.கமலக் கண்ணனின் பங்கும் இன்றியமையாதது.
எழுதி இயக்கியிருக்கும் நோஹா ஆம்ஸ்ட்ராங், குற்றத்தை மட்டுமில்லாமல் திரைக்கதையையும் புதுமையாக எழுதி இருப்பதில் தனிக் கவனம் பெறுகிறார்.
நாம் வழக்கமான சினிமாவில் பார்க்கும் காட்சிகளாக இல்லாமல் அடுத்தடுத்த காட்சிகள் நகர்வது வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது.
குற்றம் புதிது – திரை அனுபவமும் புதிது..!
– வேணுஜி