வனத்தில் வழி தவறிய யானைக் குட்டி ஒன்று பள்ளத்தில் விழுந்து விடுகிறது. அதேபோல் அதே வனத்தின் ஊருக்குள் பெற்றவர்கள் சாராய வியாபாரிகளாக இருக்க, அவர்களின் மகனும் தனிமையை உணர்கிறான்.
இந்த இருவரின் தனிமையும் ஒன்று சேர்ந்து கூட்டாளிகளாக, அந்த நட்பு பந்தம் தொடர்கிறது.
சிறுவன் இளைஞராக வளர்ந்ததும் அந்த வேடத்தில் அறிமுக நாயகன் மதி தோன்றுகிறார்.
ஒரு கட்டத்தில் அந்த யானைக்குட்டி தொலைந்து போக நாயகன் மதியும் மேல் படிப்புக்காக வெளியூர் செல்ல வேண்டி வருகிறது. ஐந்து வருடம் கழித்து திரும்பி வந்த மதி கண்ணில் யானை பட்டுவிட மீண்டும் நட்பு தொடர்கிறது.
ஆனால் சர்வ லட்சணங்களும் (!) அமையப்பெற்ற அந்த யானையை தமிழ்நாட்டு முதலமைச்சர் (?) தன் அரசியல் எதிரியை ஒழிக்க, கஜ பலி கொடுக்க நினைக்கிறார்.
நட்பு வென்றதா, நயவஞ்சகம் வென்றதா என்பது மீதிக் கதை.
அறிமுக நாயகன் மதி எந்தப் பதட்டமும் இல்லாமல் இயல்பாக நடித்திருக்கிறார். அதுவும் முதல் படத்திலேயே யானையுடன் நடிப்பது என்பது சவாலான விஷயம். அதையும் ஏற்று திறம்பட நடித்திருப்பவர் இனிவரும் காலங்களில் கவனமாக இருந்தால் முன்னணி ஹீரோவாகலாம்.
கதாநாயகி என்றால் அவர் நாயகனுடன் ஜோடி போட வேண்டுமென்ற அவசியமிலலை என்கிற அளவில் ஷிரிதா ராவ், சவுண்ட் இன்ஜினியராக வந்து சத்தம் இல்லாமல் கவர்கிறார்.
சி. எம்மின் உதவியாளராக வரும் ஆகாஷ், அவர் உதவி கோரும் வில்லன் அர்ஜுன் தாசின் நடிப்பு மிரட்டுகிறது.
ஆண்ட்ரூஸ், ஹரிஷ் பெராடி, ஸ்ரீநாத் உள்ளிட்ட பிற வேடங்களில் வருபவர்கள் அவற்றை நிறைவாக நிரப்புகிறார்கள்.
ஒளிப்பதிவு எம்.சுகுமார் என்றாலே அண்ணா அண்ணாந்து பார்க்கும் அருவிகளை ஆகாசத்தில் இருந்து பார்க்கலாம். மிரட்டலான ஒளிப்பதிவு.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையும் தரம்.
எழுதி இருக்கி இருக்கும் பிரபு சாலமனிடம் இன்னும் எதிர்பார்த்தோம். அத்துடன் யானையும் மதியும் நட்பாக இருக்கிறார்கள் என்பதை ஒரு காட்சியில் சொன்னால் போதாதா..? அவர்கள் இருவரும் வரும் எல்லா காட்சிகளும் யானைக்கு மதி முத்தமிட்டுக் கொண்டே இருப்பது. ஒரு கட்டத்தில் “உவ்வே..!”
முதல் பாகத்தை ஒப்பீடு செய்யாமல் பார்த்தால் இந்த படத்தை ரசிக்க முடியும்.
கும்கி 2 – தரத்திலும் 2..!
– வேணுஜி