தன் ஒவ்வொரு படத்திலும் மனித மனங்களை உரசிச் செல்லும் கதைகளைச் சொல்லும் சீனு ராமசாமி இந்தப் படத்தில் தொட்டிருப்பது ஒரு அண்ணன் தங்கையின் பாசக்கதை.
பெற்றோரால் கைவிடப்பட்ட நாயகனும், அவர் தங்கையும் ஆதரவு இல்லாமல் கோழிப்பண்ணை நடத்தும் யோகி பாபுவிடம் வந்து சேர்கிறார்கள். வளர்ந்ததும் தானும் ஒரு கோழிப் பண்ணை வைத்து நடத்துகிறார். பருவ வயது வந்த இருவரில் அவருக்கு மட்டும் இல்லாமல், தங்கைக்கும் காதல் வர, அந்தப் பாசக்கார அண்ணனின் நிலை என்ன என்பதுதான் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஏகன், அறிமுகம் போல் அல்லாமல் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். சினிமாவுக்கான எந்த ஒப்பனையும் கொள்ளாமல் அசல் கிராமத்து இளைஞராக வலம் வருவது சிறப்பு.
தன் படத்தின் மூலம் விஜய் சேதுபதி என்கிற அற்புதமான நடிகரைத் தந்த சீனு ராமசாமி அவரைப்போலவே ஏகனையும் கொண்டு வந்து விட வேண்டும் என்கிற நோக்கத்தில் அனைத்து உணர்வுகளையும் வெளிப்படுத்தக்கூடிய பாத்திரத்தை ஏகனுக்குத் தந்திருக்கிறார். ஏகனும் அசராமல் நடித்துத் தன் ஆல் ரவுண்டு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அவரது ஜோடியாக வரும் பிரிகிடா சாகாவுக்கு சின்ன வேடம்தான் என்றாலும், இங்கு என்னை விட்டால் ஆளில்லை என்கிற அளவில் ரசிக்க வைத்து விடுகிறார்.
படத்தின் ஆகப்பெரிய ஆச்சரியம் யோகி பாபு. தனது வழக்கமான காமெடி, கலாய்ப்புகளை ஓரம் கட்டி வைத்துவிட்டு, ஒரு குணச்சித்திர நடிகருக்கு உண்டான ஆற்றலுடன் நடித்து சீரியஸ் வேடத்திலும் தன்னால் நடிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார்.
படத்தின் மையப் புள்ளியாக வரும் நாயகனின் தங்கை சத்யாதேவி, தன் பாத்திரத்தின் அழுத்தம் உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவக்குமார், நவீன், குட்டிப்புலி தினேஷ் என மற்ற வேடங்களில் வருபவர்களும் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
கதை நடக்கும் கிராமத்துக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறார் ஒளிப்பதிவாளர் அசோக்ராஜ்.
என்.ஆர்.ரகுநந்தன் இசை பற்றித் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. பாடல்களிலும், பின்னணி இசையிலும் ரசிகத்தக்க வகையில் லயம் பிடித்திருக்கிறார்.
படத்தின் கடைசி அரை மணிநேரக் காட்சிகள் மூலம் நம்மை நெகிழ வைத்து விடும் இயக்குனர் சீனு ராமசாமி, சென்டிமென்ட் கதைகளைச் செதுக்குவதில் தன்னை விட்டால் இப்போதைக்கு ஆளில்லை என்று இன்னொரு முறை நிருபித்திருக்கிறார்.
ஆனால், அதே நேர்த்தியும், திரைக்கதை செறிவும் முதல் பாதியிலும் இருந்திருந்தால் இந்த படத்தைக் கொண்டாடி இருக்க முடியும்.