September 19, 2024
  • September 19, 2024
Breaking News
February 11, 2022

கூர்மன் திரைப்பட விமர்சனம்

By 0 568 Views

அடுத்தவர் மனதை அறியும் வல்லமை படைத்த மெண்டலிஸ்ட் என்கிற பதத்துக்கு தமிழில் கூர்மன் என்ற பொருளைப் பிடித்து இந்தப் படத்துக்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள். படத்தின் கதையும் அதுதான். 

சென்னை பல்லாவரத்துக்கு அருகில் ஒதுக்குப் புறமாக பெரிய பரப்பளவில் ஆதரவின்றி இருக்கும் பழைய வீட்டில் வசிக்கிறார் நாயகன் ராஜாஜி. அவருடன் இருப்பவர்கள் அவரது பணியாளரான பால சரவணனும், ஆசையாக வளர்க்கும் நாய் சுப்புவும்தான். 

போலீசில் ஆய்வாளராக இருந்த அவர் வாழ்வில் அவர் காதலிக்கு நடந்த கொடுமையின் காரணமாக வேலையை விட்டு விட்டு விரக்தியில் தனிமையில் வசிக்க, அவ்வப்போது சிக்கலான கேஸ்கள் வருகையில் அவரது உதவியை நாடுகிறார் உளவுப்பிரிவு உயர் அதிகாரி ஆடுகளம் நரேன்.

வீட்டிலேயே சாராயம் காய்ச்சிக் குடித்துக் கொண்டும், ஹோம் மேட் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டும் இருக்கும் அவருக்கு அடுத்தவருடைய உள்ளத்தைப் பார்வையாலேயே அறியும் சக்தி இருக்கிறது. அதுதான் காவல்துறை அவரை நாடும் காரணம்.

அப்படி ஒரு கேசில் உதவப்போய் அவர் வாழ்வில் நடந்த எதிர்பாராத விளைவுகளைத்தான் கதையாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிரையன் பி.ஜார்ஜ்.

நாயகன் ராஜாஜி கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். காதலியை இழந்த விரக்தி அவர் கெட்டப்பில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தெரிவது நன்று. அவர் கண்ணுக்குத் தெரியும் இறந்து போன காதலியே அவரை வழி நடத்துவதாக வருவது நாயகிக்கான இட ஒதுக்கீட்டுக்கு வழி செய்கிறது.

விழியழகி ஜனனி ஐயர் பகுதி நேரம் ராஜாஜியின் கற்பனையிலும் பகுதி நேரம் நேரிலும் வருகிறார். அலட்டிக் கொள்ளாத வேலையில் அலுப்பில்லாமல் செய்திருக்கிறார். அவருக்கு நேர்ந்த கொடுமையைக் கூட இயக்குனர் மறைத்தே காட்டி விடுகிறார்.

இவர்களிடம் மாட்டிக்கொண்டு பால சரவணன் படும் அவஸ்தைகள் அங்கங்கே ரசிக்க வைக்கிறது. இரவு இரண்டு மணிக்கு பழைய சோறு வேண்டுமென்று ராஜாஜி கேட்பதும் இவர் அந்த நேரத்துக்கு சோற்றை வடித்து அதை பழைய சோறாக மாற்றிக் கொடுப்பதும் ‘பாவ… சரவணன்’ ஆகிறார் பால சரவணன்.

ராஜாஜிக்கும் அவர் வளர்க்கும் நாய்க்கு மட்டும் தெரியும் ஜனனி ஐயரின் உருவம் பால சரவணனுக்கு மட்டும் தெரியாததும் ரொம்ப பாவம்.

படத்தில் திடுக்கிடும் காட்சிகள் வேண்டும் என்று நினைத்த இயக்குனர் வில்லனின் ஜட்டிக்குள் ராஜாஜி கட்டெறும்பை விட வைத்திருப்பதும், நாயின் மலத்தை எடுத்து இன்னொரு வில்லனுக்கு ஊட்ட வைப்பதும் அருவருக்க வைக்கின்றது.

சோகமான காலக்கட்டத்தில் ராஜாஜி பாழடைந்த வீட்டில் வசிப்பது நியாயமாக இருக்க, அவர் சந்தோஷமாக இருக்கும்போதும் அங்கேதான் வசிக்கிறார் என்பது இடிக்கிறது.

அதன் லாஜிக்காக அவரது பெற்றோர் இறந்த சமாதி அங்கே வைக்கப்பட்டிருக்கிறது அதேபோல் அவர் பயன்படுத்தும் ஜீப்பில் ‘ஆர்மி’ என்று எழுதப்பட்டிருக்கிறது இதற்கெல்லாம் இன்னொரு பிளாஷ்பேக் வைத்து கடைசியில் புட்டேஜ் நீளமாக வெற்றி எறிந்தார்களோ என்று தோன்றுகிறது.

சக்தி அரவிந்தின் ஒளிப்பதிவு படத்தின் மூடுக்குப் பொருத்தமாக இருக்கிறது. டோனி பிரிட்டோவின் இசை படத்துக்குத் தோதாக பயணிக்கிறது.

மாஸ்டர் இல்லாமல் சண்டைக்காட்சிகள் எடுத்தார்களோ என்று நினைக்கும் அளவுக்கு அந்தக் காட்சிகள் விறுவிறுப்பாக இல்லை.

இருந்தாலும் புதியவர்கள் முயற்சியில் புதுமையான பாத்திரப் படைப்புள்ள இந்தப் படத்தை வரவேற்கலாம்.

கூர்மன் – இன்னும் கூர் தீட்டி இருக்கலாம்..!