ரத்தம் தெறிக்கும் ஆக்சன் படங்களையும் போதை மருந்துகள் கடத்தும் படங்களையும் பார்த்துக் கொண்டிருந்த நமக்கு ஆச்சரியத்தைத் தரும் களத்தைக் கொண்டிருக்கும் படம் இது.
நம்முடைய பாரம்பரிய சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அமைந்து அதன் அருமை பெருமையை உலகுக்கு உணர்த்தும் விதமாக இதன் கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் மாயோன் சிவ தொரப்பாடி.
வழிவழியாக வந்த மூலிகைப் பாரம்பரியத்தில் மலை கிராமத்தில் வசிக்கும் செங்கா என்கிற வயதான பெண்மணி தெய்வீகத் தன்மை உள்ள மருத்துவப் பெட்டியின் உதவியோடு மூலிகை மருத்துவத்தில் சிறந்து விளங்கி வருகிறார்.
தீராத நோய் ஒன்றால் அவதிப்படும் ஒரு செல்வந்தர் அந்த கிராமத்துக்கு வரும்போது நோயின் கொடுமையால் மயங்கி விழுகிறார். அவருக்கு செங்கா மருத்துவமளிக்க அவரது நோய் தீர்ந்து விடுகிறது.
இந்த விஷயத்தைக் கேட்டு மருத்துவ உலகம் ஸ்தம்பித்து நிற்க அந்த மந்திரப் பெட்டியை அபகரிக்க சதி வேலைகளும் தொடங்குகின்றன. அதன் முடிவு என்ன ஆனது என்பதுதான் கதை.
செங்காவாக மாதம்மா வேல்முருகன், அவருடைய மகன் வேடனாக மணிமாறன் ராமசாமி, மகள் செம்பியாக அஷ்வினி சந்திரசேகர், மருமகள் நீலிமாவாக தாரா க்ரிஷ், மச்சழகனாக ராம் பரதன், மாயம்மாவாக சரிகா செல்வராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்
செங்காவாக நடித்திருக்கும் மாதம்மா வேல்முருகனின் நடிப்பு குறிப்பிடும்படி இருக்கிறது.
நாயகியைச் சுற்றி நகரும் கதையானதால் அதைப் புரிந்து கொண்டு அஷ்வினி சந்திரசேகர் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆக்ஷனில் அவர் எடுத்த ரிஸ்க்கும் நன்று.
அந்த ஊரில் இருப்பவர்களே சில பாத்திரங்களிலும் இயக்குனர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். வில்லனாக நடித்திருப்பவர் கொஞ்சம் நடிப்பு பயிற்சி எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இது போன்ற மூலிகைகளின் பெருமைகளை சொல்லும் கதைகளில் குறிப்பாக ஒன்றை மறந்து விடுகிறார்கள். அதைக் கொஞ்சம் ஆய்வு செய்து எந்தெந்த மூலிகைகள் எந்தெந்த வியாதிக்கு சிறந்தவை என்பதையும் சொல்ல வேண்டும். இந்தப் படத்திலும் அதே தவறு நிகழ்ந்திருக்கிறது.
அதேபோல் நல்ல செய்திகளை சொல்லும் படங்கள் ஜனரஞ்சக அடிப்படையிலும் இருக்க வேண்டியது முக்கியம். இந்தப் படத்தின் முன் பாதிக் கதையை மட்டும் பார்த்துவிட்டு இதன் முழுக் கதையை யூகித்து விட முடியாது. இரண்டாவது பாதி படத்தைப் பார்த்தவர்களுக்குதான் ஓரளவுக்கு கதை புரியும்.
இந்தக் குழப்பங்களைத் தவிர்த்து இன்னும் ரசிக்க வைத்திருந்தால் பேசப்படும் படமாக இது இருந்திருக்கும்.
காட்டின் பிரம்மாண்டத்தைக் காட்ட முயற்சித்து இருக்கும் ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பெரியசாமி டிரோன் காட்சிகளையே பெருமளவு நம்பி இருக்கிறார்.
செபாஸ்டியன் சதீஷின் பின்னணி இசை காட்சிகளுடன் பொருந்தி ஒலிக்கிறது.
ஆனால் கடைசிவரை படத்தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்பது புரியவே இல்லை.
கன்னி – பாரம்பரிய மருத்துவத்தின் பெருமையைச் சொன்னதற்கு பாராட்டு..!