இந்தக் காதலர் தினத்துக்கு மலேசியாவில் இருந்து வந்திருக்கும் தமிழ்ப் படம்.
கதிரவென் மற்றும் சாந்தினி கவுர் ஜோடி காதலர்களாக இருக்கிறது. அதேபோல் நந்தகோபால் மற்றும் மாயா கிளம்மி காதலித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் காதல்தான் கதையா என்றால் இல்லை.
முதல் ஜோடியில் ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் கதிரவென் தங்கள் திருமணத்துக்காக சாந்தினி கவுரை தயார்படுத்த நினைக்கிறார். ஆனால் சாந்தினியோ மேற்படிப்பு முடித்து வாழ்க்கையில் உயர்ந்த பிறகுதான் கல்யாணம் என்கிற குறிக்கோளுடன் இருக்கிறார். இதில் இருவருக்கும் சற்று மன இடைவெளி ஏற்படுகிறது.
இன்னொரு பக்கம், மாயாவுக்கு கதிரவெனின் நிறுவனத்தில் வேலை கிடைக்கிறது. ஆனால், நந்தகோபால் பார்த்து வந்த விமான பைலட் வேலை பறிபோகிறது. எனவே அவர்கள் திருமணமும் தடைப்பட்டு நிற்கிறது.
இந்நிலையில் ஏற்கனவே சாந்தினி மீது மணக்குறையுடன் இருக்கும் கதிரவென், மாயாவின் நடவடிக்கைகளால் கவரப்பட்டு அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் மேலதிகாரி என்றாலும் அவர் காதலை ஏற்க மாயா மறுக்கிறார்.
இதில் எதிர்பாராத திருப்பமாக சாந்தினி தன் மனதை மாற்றிக் கொண்டு கதிரவெனைத் திருமணம் செய்து கொள்ள முன்வர, இந்தக் காதல்கள் என்ன ஆனது என்பதுதான் மீதிக் கதை.
படத்தை இயக்கி நடித்து இருக்கும் கதிரவென் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிகிறார். அழகு, கம்பீரம், உடல் மொழி ஆகியவற்றில் தேர்ந்த நடிகராக அடையாளம் காணும் அவர், கோலிவுட்டின் தேர்ந்த இயக்குநர்கள் கையில் சிக்கினால் தமிழின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார்.
அதேபோல் மாயா கிளம்மியின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. சுயமரியாதை கொண்ட பெண்ணாகத் தெரியும் அவர் தன்னை நந்தகோபால் வெறுத்த நிலையில் அவரைத் தொடர்ந்து காதலிக்க முடியாமலும், கதிரவென் காதலை ஏற்க முடியாமலும் தவிக்கும் தவிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
இன்னொரு நாயகியாக வரும் சாந்தினி கவுரின் அழகு ரசிக்க வைக்கிறது. அவரும் கோலிவுட்டுக்கு வந்தால் மின்ன முடியும்.
அவசர முடிவெடுக்கும் நந்தகோபாலின் பாத்திரமும் அவரது நடிப்பும் கூட நன்று. கடைசி கடைசியாக வில்லன் போல் தோன்றும் அவர் நடிப்பில் நம் முன்னாள் வில்லன் கரண் தெரிகிறார்.
இந்தப் படத்தின் முக்கியமான பாராட்டுக்கு சொந்தக்காரர் படத்தின் உரையாடல்களையும் பாடல்களையும் எழுதி இருக்கும் கௌசல்யா தான். பாத்திரங்களையும் அவர்களின் மன ஓட்டங்களையும் புரிந்துகொண்டு எழுதப்பட்டிருக்கும் உரையாடல்களை இவ்வளவு நேர்த்தியாக சமீபத்தில் கோலிவுட் படங்களில் கூட பார்க்க முடியவில்லை.
ஹரிமாறன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பொருத்தம்தான். ஆனால் ஒலிப்பதிவுதான் ரொம்பவும் சோதிக்கிறது
ஏகணேஷ் நாயரின் ஒளிப்பதிவுக் கோணங்கள் நேர்த்தியாக இருந்தாலும் ஒளிப்பதிவின் தரத்தில் கோலிவுட் படங்களுடன் போட்டி போட முடியவில்லை.
படத்தின் நேர்த்தியைப் பொறுத்த அளவில் அதற்கு பட்ஜெட் ஒரு முக்கிய காரணியாக இருக்கும். அதையும் தாண்டி ஸ்கிரிப்ட் அளவில் நம்மைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது இந்தப் படம்.
உண்மையில் சொல்லப் போனால் காதலர் தினத்துக்கு உண்மையான பங்களிப்பைத் தருவதில் இந்தப் படம்தான் முந்துகிறது.
கண்நீரா – கானல் நீர் அல்ல… காதலுக்கு நீர்..!
– வேணுஜி