நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் பெண்களுக்கான விருது வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய பெண்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
அந்நிகழ்வில் அவர் “அரசியல் எனும் சாக்கடையை சுத்தம் செய்ய அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும். அரசியலைக் கண்டு ஒதுங்கி நிற்காமல், பெண்களும் அரசியலில் தவறாமல் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்..!” என்றார்.
நிகழ்வின் ஒரு பகுதியாக நடிகர் பார்த்திபன் எழுப்பிய கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்தார்.
அதில் “முதலமைச்சரானால் உங்களுடைய முதல் கையெழுத்தை எதற்குப் போடுவீர்கள்..?” என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “தற்போதைய லோக்பால் சட்டம் வெறும் கண் துடைப்பாகவே உள்ளது. எனவே, நான் முதல்வராக ஆனால் மீண்டும் லோக்பால் சட்டத்தை வலிமையாக்கவே முதல் கையெழுத்துப் போடுவேன்..!” என்றார்.
தொடர்ந்து, “வேறு யார் முதல்வரானாலும் லோக்பால் சட்டத்தை வலிமையாக்க முதல் கையெழுத்திட வைப்பேன்..!” என்றும் கமல் அறிவித்தார்.