October 5, 2024
  • October 5, 2024
Breaking News
April 4, 2024

கள்வன் திரைப்பட விமர்சனம்

By 0 287 Views

காடுகளை அழிப்பதால் விலங்குகளுக்கும், அவற்றால் மனிதர்களுக்கும் விளையும் பிரச்சினைகள் எல்லோரும் அறிந்தவைதான். அந்தப் பிரச்சினைக்குள் உணர்ச்சிமயமான ஒரு காதல்/பாசக் கதையையும் வைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் பிவி ஷங்கர்.

கொங்கு மண்டலத்தில் நடக்கும் கதை. காட்டுப்பகுதியில் இருக்கும் ஊரில் அடிக்கடி யானைகள் வந்து மனிதர்களைக் கொல்வது வாடிக்கையாக இருப்பதில் கதை தொடங்குகிறது. 

வாழ்வாதாரம் குறைவாக இருக்கும் அந்த ஊரில் திருடிப் பிழைப்பவர்களாக ஜிவி பிரகாஷும், தீனாவும் வருகிறார்கள். அப்படி திருடப் போன ஒரு வீட்டில் நாயகி இவனா இருக்க அவரிடம் மையல் கொண்ட ஜிவி திருட்டுத் தொழிலை தற்காலிகமாக ஒதுக்கி வைத்துவிட்டு இவானாவின் மனதைத் திருட முயற்சிக்கிறார்.

இந்தக் கெமிஸ்ட்ரி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, பிசிக்கலாக தனிமையில் வாழும் பாரதிராஜாவின் அறிமுகம் கிடைக்கிறது. அவரைப் பார்த்ததும் கள்வனின் மனதில் நல்லெண்ணம் பிறந்து அவரைத் தத்தெடுத்துத் தன் வீட்டுக்குக் கூட்டி வந்துவிடுகிறார். 

அது தொடர்பாக ஏற்படும் விளைவுகளும், இவானா ஜிவியைக் காதலித்தாரா என்பதற்கான விடையும் பின் பாதியில் கிடைக்கிறது.

இமேஜ் பற்றியெல்லாம் கவலைப்படாத நாயகர்கள் லிஸ்டில் ஜிவிக்கும் முக்கிய இடம் இருக்கிறது. கெம்பன் என்ற கள்வனாக வரும் அவர் திருட்டிலும் சூழ்நிலைகளை சமாளிப்பதிலும் கொம்பனாக இருப்பது ரசிக்க வைக்கிறது.

இறுதியில் அவரை யானை துரத்தும் காட்சிகள் அருமையாகப் படமாக்கப்பட்டு இருப்பதுடன் அதில் உணர்ச்சிமயமான நடிப்பையும் வழங்கி இருக்கிறார் ஜிவி. 

வழக்கமாகக் காதலியைத் துரத்தும் காதலர்கள் கதையில் மாசியாத காதலி போகப் போகக் கொஞ்சம் கொஞ்சமாக மசிந்து கிளைமாக்சில் ஒன்று சேர்வார். ஆனால் இந்தப் படத்தில் அதற்கு நேர் எதிராக கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க இவானாவின் கோபம் ஜிவி மேல் அதிகரித்துக் கொண்டே போவது புதிய அம்சம்.

வெள்ளாவி போட்டு வெளுத்தது போல் இருக்கும் இவானா, இந்த படத்தில் கிராமத்து வேடம் என்பதால் அந்த நிறத்தைப் புகை போட்டுக் கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொண்டு நடித்திருக்கிறார் என்று தெரிகிறது. 

வீட்டுக்குள் திருடன் புகுந்த நேரத்தில் அவனைக் கண்டு கத்தாமல் கதறாமல் சர்வ சாதாரணமாக எதிர்கொண்டு, தன் கழுத்தை அழுத்தி அவன் கையில் பிடித்திருப்பது கத்தி அல்ல சீப்பு என்று பதறாமல் தெரிவிப்பதில் ஆகட்டும், சாவகாசமாகக் கையில் இருக்கும் பொருள்களை எல்லாம் எடுத்துக் கொடுப்பதில் ஆகட்டும், கிளம்பும்போது வாய்க்கு ருசியாக ஊறுகாயை எடுத்துக் கொடுப்பதில் ஆகட்டும்… ஜீவியே மனம் இளகி, “நீ ரொம்ப நல்ல பொண்ணா இருக்கே..!” என்று காண்டாக்ட் சர்டிபிகேட் கொடுக்கும் அளவுக்கு நடந்து கொள்கிறார்.

ஆனால் அதற்குப்பின் வைத்த அவரது ஆப்பு தான் டாப்பு.

ஹீரோவுடன் ஒரு நகைச்சுவை நடிகனாக வந்தோம் என்றில்லாமல் இந்தப் படத்தில் அருமையான குணச்சித்திர வேடத்தில் வந்திருக்கிறார் தீனா. அவர் வாயைத் திறந்தால் சர்வ சாதாரணமாக நகைச்சுவை வெளிப்படுகிறது. 

பாரதிராஜாவைச் சொல்லியே ஆக வேண்டும். அவருக்கென்று தனியாக ஒரு குளோசப் அறிமுகம் எல்லாம் கொடுக்காமல் சர்வ சாதாரணமாக பாஸிங் ஷாட்டில் ஒரு அறிமுகம் கொடுத்திருக்கும் இயக்குனரின் தைரியம் வியக்க வைக்கிறது.

இயக்குனர் இமயமும் இந்தத் தன் கேரக்டரில் இன்வால்வ் ஆகி, அண்டர் பிளே நடிப்பில் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். அந்த சன்ன உடம்புக்குள் பார்வையாலேயே புலியை விரட்டவும், உத்தரவு போட்டே யானையை மண்டியிட வைப்பதுமான ஆற்றல் இருப்பதை நாம் நம்ப முடிவது அவரது நடிப்புத் திறமையால் மட்டுமே. 

தான் யார் என்பதை அவர் சொல்லும் கடைசிக் காட்சியில் அவருக்கான வசனங்கள் நீளமாக இருந்தாலும் நம் பொறுமையை சோதிக்காத அளவில் அது உணர்ச்சியுடன் வெளிப்பட்டிருக்கிறது.

இவர்களைத் தவிர பிற பாத்திரங்களில் வருபவர்களிடத்தில இயல்பான நடிப்பை வாங்கியிருக்கிறார் பிவி ஷங்கர். இயல்பில் தான் ஒரு ஒளிப்பதிவாளர் என்பதால் அதில் ஜால வித்தைகள் எல்லாம் காட்டாமல் கதைக்குத் தேவையான அளவில் மட்டுமே அதைப் பயன்படுத்தி இருப்பதும் பாராட்ட வைக்கிறது.

ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் இதம். பின்னணி இசையும் உணர்ச்சிகளை சரியாகக் கடத்தி இருக்கிறது. 

கடைசியில் இதுதான் நடக்கும் என்று நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ அதுவே நடக்கிறது. ஆனால் எப்படி நடக்கிறது என்பதில் வித்தியாசப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். 

கள்வன் – இவானாவின் உள்ளம் கவர்…

– வேணுஜி