கடுக்காய் என்றால் அது ஒரு வகைக் காயைக் குறிக்கும். கடுக்கா என்றால்..? யாரோ யாருக்கோ ‘கடுக்கா’ கொடுக்கிறார்கள் அதாவது ஏமாற்றுகிறார்கள் என்று பொருள்.
இந்த தலைப்பிலேயே கதையும், அதுவும் இது காமெடி கலந்த கதை என்பதும் புரிந்து விடுகிறது.
திருப்பூருக்கு பக்கத்தில் இருக்கும் ஊரில் நாயகன் விஜய் கௌரிஷ் காலையில் எழுந்து நன்றாக உடை அணிந்து கொண்டு பஸ் ஸ்டாண்டில் வந்து நின்று விடுவார். ஏதோ வேலை வெட்டிக்கு போகிறார் என்று நினைத்து விட வேண்டாம்.
அவரது தினசரி வேலையே வரும் ஒவ்வொரு பஸ்ஸிலும் கல்லூரிக்கும் வேலைக்கும் செல்லும் பெண்கள் யாராவது தன்னைக் பார்த்து காதலித்து விட மாட்டார்களா என்பது தான்.
ஒரு வழியாக அந்த நேரம் முடிந்ததும் வீட்டுக்கு வந்து உடைகளை மாற்றிக் கொண்டு திண்ணையில் வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்திருப்பவர்களுடன் உட்கார்ந்து சீட்டு விளையாட ஆரம்பித்து விடுவார்.
மொத்தத்தில் தண்டச்சோறு தின்னும் வெட்டி பயலாக அலையும் அவருக்கு எதிர் வீட்டில் நாயகி ஸ்மேஹா குடும்பத்துடன் வந்து குடியேற… வேற என்ன..? விஜய் கௌரிஷ் அவரை காதலிக்க காவடி தூக்குகிறார்.
பொறுப்பாக ஸ்மேஹா காதலை மறுத்தும் அவர் திருந்தாததால் ஒரு கட்டத்தில் அவரை காதலிப்பதாக ஒத்துக் கொள்கிறார்.
அதே கிராமத்தில் விளம்பர போர்டு எழுதும் வேலை பார்க்கும் இன்னொரு நாயகன் ஆதர்ஷ் மதிநாதன் எதேச்சையாக ஸ்மேஹாவைப் பார்த்து காதல் வயப்படுகிறார்.
ஆதர்ஷுக்கு ஸ்மேஹாவை விஜய் காதலிக்கிறார் என்று தெரிந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் தன் காதலுக்கு மெனக்கிடுவதில் அவரையும் காதலிப்பதாக வாக்களிக்கிறார் ஸ்மேஹா.
இவர்கள் இருவரும் நண்பர்கள்தான் என்பதால் ஒரு கட்டத்தில் ஸ்மேஹா இருவருக்கும் காரட்டைக் காட்டி ஏமாற்றிக் கொண்டிருப்பது தெரிகிறது. அதாவது கடுக்கா கொடுக்கிறார் என்பது புரிகிறது.
உண்மையில் ஸ்மேஹா யாரை காதலிக்கிறார் எதற்காக இருவரையும் அலைய விடுகிறார் என்பதுதான் மீதிக்கதை.
விஜய் கெளரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மூவருமே அறிமுகங்கள் தான் என்றாலும் இயல்பாக நடித்திருப்பதில் போட்டி போட்டிருக்கிறார்கள்.
ஹீரோ ஹீரோயின் என்பதற்காக கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உடைகளோ பளிச்சென்ற மேக்கப்போ இல்லாமல் அடுத்த வீட்டு பையன் அல்லது பெண் என்பதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கான உடைகளும் சரி வசனங்களும் சரி கொங்கு நாட்டை அப்படியே உரித்து எடுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் மஞ்சுநாதன் உச்சரிப்பும் நடிப்பும் அமர்க்களம். அவர்தான் படத்தில் அதிகமாக கவனத்தை கவர்கிறார்.
இவர்களுடன் மணிமேகலை, சுதா உள்ளிட்டு வரும் நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் என்பதால் அந்த ஊர் காரர்கள் ஆகவே அவர்களை பார்க்க முடிகிறது.
கெவின் டி,கோஸ்டா இசையில் பாடல்கள் பின்னணி இசையில் நகைச்சுவைக்கென்று ஒரு டைப்பாக இசைத்திருப்பதே தவிர்த்திருக்கலாம்.
ஒப்பனையே இல்லாத முகங்களை ஒளிப்பதிவு செய்வதில் சதிஷ் குமார் துரைகண்ணுவுக்கு பெரிய சிரமம் எதுவும் இருந்ததாக தெரியவில்லை.
எழுதி இயக்கியிருக்கும் எஸ்.எஸ்.முருகரசு, அந்தக் கால பாக்கியராஜின் ரசிகர் போல் இருக்கிறது. பாத்திரங்களை கையாள்வதிலும் சரி… நகைச்சுவையாக வசனங்களை எழுதி இருப்பதிலும் சரி… படு இயல்பாக அனைத்தையும் கையாண்டு இருப்பதால் கண்முன் ஒரு வாழ்க்கையை பார்த்த நிறைவு ஏற்படுகிறது.
அதிலும் வசனங்கள் அல்டிமேட். அவற்றை கொங்கு தமிழில் அனைவரையும் பேச வைத்து வேலை வாங்கி இருப்பது ஆகப்பெரிய விஷயம்.
ஆனால் கடைசியாக ஏதோ அழுத்தமான கதையை சொல்வது போன்ற பாவனையை ஏற்படுத்த முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் காமெடி ஈடுபட்ட அளவுக்கு அந்த விஷயம் எடுபடவில்லை.
அதேபோல் இந்த இரு இளைஞர்களும் தங்கள் பொறுப்பற்ற தன்மையிலிருந்து மாறியதாகவும் தெரியவில்லை.
ஆனாலும் சிறிய முயற்சியை சின்சியராக செய்திருப்பதற்கு இந்த படத்தை பாராட்டலாம்.
கடுக்கா – காமெடி எடுப்பா..!
– வேணுஜி