ஹீரோ அருள் தனக்கு நெருக்கமானவர்களுடன் டாக்குமெண்டரி படமெடுக்க காட்டுப் பகுதிக்கு செல்ல, அவர்களுடைய கார் விபத்துக்குள்ளாக, அந்த காட்டில் இருக்கும் வீடு ஒன்றில் வசிக்கும் வாய் பேச முடியாத பெரியவரிடம் உதவி கேட்டு தங்குகிறார்கள்.
அங்கே அவரது செயல்கள் விசித்திரமாக இருப்பதோடு, அந்த வீட்டில் இருக்கும் அறை ஒன்றில் இருக்கும் மரப்பெட்டியில் சிறுமி ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அந்த சிறுமியை காப்பாற்றும் நண்பர்கள், அதன் மூலம் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ள, அதில் இருந்து தப்பித்தார்களா? என்ற கேள்விக்கு விடைதான் படத்தின் கதை.
அறிமுக இயக்குநர் அருள் இயக்கி தயாரித்திருப்பதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவரது காதலியாக நடித்திருக்கும் காஷிமா ரஃபி, தங்கையாக நடித்திருக்கும் அகிலா நாராயணன், அகிலாவின் காதலனாக நடித்திருக்கும் சர்ஜுன், மற்றொரு தோழியான நின்மி ஆகியோர் புதிய முகங்களாக இருந்தாலும் தேவைக்கேற்ற அளவில் நடித்திருக்கிறார்கள்.
அனாமிகா வேடத்தில் நடித்திருக்கும் சிறுமி பூஷிதாவும் தன் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார். வயதானவர் வேடத்தில் நடித்திருக்கும் மகாராஜன், போலீஸ் அதிகாரியாக
நடித்திருக்கும் முருகானந்தம்்எல்லோரும் புதுமுகங்களே . அந்த நட்டநடுக் காட்டு பங்களாவில் போலீஸ்க்கு என்ன வேலையோ தெரியவில்லை .
வி.டி.கே.உதயனின் கேமராவுக்கு இன்னும் பட்ஜெட் ஒதுக்கி இருந்தால் ஒளி அமைப்பில் வித்தியாசம் காட்டி இருப்பார். ஆனால் இசையமைப்பாளர் பிரித்வி, பல இடங்களில் ஏன் அடக்கி வாசித்தார் என்று தெரியவில்லை. பேய் படத்தில் அலற விட்டிருக்க வேண்டாமா..?
படத்தை இயக்கி தயாரித்திருக்கும் அருள், தன் பாக்கெட்டுக்கு பங்கம் வந்து விடாமல் ஒரு பயமுறுத்தும் படத்தை கையடக்கமாக எடுத்து முடித்திருக்கிறார்.
அவர்கள் வந்த கார் விபத்துக்குள்ளானதில் அப்படி ஒன்றும் பழுதடைந்ததாகத் தெரியவில்லை. அப்படியே அந்த காரில் அவர்கள் திரும்பி வந்து இருக்க முடியும்.
படம் முழுதும் ஒரே வீட்டுக்குள் நடப்பதும் சற்று அலுப்பை ஏற்படுத்துகிறது இடை இடையே அவர்கள் வெளியே வந்து புழங்கி இருந்தால் திரைக்கதை இன்னும் சுவாரஸ்யப்பட்டிருக்கும்.
வழக்கமான பேய் கதைகளில் ஒருவர் இறந்து விட்டால் அவர் பேயாக மாறி விடுவார். ஆனால் இதில் யார் மீது பேய் இருக்கிறதோ அவர்களைக் கொன்றால் அந்த பேய் கொல்பவர்களின் மீது ஏறிக் கொள்கிறது. இப்படி ஒரு வித்தியாசமான பேயை இதுவரை ஹாலிவுட் படங்களில் கூட பார்த்ததில்லை.
அருளுக்கு பொருளும் உதவி இருந்தால் இன்னும் அசத்தி இருக்கக்கூடும்.
காதம்பரி – பயப்படாமல் பார்க்கலாம்..!