October 10, 2024
  • October 10, 2024
Breaking News
February 18, 2023

தமிழ்நாட்டின் கலாச்சாரம்தான் சிறப்பானது – கப்ஜா இயக்குனர் ஆர்.சந்துரு

By 0 374 Views

கன்னட சினிமாவில் உருவாகும் திரைப்படங்கள் இந்திய அளவிலான பான் இந்தியப் படங்களாக உருவாவதோடு, இந்திய அளவில் கவனம் ஈர்க்கும் படங்களாகவும் உருவாகி வருகிறது. அந்த அகையில், கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் உபேந்திரா நடிப்பில் பான் இந்தியா படமாக உருவாகியுள்ளது ‘கப்ஜா’. பிரபல கன்னட இயக்குநர் ஆர்.சந்துரு இயக்கியிருக்கும் இப்படத்தில் உபேந்திரா நாயகனாக நடிக்க, மற்றொரு கன்னட  முன்னணி நடிகர் கிச்சா சுதீப் முக்கிய வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார். ஸ்ரேயா ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார்.

எஸ்.எஸ்.இ மற்றும் இன்வெனியோ ஆர்ஜின் நிறுவனங்கள் சார்பில் இயக்குநர் ஆர்.சந்துரு தயாரிக்க, அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பை கவனிக்கிறார். ஏ.ஜே.ஷெட்டி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கே.ஜி.எஃப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். 

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ள ‘கப்ஜா’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் தமிழ்ப் பதிப்பின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில், இயக்குநர் ஆர்.சந்துரு, நடிகை ஸ்ரேயா, இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள். 

நிகழ்ச்சியில் பேசிய இணை தயாரிப்பாளர் அலங்கார் பாண்டியன், “நாங்கள் பெரிய பெரிய படங்களைத்தான் தயாரித்து வருகிறோம். அந்த வகையில், கப்ஜா படமும் மிகப்பெரிய படமாக உருவாகியுள்ளது. இந்த படம் தயாரிப்பில் இருக்கும் போது இயக்குநர் சந்துரு என்னை அணுகினார், அப்போது அவர் படத்திற்கான செட் உள்ளிட்ட அனைத்தையும் தயார் செய்து வைத்திருந்தார். அதையெல்லாம் பார்த்து நான் மிரண்டு விட்டேன். இவ்வளவு பெரிய படமாக உருவாகிறதே என்று ஆச்சரியப்பட்டுதான் சந்துருவுடன் இணைந்தேன்.

’கப்ஜா’ படத்தின் டிரைலரைப் பார்த்து சிலர் கே.ஜி.எப் படத்துடன் ஒப்பிடுவார்கள், நான் படத்தைப் பார்த்துவிட்டேன், இங்கு இதை நான் சொல்வது அதிகபட்சமாக உங்களுக்கு தெரியும் – ஆனால் அது தான் உண்மை. ‘கே.ஜி.எப்’ படத்தை விட ‘கப்ஜா’ மிகப்பெரிய படமாகவும், மிரட்டலாகவும் இருக்கும். நிச்சயம் இந்தப் படம் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.

இயக்குநர் ஆர்.சந்துரு பேசுகையில், “தமிழகத்தில் டிரைலரையும், திரிஷாவின் நடராஜா பாடலையும் வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். ஸ்ரேயாவின் பாடலை முதல் முறையாக சென்னையில் தான் வெளியிடுகிறோம். அதற்கு காரணம், இந்தியாவிலேயே தமிழகத்தின் கலாச்சாரம் தான் சிறப்பானது. அதனால் தான் இந்த பாடலை இங்கு வெளியிட்டுள்ளோம். தமிழக மக்கள் நிச்சயம் எங்கள் படத்திற்கு ஆதரவை தருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நான் கே.ஜி.எப் படத்தை பார்த்து விட்டு, இயக்குநர் பிரஷாந்த் இரண்டாவது படத்திலேயே இப்படி செய்துவிட்டாரே என்று ஆச்சரியப்பட்டு நாமும் பெரிதாக செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ‘கப்ஜா’ கதையை எழுதினேன். என்னுடைய பேவரைட் நடிகர் உபேந்திராவிடம் இந்த படத்தை சொன்ன போது, இவ்வளவு பெரிய படத்தை எப்படி எடுப்பது, என்று கேட்டார். நீங்கள் மட்டும் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் போதும், நான் இந்தப் படத்தை எடுத்துவிடுவேன் என்று கூறினேன். அதன்படி அவர் எனக்கு ஒத்துழைத்தார், அதனால் தான் நானே இந்த படத்தை தயாரித்தேன்.

மிகப்பெரிய பட்ஜெட்டில், மிகப்பெரிய குழுவினரோடு படத்தை உருவாக்கியுள்ளோம். நான் பல படங்களை இயக்கியிருந்தாலும் இந்தப் படத்தை என் முதல் படமாக இயக்கியிருக்கிறேன். 3 வடங்களாகக் கடினமாக உழைத்திருக்கிறோம். நிச்சயம் தமிழ் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுத்து படத்தை வெற்றியடைய செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என்றார்.

நடிகை ஸ்ரேயா பேசுகையில், “சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. தமிழ் சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது. மறுபடியும் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். கப்ஜா மிகப்பெரிய படமாக உருவாகியிருக்கிறது. நடராஜா பாடல் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த பாடலை என் மகள் ராதா பார்த்து, பாடலில் வருவது போல் மேளம் அடித்துக்கொண்டிருப்பார். இந்த பாடல் காட்சியைப் படமாக்கியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. 

கப்ஜா படத்திற்காக போடப்பட்ட செட் பிரமாண்டமாக இருந்ததோடு, மிகவும் தூசி நிறைந்ததாகவும் இருக்கும். அதில் நடிக்கும் போது எனக்கு சைனஸ் பிரச்சனை ஏற்பட்டது. அதையெல்லாம் தாங்கிக் கொண்டுதான் படத்தில் நடித்திருக்கிறேன். காரணம் மிக சிறப்பான கதை என்பதால்தான்.

இன்று படங்கள் அனைத்தும் பான் இந்தியா அளவில் வெற்றி பெறுகிறது. இதன் மூலம் சினிமாவுக்கு மொழி முக்கியம் இல்லை என்பது தெரிகிறது. அனைத்துப் படங்களையும் அனைத்து தரப்பு மக்களும் பார்க்கிறார்கள். கப்ஜா படமும் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும்.

நான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு என் குடும்பம் பெரும் ஒத்துழைப்பாக இருக்கிறது. நான் தொடர்ந்து நடித்துக்கொண்டிருப்பேன். எப்போதும் எனக்கு நீங்கள் ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். அதுபோல் கப்ஜா படத்திற்கும் நீங்கள் ஆதரவு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது… நன்றி..!” என்றார்.