தேனிக்கு அருகில் இருக்கும் ஒரு சின்ன கிராமத்தில் எந்த வழக்குப்பதிவும் இல்லாததால் அங்கு இயங்கும் போலீஸ் ஸ்டேஷன் ஒன்று மூடப்படவிருக்கிறது.
ஆனால் அங்கு பணிபுரியும் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் காவலர் வடிவேலு முருகனுக்கு சில சொந்த காரணங்களால் அங்கிருந்து செல்வதில் விருப்பமில்லை. ஆனால் அதே ஸ்டேஷனில் பணிபுரியும் சிங்கம்புலிக்கு வெளியூர் போனால் நல்ல காசு பார்க்கலாம் என்கிற தவிப்பு இருக்கிறது.
இந்நிலையில் ஒரு நாள் காலையில் திடீரென்று முண்டமிலலாத தலை ஒன்று மைதானத்தில் கிடைக்க… போலீஸ் ஸ்டேஷன் சுறுசுறுப்படைகிறது.
அந்தத் தலை விஜய் சேதுபதியுடையது. எங்கு தேடியும் உடல் கிடைக்கவில்லை. ஆனால் தலைக்கு அருகில் கொஞ்சம் பணமும் ஒரு கடிதமும் இருக்கிறது. தலையை நல்லடக்கம் செய்துவிட்டு அந்தப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த ஏரியாவில் யாரும் விஜய் சேதுபதியை பார்த்து அறியாதவர்களாக இருக்க, அவர் யார் என்று அறியும் நோக்கில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரும், காவலர் வடிவேல் முருகனும் பல இடங்களுக்கு அலைந்து திரிகிறார்கள். அந்த விசாரணை மதுரை, கேரளா என்று நீள்கிறது.
ஒவ்வொரு இடத்திலும் விஜய் சேதுபதி பற்றி வெவ்வேறு கதைகள் சொல்லப்படுகின்றன. ஓரிடத்தில் அவர் நடனக் குழு ஒன்றில் நடனமாடும் பெண்களுக்கு காப்பாளராக இருக்கிறார்.
இன்னொரு பக்கம் ஓட்டல் சிப்பந்தி ஒருவருக்கு சொந்த ஹோட்டல் வைத்து கொடுத்திருக்கிறார்.
கேரளாவில் ஆதரவற்றோர் இல்லம் ஒன்றுக்கு பெரிய தொகையாக நன்கொடை கொடுத்திருக்கிறார்.
மற்றொரு இடத்தில் வாட்ச் ரிப்பேர் செய்பவராக வேலை செய்து அங்கிருந்து மும்பைக்காரர் மிலின் சோமனுடைய நட்பு கிடைத்து அவருடன் ஏதோ தொழில் செய்ய புறப்படுகிறார்.
இப்படியான கதைகளில் உண்மையில் முத்து என்று அறியப்படும் விஜய் சேதுபதி யார், அவர் ஏன் காட்டான் என்று அழைக்கிறார்கள் என்பதுதான் மொத்தக் கதையும்.
விஜய் சேதுபதி நடித்த முதல் இணையத் தொடர் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த தொடரைப் பார்க்கத் தொடங்குகிறோம். எத்தனை முகங்களில் வந்தாலும் விஜய் சேதுபதியுடைய பாத்திரத்தை மனிதர்களை மதிப்பவர் என்கிற அளவில் புரிந்து கொள்ள முடிகிறது.
அவருடைய நடிப்பை பற்றி நாம் சொல்வதற்கு புதிதாக ஒன்றும் இலலை. தனக்கே சினிமா தவிர இன்னொரு பிரம்மாண்ட கதவை இணைய உலகில் திறந்து வைத்துக் கொண்டிருப்பதுடன் மற்ற திறமையான கலைஞர்களுக்கும் அதில் வாய்ப்பு அளித்திருக்கும் அவரது பெரிய உள்ளம் பாராட்ட வைக்கிறது.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் முத்துகுமார், காவலர்களாக நடித்திருக்கும் சிங்கம் புலி, வடிவேல் முருகன் எல்லோருமே இயல்பில் எப்படி அந்த பாத்திரங்கள் இயங்குமோ அதே அளவில் நடித்திருக்கிறார்கள்.
வடிவேல் முருகனின் மனைவியாக வரும் பார்வதியின் நடிப்பு அபாரம். இவர் இவ்வளவு நன்றாக நடிக்கக் கூடியவர் என்று இதுவரை தெரியவில்லை. இனி பல படங்களில் இவரை பார்க்கலாம்.
சபலிஷ்டாக வரும் பாலாஜி சக்திவேல் அமர்க்களப்படுத்துகிறார்.
இந்தத் தொடரில் இந்தி நடிகர் மிலிந்த் சோமனின் பங்கு என்ன என்பதை முழு தொடர் பார்த்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.
இவர்களுடன் ரிஷா ஜேக்கப், அபி நக்ஷத்ரா, இர்ஷாத் அலி, சுதேவ் நாயர், அரிஸ்டோ சுரேஷ், சுனிதா சந்திரன், ஆர்.அமரேந்திரன், சாதனா உள்ளிட்ட அனைவருமே தங்கள் பாத்திரங்களில் மிகச்சரியாக பொருந்தி இருக்கிறார்கள்.
ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை இரைச்சல் இல்லாமல் பயணிப்பது ரம்யத்தை தருகிறது. எந்த இடத்தில் என்ன தேவையோ அதை கவனமாக இசைத்திருக்கிறார் அவர்.
மது.என் மற்றும் என்.சண்முகசுந்தரம் என்று இரண்டு ஒளிப்பதிவாளர்கள் இருந்தும் வேறுபாடு காட்டாமல் ஒரே நிறத்தில் பயணித்திருக்கிறது தொடர்.
கதை எழுதி இயக்கியிருக்கும் மணிகண்டன், வெப் தொடருக்கான இலக்கணம் புரிந்து மெதுவே ஆரம்பித்து போக போக நம் நாடியை எகிற வைத்திருக்கிறார்.
முத்து என்கிற காட்டான் – முழுதும் பார்க்காமல் விட மாட்டான்..!
– வேணுஜி