‘காத்துவாக்குல இரண்டு காதல்’ படம் பார்த்துவிட்டோம். இப்போது சென்னை புரொடக்ஷன் எழில் இனியன் தயாரிப்பில் உருவான ‘காத்துவாக்குல ஒரு காதல்’ என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் ‘ மாஸ் ரவி’ யே நாயகனாகவும் நடித்திருக்கிறார். அவர் எத்தனை நடிப்பார்வம் மிக்கவர் என்பது படத்தில் அவர் ஏற்றிருக்கும் பாத்திரத்தில் இருந்தே தெரிகிறது.
இதுவும் ஒரு வடசென்னைக் கதைதான். சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, மேனாக்ஸா உள்ளிட்ட லோக்கல் தாதாக்கள் ஒருவரை ஒருவர் போட்டுத் தள்ளிக்கொண்டிருக்க, மாஸ் ரவி நல்ல தாதாவாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார்.
இன்னொரு பக்கம் அதே மாஸ் ரவி அப்பாவி ஜீவாவாக இருக்க அவரை நாயகி லட்சுமிப்ரியா விரட்டி விரட்டிக் காதலித்துக்கொண்டிருக்கிறார். ஒருவேளை பிளாஷ்பேக் கதையோ என்று நம்மை எதிர்பார்க்க வைத்து அத்துடன் முதல் பாதி முடிகிறது.
இரண்டாவது பாதியில் லட்சுமிப்ரியா ஜீவா வாக இருக்கும் ரவியைத் தேடி அலைந்து கொண்டிருக்க, மாஸ் ரொம்ப மாஸாக வளர்ந்து விட்டிருக்கிறார். அவரைப் போட்டுத்தள்ள எஞ்சியிருக்கும் தாதாவான சாய் தீனா முயன்று கொண்டிருக்கிறார்.
இதெல்லாம் எப்படி முடிவுக்கு வந்தன என்பதுதான் முழுப்படம் சொல்லும் கதை.
மாஸ் ரவி ஏற்றிருக்கும் மாஸ் மற்றும் ஜீவா பாத்திரங்கள் எதிர் துருவமானவை. அதில் வேறுபட்டுத் தன் நடிப்புத் திறமையைக் காட்டியிருக்கிறார்.
லட்சுமிப்ரியா நல்ல அழகுடன் நடிக்கவும் தெரிந்திருக்கிறார். விழிகளில் கொஞ்சமாக நடிகை சதாவின் சாயல் எட்டிப் பார்க்கிறது. எப்படியோ அவரது காதல் முடிவுக்கு வருகிறது.
மாஸ் ரவியை காதலித்தே தீருவேன் என்று வரும் இரண்டாவது நாயகி மஞ்சுவின் முயற்சி வீணாகப் போவதை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
சூப்பர் சுப்பராயன், சாய் தீனா தங்கள் டிரேட் மார்க் வில்லத்தனத்தைக் காட்டுகிறார்கள், சூப்பர் சூப்பர் ராஜன யாரைப் பார்த்தாலும் “நாயே… நாயே…” என்பது கொஞ்சம் நமக்கே டென்ஷனாக தான் இருக்கிறது.
இவர்களுடன் கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், பாஸ்கர், தங்கதுரை, பவர் ஸ்டார், மேனாக்ஸா, மிப்பு, மொசக்குட்டி தங்கள் வேடங்களில் நிறைகிறார்கள்.
ஜிகேவி & மிக்கின் அருள்தேவ் இசை பழுதில்லாமல் ஒலிக்கிறது. ராஜதுரை & சுபாஷ் மணியன் ஒளிப்பதிவும் குறை இல்லாமல் ஒளிர்கிறது.
இரண்டாம் பாதி பார்த்தால் மட்டுமே கதை புரியும் என்கிற அளவில் முதல் பாதியை இன்னும் கூட கத்தரித்து ஓட்டு போட்டு புரிய வைத்திருக்கலாம் எடிட்டிங்கை கவனித்த கம்பம் மூர்த்தி & ராஜ்குமார்.
ஜீவா என்ன ஆனார் என்பதும் மாஸ் ரவி கடைசியில் என்ன ஆகிறார் என்பதும் எதிர்பாராத திருபபங்கள்.
காத்துவாக்குல ஒரு காதல் – சுவரில்லாத சித்திரம்..!
– வேணுஜி