டைட்டிலில் கதை சொல்லியாச்சு, விஜய் சேதுபதியை நயன்ஸும், சமந்தாவும் காதலிக்கிறார்கள் என்று. இவர்களில் யார் ஒருவரின் காதலுக்கு ஆளானாலே மச்சக்காரன் என்று அர்த்தம். ரெண்டு பேரும் காதலித்தால்..? இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே எதிர்பார்ப்பு பற்றிக் கொண்டிருக்க, படம் வந்தே விட… தியேட்டர்களில் இளமைக் கொண்டாட்டம்தான்.
வழக்கமான விக்னேஷ் சிவனின் பாணியிலேயே நகைச்சுவையாக தொடங்குகிறது படம். விஜய் சேதுபதியின் பெற்றோர் குடும்பத்தில் சகோதர சகோதரிக்குக் கல்யாணமே நடக்காமல் இருக்க, அது ஏன் என்பது ஒரு குட்டிக்கதை. இந்த விரதத்தை உடைக்கும் விஜய் சேதுபதியின் அப்பாவும் இவர் பிறந்ததும் மரணிக்க, அம்மாவோ படுத்த படுக்கையாக, ராசியில்லாத பிள்ளையாக வளர்கிறார் சேது.
ஆசையாக ‘சாக்கோ பார்’ வாங்கப் போனால் அது தீர்ந்து போகும், பெய்கிற மழை கூட இவர் வெளியே வந்ததும் நின்று விடும். ஆனால், அம்மா மட்டும் சொல்லிக் கொண்டிருக்கிறாள், இதெல்லாம் ஒரு நாள் மாறும் என்று. அது இந்த நயன்ஸ் – சாம் ரெண்டு தேவதைகள் சேதுவின் வாழ்க்கைக்குள் வந்ததும் நடக்கிறது. பிறகு அந்தக் காதல்கள் என்ன ஆனது என்பது சிரிக்கச் சிரிக்க… ரசிக்க… ரசிக்க…
பகலில் கார் டிரைவராகவும் இரவில் பவுன்சராகவும் வேலை பார்த்து வரும் விஹய் சேதுபதி டிரைவராக வேலை செய்யும்போது தங்கை மற்றும் சிறப்புத்திறன் கொண்ட தம்பியை வைத்துக்கொண்டு அல்லாடும் நயன்தாராவையும், பவுன்சர் வேலை செய்யும்போது ஒரு பணக்காரனின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் சமந்தாவையும் காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த காதல் இருவருக்கும் தெரிய வந்து பிரச்சனையாக இறுதியில் விஜய் சேதுபதி காதல் பிரச்சனையை எப்படி முடிவுக்குக் கொண்டு வந்தார் என்பது மீதிக்கதை.
இந்தப்படத்தில் நாயகன் விஜய் சேதுபதி மச்சகாரனாகவே வந்து ரசிகர்களைப் பொறாமைப்பட வைக்கிறார். நயன்தாராவையும் சமந்தாவையும் இழக்க முடியாமல் கட்டினால் ரெண்டு பேரையும்தான் என்று அவர் விளக்கம் தரும் இடம் அசத்தல்.
ஆர்ப்பாட்டம் இல்லாத குடும்ப சுமைதாங்கியாக வரும் நயன்தாரா, விஜய் சேதுபதியுடன் லாங் டிரைவ் போகவும் வேண்டும், தம்பி தங்கையை விட்டு நெடுந்தூரம் செல்லாமல் இருக்கவும் வேண்டும் என்று சேதுவுடன் வீட்டைச் சுற்றியே காரில் சுற்றிச் சுற்றி லாங் டிரைவ் போவது கவிதை.
நவநாகரீக சமந்தா வரும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் விசில் பறக்கிறது. என்ன ஸ்டைலான நடை, என்ன எக்ஸ்பிரஷன்கள்…? இன்னும் பத்து வருடங்களுக்கு சாமை அசைக்க முடியாது.
மாறன், கிங்ஸ்லி ஆகியோர் காமெடியில் தியேட்டர் அல்லோல கல்லோலப் படுகிறது. சேதுவுக்கு ‘சாக்கோ பார்’ வாங்கப் போகும் இருவரும் படும் அவஸ்தைகள் நினைத்து நினைத்து ரசிக்கத் தக்கவை. கல்யாணமாகாத முதிர்கன்னியாக வரும் கலா மாஸ்டரும், அவர் சகோதரர்களும் கூட நிறையவே சிரிக்க வைக்கிறார்கள். கடைசி கடைசியாக கராத்தே வீரர் ஷிகான் ஹுசைனியும் வந்து படத்தை முடிக்க உதவுகிறார்.
சேதுவின் அம்மாவாக நீண்ட காலம் கழித்து சீமா. அந்த அம்மா சென்டிமென்ட் செம டச்சிங்..!
முதல்; பாதியிலேயே மொத்தப் படமும் முடிந்து விட்டதோ என்ற அளவில் அத்தனை சுவாரஸ்யப்படுத்தி இடைவேளைக்குப் பின்னரும் மூவரும் படும் பாட்டை தொய்வு இல்லாமல் சொல்லி தன் வெற்றியை தக்க வைத்துக் கொள்கிறார் விக்னேஷ் சிவன்.
ஹீரோ, ஹீரோயின்களுக்கு இணையாக இசையமைப்பாளர் அனிருத்தின் பெயர் திரையில் வரும்போது ரசிகர்கள் ஆரவாரிக்கிறார்கள். பாடல்கள் முன்பே ஹிட்டாகி இருக்க, பின்னணி இசையிலும் முன்னேறி இருக்கிறார் அனி. கதிரின் ஒளிப்பதிவு கண்களுக்குள் வானவில் காட்டுகிறது.
காத்துவாக்குல ரெண்டு காதல் – ஒத்தை டிக்கெட்ல ரெண்டு பட சுவாரஸ்யம்..!