March 28, 2024
  • March 28, 2024
Breaking News
September 12, 2019

கதை வழக்கு போட்டவருக்கு காப்பான் தரும் பதிலடி

By 0 583 Views

லைகா நிறுவனத் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்க சூர்யா நாயகனாக நடித்திருக்கும் படம் ‘காப்பான்’. இதில், சூர்யாவுடன் சாயிஷா ஜோடியாக மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பட்த்தின் கதைப்படி இந்தியப் பிரதமராக மோகன்லாலும், அவருடைய பாதுகாப்பு அதிகாரியாக சூர்யாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர் இணைந்து எழுதியதாக தெரிவித்திருந்தனர்.

வருகிற 20 ஆம் தேதி படம் வெளியாக இருக்க ‘காப்பான்’ படத்தின் கதை தன்னுடையது என ஜான் சார்லஸ் என்பவர் சில வாரங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 12) தள்ளுபடி செய்யப்பட்டதால் இது தொடர்பாக கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர், வழக்கறிஞர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய கே.வி.ஆனந்த், “என் ஒவ்வொரு படத்துக்கும் அதில் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக அந்த துறை நிபுணர்களைச் சந்தித்து அதன் அடிப்படையில்தான் திரைக்கதை அமைத்து வருகிறோம். அப்படி நானும் பட்டுக்கோட்டை பிரபாகரும் காப்பான் படத்துக்காக திரைக்கதையை அமைத்தோம்.

படத்தின் கதை தன்னுடையது என்று வழக்குப்போட்டவர் சொன்னதுபோல என்னை அவர் சந்தித்ததே இல்லை. தன் கதை என்று அவர் கூறிய கதையை 4 பக்க தாளில் எழுதிக்கொடுத்திருந்தார். அதை வைத்து எங்கள் படம் அதிலிருந்து பெறப்பட்டது என்று எப்படி சொல்ல முடியும் என்று கேட்டே இன்று நீதி மன்றம் அதைத் தள்ளுபடி செய்தது.

நாங்கள் இதோடு நிறுத்தப் போவதில்லை. லைகா நிறுவனம், நான், பட்டுக்கோட்டை பிரபாகர் எல்லோருமே தனித்தனியாக புகார் கூறியவர் மீது அவதூறு வழக்குப் போடவிருக்கிறோம். இனி இப்படி யாரும் தேவையில்லாமல் மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடாது என்பதற்கு இது பாடமாக இருக்கும்…” என்றார்.

தொடர்ந்து பேசிய பட்டுக்கோட்டை பிரபாகர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டே பேசினார். “நாங்கள்  இந்தக் கதையை 2012லேயே பேசி அப்போதே பதிவு செய்து வைத்திருக்கிறோம். வழக்குப் போட்டவர் பதிவு செய்ததாக சொல்வது 2016-ல். அதிலேயே வழக்கு அடிபட்டுப் போய்விட்டது.

அதிலும் டீஸரை மட்டும் பார்த்துவிட்டு அது தன்னுடைய கதை என்று வாதிடுகிறார். நாங்கள் என்ன கதை சொல்லியிருக்கிறோம் என்பதைப் படம் பார்த்துத் தெரிந்து கொண்டபின் சொல்லியிருந்தால் பரவாயில்லை. இதிலிருந்தே இது உள்நோக்கம் கொண்ட வழக்கு என்பது புரிகிறது..!” என்றார்.