September 16, 2024
  • September 16, 2024
Breaking News
July 28, 2018

ஜுங்கா விமர்சனம்

By 0 1416 Views

கோலிவுட்டில் ‘ஹாரர் ஜேனர்’ என்கிற ஆவி பறக்கும் கதைகள் ஓய்ந்து இது ‘டான்’கள் டாலடிக்கும் (டாவடிக்கும்..?) ‘டார்க் காமெடி’ சீசன். அதில் சின்னதாய் ‘சூது கவ்வும்’ படத்தில் வெற்றியைக் கவ்வி விட்ட மகிழ்ச்சியில் ‘பெரிசாய்’ பண்ண விஜய் சேதுபதி ஆசைப்பட்டிருக்கும் ‘படா’ படம் இது.

பொள்ளாச்சியில் தானுண்டு தன் கண்டக்டர் வேலை உண்டு என்று ஜாலியாக ஒரு தெலுங்குப் பெண்ணை டாவடித்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதிக்கு அந்தப் பெண்ணாலேயே ஒரு சண்டையில் பராக்கிரமத்தைக் காட்ட வேண்டிவர, அதனால் தன் வாழ்க்கை ரகசியம் ஒன்றையும் அவரது அம்மா மற்றும் பாட்டியின் மூலம் அறிந்து கொள்ள நேர்கிறது.

அது, அவரது தாத்தா, அப்பாவான லிங்கா, ரங்கா எல்லோருமே ‘டான்’களாக இருந்து, இருந்த சொத்தையெல்லாம் தொலைத்திருப்பது. அந்த உண்மை தெரிய வரும் இந்த ‘ஜுங்கா’ என்கிற விஜய்சேதுபதி அவர்கள் இழந்ததில் ஒரு சொத்தான பழைய தியேட்டரை மீட்க உறுதிகொண்டு, அதற்காக ‘டான்’ ஆகிறார். ஆனால், லிங்கா, ரங்கா வழியில் போய் இருப்பதையும் பறக்க விடக்விடக் கூடாதென்பதால் வடிகட்டிய ‘கஞ்சன்’ ஜுங்காவாக இருக்கிறார். அவரது நோக்கம் நிறைவேறியதா என்பது மீதிக் கதை.

துவைத்துக் காயப்போட்ட சட்டை வேடம்தான் என்றாலும் விஜய் சேதுபதிக்கு இந்த டான் வேடம் புதுசாகப் பொருந்தி இருக்கிறது. வாங்குகிற அசைன்மென்ட் காசில் அஸிஸ்டன்ட்களுக்கு ‘டீ’ கூட வாங்கித்தராமல் தியேட்டரை மீட்க அவர் காசு சேர்ப்பது ஜூஸ் எடுத்த கஞ்சூஸ் ரகம். மர்டர் அசைன்மென்ட்டில் கூட போகிற வழியில் சொந்த வேனை ‘ஷேர் ஆட்டோ’வாக மாற்றிக் காசு பார்ப்பதும், துப்பாக்கி ரவை செலவாகிவிடாமல் கொலை செய்யச் சொல்லிவிட்டு ‘அம்மா உணவகம்’ கிடைக்காமல் அவன் வீட்டிலிருந்தே சாப்பிட எடுத்து வரச் சொல்வது ரசித்துச் சிரிக்க வைக்கும் ரகம்.

நாயகி சாயிஷாவைத் ‘தூக்க’ முடிவெடுத்து அவர் இருப்பது பிரான்ஸ் பாரீஸில் என்று தெரியாமல் சென்னை பாரீஸ் கார்னர் போய் நிற்பது அமர்க்களம் என்றால்… கிளைமாக்ஸில் கண்ணீர் ததும்ப சாயிஷாவிடம் தான் ‘டான்’ ஆன கதையை விஜய்சேதுபதி விவரிக்கும் அழகு அட்டகாசம். மனசு வலிக்க வலிக்க அவர் தன் கதை சொல்ல, நமக்கு ‘விலா’ வலிக்கிறது.

அந்தக் கஞ்சனிடம் மாட்டிக்கொண்டு அல்லல்படும் அல்லக்கைகளில் யோகிபாபுவும், மற்றவரும் படும் பாடுகள் நகைச்சுவை ‘லோடு’கள். அதுவும் பாரீஸ் ஹோட்டலில் ஆர்டர் எடுக்கும் சீனாக்கார சர்வரிடம் யோகிபாபு சைனீஸ் போன்ற மாடுலேஷனிலேயே ஆர்டர் கொடுப்பது ‘லக கல’.

உள்ளூருக்கு மடோன்னா செபாஸ்டியன், வெளிநாட்டுக்கு சாயிஷா என்று ரகம் பிரித்து இரண்டு நாயகிகள். மடோனாவுக்கு ‘சித்தாள்’ அளவுக்குதான் வேலை என்றாலும் தன் பளீர் சிரிப்பு, குபீர் டான்ஸால் அள்ளுகிறார்.

சாயிஷா சொல்லவே வேண்டாம். பாரீஸ் அழகா, இந்தப் பனிச்சிலை அழகா என்று பட்டிமன்றமே வைக்கலாம். பனி போர்த்திய பிரான்ஸ் லொகேஷன்களும், காதல் போர்த்திய சாயிஷாவும் பூலோக சொர்க்கங்கள்.

விஜய் சேதுபதியின் லோக்கல் மாடுலேஷனுக்கு ஈடாகவோ அல்லது ஒருபிடி மேலாகவோ பின்னியிருக்கும் சரண்யா பொன்வண்ணனுக்குக் கொடுக்கலாம் ஒரு நவரச பொக்கே. கூடவே கலக்கியிருக்கும் அந்த விஜயா பாட்டிக்கும் இன்னொரு பொக்கே “பார்சேல்..!”.

இடையே ஒவ்வொரு சீனில் வரும் ராதாரவியும், டெல்லி கணேஷும் கூட அபாரப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு யாரய்யா..? ‘டட்லி’யாம். ‘அடடா அவார்ட்’ ஒன்று அவருக்குக் கொடுங்கள். வாங்கிய டிக்கெட் காசுக்கு பாரீஸ் டூர் கூட்டிச்சென்று வந்திருக்கிறார். சித்தார்த் விபினின் இசை நன்று. இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘வேற லெவல்’ பார்த்திருக்கலாம்.

இத்தனை சிறப்புகளும் நீள நீளமான காட்சிகளால் கொஞ்சம் அலுப்புத்தட்ட வைப்பது சொல்ல வேண்டிய உண்மை. கூடவே அடுத்து என்ன நிகழும் என்று குழந்தைகளும் புரிந்துகொள்ளக்கூடிய ஆதிகால திரைக்கதை உத்தியும் அயர்ச்சியை ஏற்படுத்துகிறது.

ஒருபக்கம் லோக்கல் வாழ்க்கை, இன்னொரு பக்கம் கோடீஸ்வர வாழ்க்கை என்று வாழ்வின் இரு துருவங்களையும் நேர்த்தியாகக் கதைக்குள் கொண்டுவந்திருப்பதிலும், நடிகர்களிடம் அற்புத நடிப்பை வெளிக்கோண்டு வந்திருப்பதிலும் இயக்குநர் கோகுல் வெற்றிபெறுகிறார்.

அவரது ஈகோவை கொஞ்சம் விட்டுக்கொடுத்து அங்கங்கே காட்சிகளின் நீளத்தை நறுக்கினால் ‘எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங் டார்க் காமெடி’ தர்பாரே நடத்தி விடலாம்.

பார்த்து ரசிக்கும் படங்கள் ஒருவகை. பார்த்ததை நினைத்து நினைத்து ரசிக்க வைக்கும் படங்கள் மறுவகை. இது இரண்டாம் வகை. கொஞ்ச நாள் சொல்லிச் சொல்லி ரசித்துக் கொண்டிருப்போம் இந்தப் படக் காட்சிகளை.

ஜுங்கா – குழந்தைகளும் ரசிக்க முடிகிற குதூகல ‘டான்..!’