July 15, 2024
  • July 15, 2024
Breaking News
March 1, 2024

ஜோஷ்வா திரைப்பட விமர்சனம்

By 0 206 Views

ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலேயே ஒரு ஆக்ஷன் ஹீரோவாவது அத்தனை சாத்தியமில்லை. ஆனால் அப்படி ஒரு சாத்தியத்தை வருணுக்கு அமைத்துத் தந்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

ஒரு ஹீரோயினை ஹீரோ பார்த்தார்- அடுத்தடுத்து பார்த்து காதல் கொண்டார்- அந்த காதலி மெல்ல மெல்ல அவரைக் காதலிக்க தொடங்கினாள் – பின்னர் ஹீரோவின் தொழில் தெரிந்து அவரை விட்டு விலகினார்… என்றெல்லாம் நீட்டி வளைத்துக் கதை சொல்லாமல் முதல் இரண்டு காட்சிகளிலேயே சிதறுகாய் போல் ஹீரோ, ஹீரோயினது அறிமுகத்தை முடித்து விடுகிறார் கௌதம் மேனன்.

இன்டர்நேஷனல் லெவலில் கூலிக்குக் கொலை செய்யும் வருண் அப்படி ஒருவனைப் போட்டுத் தள்ள வந்த இடத்தில் நாயகி ராஹே வைப் பார்க்கிறார். பார்த்த நிமிடமே காதல் கொண்டு அடுத்த காட்சியில் பேசி அதற்கடுத்த காட்சியில் தான் ஒரு கொலையாளி என்பதைச் சொல்லிவிடுகிறார். அதே காட்சியில் அமெரிக்காவில் படித்து வக்கீலாக இருப்பதை நாயகி ராஹேவும் சொல்லிவிடுகிறார். இதெல்லாம் முதல் பத்து நிமிடத்திற்கு உள்ளேயே முடிந்து விடுகிறது.

கொலையாளியைக் காதலிப்பதா என்று வருணை விட்டு ராஹே விலகி அமெரிக்கா செல்ல, காதல் விதி வேறு ஒரு ரூட்டில் வந்து நிற்கிறது. 

அமெரிக்காவில் புகழ்பெற்ற போதை மருந்து கடத்தல் மன்னனை போலீசார் கைது செய்திருக்க, அந்த வழக்கில் வாதாடவிருக்கும் ராஹேவைக் கொல்ல சக்தி வாய்ந்த கூலிப்படைகளை அனுப்புகிறார் அந்த வில்லன். அவர்களிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள மெய்க்காவலர்களை நியமிக்க நேர்கிறது ராஹேவுக்கு.

இங்கே ராஹேவைப் பார்த்த நிமிடத்தில் இருந்து தன் கொலைத் தொழிலை தலை முழுகிவிட்டு விஐபிகளின் பாதுகாவலராக மாறி தலை துவட்டிக் கொண்டு இருக்கிறார் வருண். இப்போது ராஹே தன் பாதுகாப்பு கருதி இந்தியா வர அவரது மெய்க்காவலராக நியமிக்கப்படும் வருண்… மெய்க்காதலராகவும் சர்வதேச கொலையாளிகளிடமிருந்து ராஹேவை காக்க முடிந்ததா என்பது மீதிக் கதை.

சினிமா குடும்பத்தில் இருந்து வருபவர்களுக்கு எளிதாக விசிட்டிங் கார்டு கிடைத்துவிடும் என்பார்கள். அப்படி தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் குடும்பத்திலிருந்து நாயகனாகி இருக்கும் வருணுக்கு சாதாரண விசிட்டிங் கார்டு கொடுக்காமல் அதை கோலிவுட்டுக்கான கிரீன் கார்டாகவே மாற்றிக் கொடுத்திருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

உயரமும் ஓங்குதாங்கான உடலும் வருணுக்கு பலம் என்பதைப் புரிந்து வைத்திருக்கும் கௌதம், அவரை அதிரி புதிரியான ஆக்சன் ஹீரோவாக முதல் படத்திலேயே களம் இறக்கி இருக்கிறார்.

அதைப் புரிந்து கொண்ட வருணும் தன்னை எவ்வளவு வருத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவு வருத்திக் கொண்டு ஒரு அறிமுக ஹீரோ என்கிற நினைவு நமக்கு வராமல் ஒரு ஆங்கிலப் பட ஹீரோ போலவே நடித்திருக்கிறார். வருணுக்குத் தமிழ் ஆக்சன் ஹீரோக்களின் வரிசையில் சிறப்பான இடம் கிடைத்திருக்கிறது.

ராஹேவுக்கும் இது முதல் படம்தான். ஆனால், அவரையும் பல காலம் பழகிய நடிகை போலவே அவரிடம் இருந்தும் அற்புதமான நடிப்பாற்றலை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் கௌதம். 

ராஹேவின் நடிப்புக்குத் தன் தந்தையையே கடைசிக் காட்சியில் கொல்ல நேர்ந்து, அந்த பாதிப்பில் துடிக்கும் காட்சியைச் சொல்லலாம்.

வருணுக்கே அசைன்மென்ட் தருகிற பயங்கர டான் வேடம் டிடி என்கிற திவ்யதர்ஷினிக்கு. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் எம் போல இதில் இவரும் எம் என்ற ஆரம்பிக்கும் பெயரிலேயே வருவது ஆச்சரியம்.

அறிமுகம் இல்லாத முகங்களே பாதிப் படத்துக்கு வந்து செல்ல, இரண்டாவது பாதியில் திடீரென அறிமுகம் ஆகிறார்கள் கிருஷ்ணா, மன்சூர் அலிகான் மற்றும் விசித்ரா.

பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் இந்த படத்தில் சற்றே வில்லனாக வந்திருக்கும் கிருஷ்ணாவைப் பாராட்டலாம் முழு வில்லனாக கிருஷ்ணா இருக்க முடியுமா என்ற நம் கேள்விக்கு பதிலாக அவருக்கு ஒரு பிளாஷ் பேக் வைத்திருக்கிறார் கௌதம் மேனன். “அதுதானே பார்த்தோம்…” என்று நிமிர்ந்து உட்கார்ந்தால் அதிலும் ஒரு யு டர்ன் போட்டு வேறு பாதையில் கிருஷ்ணாவை மாற்றிக் காட்டுகிறார் கௌதம்.

மன்சூர் அலிகான் விசித்திராவுக்கு தலா ஒரு காட்சிதான்.

கடைசி கடைசியாக வரும் கிட்டி, அளவான நடிப்பில் ஒரு அன்லிமிடெட் பர்பாமென்ஸ் தந்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் இணைந்து ஒரு ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு மிரட்டி இருக்கிறார்கள். இசையமைப்பாளர் கார்த்திக்கும் தன் பங்குக்கு வித்தியாசமான இசையைத் தந்து கவனிக்க வைக்கிறார்.

படத்தில் இயக்குனருக்கு இணையாக வேலை பார்த்திருக்கிறார் ஸ்டண்ட் இயக்குனர். படம் முழுக்க தொடருவது சண்டைக் காட்சிகள்தான் என்றாலும் கடற்கரை வீட்டில் வைத்து ராஹேவே காப்பாற்ற வருண் போடும் துப்பாக்கிச் சண்டையும், கிளைமாக்சில் பத்துக்கு பன்னிரெண்டு அறையில் 12 பேரை வருண் அடித்து துவம்சம் செய்யும் சண்டையும்  அல்டிமேட்.

கௌதம் மேனன் படம் என்றால் அதில் அமெரிக்கா இடம்பெறாமலா..? ஆனால், அந்தோ… இதில் பெயரளவில் மட்டும் அமெரிக்கா வருகிறது. ஒருவேளை இதன் இரண்டாம் பாகம் முழுக்க அமெரிக்காவில் எடுக்கப்படலாம்.

ஜோஷ்வா – ‘ஜோர்’ப்பா..!

– வேணுஜி