April 28, 2024
  • April 28, 2024
Breaking News
March 2, 2024

சத்தமின்றி முத்தம் தா திரைப்பட விமர்சனம்

By 0 95 Views

ஒரு வீட்டுக்குள் இருந்து மர்ம உருவம் துரத்த, பயந்து போய் வெளியில் ஓடிவரும் நாயகி பிரியங்கா திம்மேஷை வெளியே தயாராக நிற்கும் ஒரு கார் அடித்துத் தூக்குகிறது.

பேச்சு மூச்சின்றி மழையில் கிடக்கும் அவரை பின்னால் வருகிற ஒரு காரிலிருந்து இறங்கும் நாயகன் ஸ்ரீகாந்த் தூக்கிக்கொண்டு போய் மருத்துவமனையில் சேர்க்கிறார். அடிபட்டிருப்பது தன் மனைவி என்றும் தன்னுடைய பெயர் ரகு என்றும் மருத்துவமனையில் பதிவு செய்கிறார்.

பத்து நாட்கள் அந்த மருத்துவமனையில் உணவருந்தாமல் (!) தூங்காமல் (!!) மனைவி (?) நலம் பெற வேண்டிக் காத்திருக்கும் அவர், ஆக்சிடென்ட் கேசை விசாரிக்க வரும் போலீஸ் கண்ணில் படாமல் தப்பிக்கிறார். அப்போதே அவரிடம் ஏதோ சிக்கல் இருப்பது நமக்குப் புரிகிறது.

இன்னொரு பக்கம் மேற்படி கேசை விசாரிக்க வரும் அபிராமபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஷ் பெராடி, பலரைக் கொன்ற ஒரு கொலைகாரனைப் பிடிக்க முடியாமல் ஹரிஷ் போராடியாகி போராடிக் கொண்டிருக்கிறார்.

உடல் நலம் பெற்ற பிரியங்காவுக்குப் பழைய நினைவுகள் மறந்து போய் விடுகிறது. “நான் தான் உன் கணவன்…” என்று கூறி ஸ்ரீகாந்த் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் சுண்டுவிரல் கூட பிரியங்கா மீது படாமல் பார்த்துக் கொள்கிறார்.

இப்போதே நமக்கு கதை ஓரளவுக்குப் புரிந்து விடுகிறது. இந்த நேரம் பார்த்து திடீரென்று ஒரு கேரக்டர் போலீஸ் ஸ்டேஷனில் வந்து “என் மனைவியைக் காணோம்…” என்று ஒரு புகார் கொடுக்கிறது. அவர் பெயர் ரகு என்பதும், அவருடைய மனைவியின் படத்தைப் பார்த்தால் அது பிரியங்கா திம்மேஷ் என்பதும் நமக்கு ஷாக்.

‘சாக்லேட் பாயாக’ அறிமுகமான ஶ்ரீகாந்த், பின்னர் ‘ஐஸ் பாயாகி’ காணாமல் போய் இப்போது ‘கில்லர் பாயாக’ இந்தப் படத்தில் திரும்பி வந்திருக்கிறார். அவரால் முடிந்த அளவுக்கு முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு, தான் ஒரு கொலைகாரன் என்று நம்மை நம்ப வைக்கிறார். வீட்டுக்குள் வரும் இரண்டு பேரை அங்கேயே கொன்று வீட்டுக்குப் பின்னால் புதைத்து விடுகிறார்.

அப்படியும் ஸ்ரீகாந்த் இதுவரை சேர்த்து வைத்திருக்கும் இமேஜில் அவர் கையால் கொலை செய்யப்பட்டு செத்தாலும் சாவோமே தவிர, நம்மால் அவரைக் கொலைகாரர் என்று ஒத்துக் கொள்ளவே முடியவில்லை.

அப்படிப்பட்ட கில்லர், பிரியங்காவுக்காக பத்து நாள் தூங்காமல் சாப்பிடாமல் காத்துக் கிடப்பதை எல்லாம் நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

சில வருடங்கள் முன்பு கீர்த்தி சாவ்லா என்றொரு நடிகை கோலிவுட்டில் புழங்கிக் கொண்டிருந்தார். அவர் சாயலில் இருக்கிறார் நாயகி பிரியங்கா திம்மேஷ் . இடைவேளை வரை அவர்தான் நாயகி என்று நம்மால் நம்ப முடியாமல் பிறகு ஒத்துக் கொள்கிறோம்.

சமகாலப் படங்களில் மிகச்சிறந்த நடிகராக தன்னை நிரூபித்துக் கொண்டிருக்கும் ஹரிஷ் பெராடி இந்த படத்தில் ஆங்கிலம் பேசும் அளவுக்கு அவரது நடிப்பு பற்றி நம்மைப் பேச வைக்கவில்லை. கொலைகாரனைப் பிடிக்க புத்திசாலித்தனமாக ஏதும் செய்யாமல் ஒரு வெள்ளை போர்டில் ஏதோ எழுதி எழுதி வைத்துக்கொண்டு கல்லூரிப் பேராசிரியர் போல் பேசிக்கொண்டே இருக்கிறார்.

பிரியங்காவின் கணவராக வரும் வியான், வில்லத்தனத்துக்கு பொருத்தமாக இருக்கிறார். 

அவரது ஆசை நாயகியாக வரும் நிஹாரிகா வியானைத் துரத்தித் துரத்தி உறவு கொள்வது அவரைப் பேராசை நாயகியாக சித்தரிக்கிறது.

இசையமைப்பாளர் ஜுபினும், ஒளிப்பதிவாளர் யுவராஜ் எம் மும் அலட்டிக்கொள்ளாமல் தங்களிடம் என்ன கேட்டார்களோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார்கள்.

இயக்குனர் ராஜ் தேவ், தேர்ந்தெடுத்த கதையில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், அதைக் கொடுத்த விதத்தில்தான் நிறைவைத் தர முடியவில்லை.

சத்தமின்றி முத்தம் தா – மாற்றான் தோட்டத்து மல்லிகா..!