April 23, 2024
  • April 23, 2024
Breaking News
June 28, 2019

ஜீவி திரைப்பட விமர்சனம்

By 0 1593 Views

சமீப காலமாக சில கிரைம் த்ரில்லர் படங்கள் வருகின்றன. அவையெல்லாமே ஹீரோ அடிக்கும் ஒரு கொள்ளையை போலீஸ் பிடியிலிருந்து எப்படி தப்பித்து மீட்பது என்கிற அளவிலேயே அமைந்து அவை திருட்டுக்கும், புரட்டுக்கும் துணை போவதாகவே அமைந்திருக்கின்றன.

இந்தப்படமும் முதல் பாதியில் அப்படியே கடக்கிறது. அதனாலேயே இன்னொரு களவு கற்பிக்கும் கதையா என்று தோன்றுகிறது. ஆனால், பின்பாதியில் அப்படியே ஒரு மாற்றம்… வாழ்க்கையில் நம் செயல்கள் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடன் இருப்பதாக ஒரு கோட்பாட்டைச் சொல்லி நம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கிறார் இயக்குநர் வி.ஜே.கோபிநாத். அதில் பெரும்பங்கு கதாசிரியர் பாபு தமிழுக்கு இருக்கிறது.

நாயகன் வெற்றியும், அவரது அறை நண்பரான கருணாகரனும் ஒரே கடையில் வேலை பார்க்கிறார்கள். வறுமையுடன் போராடும் வெற்றி குடும்பதை நிர்வகிக்க மிகவும் சிரமப்படும் நிலையில் அவர்கள் குடியிருக்கும் வீட்டு உரிமையாளர் ரோகிணி தன் பார்வையில்லாத மகளின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருக்கும் நகையைத் திருடுகின்றனர்.

போலீஸில் சிக்கமலிருக்க அவர்கள் செய்யும் தகிடுதித்தங்கள் முதல்பாதியை நிறைக்க, இரண்டாவது பாதியில் ரோகிணியின் குடும்ப நிகழ்வுகளுக்கும், தன் குடும்ப நிகழ்வுகளுக்கு ஒரு ஒற்றுமை இருப்பதைக் கண்ணுறும் வெற்றி, அதை ஆராய்கிறார். அதன் விளையாக அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன.

‘8 தோட்டாக்களி’ல் பார்த்த வெற்றி இதில் இன்னும் நடிப்பில் தேறியிருக்கிறார். தான் ஈடுபட்ட ஒரு களவை தன் பார்வையாலேயோ செய்கையாலேயோ காட்டி மாட்டிக்கொள்ளாத இயல்பில் கவர்கிறார். தன் காதலைக் கூட வாழ்வின் ஓட்டத்தில் இயல்பாக எடுத்துக்கொண்டு மறக்கும் அவரது கேரக்டரைசேஷனும், நடிப்பும் நன்று.

அவரது நண்பராக வரும் கருணாகரன் அற்புதத் தேர்வு. வெற்றி அளவுக்கு அறிவு முதிர்ச்சியில்லாதவராக வரும் அவரை வைத்தே நம் சந்தேகங்களுக்கெல்லாம் படத்தில் தீர்வு சொல்லப்படுவது நல்ல திரைக்கதை உத்தி.

கதாநாயகிக்கு முக்கியமில்லாத படம் எனினும் கதைக்குள் வரும் அஸ்வினி சந்திரசேகர், ரமா இரண்டு நாயகியருமே இயல்பாகச் செய்திருக்கிறார்கள்.

தன் சுற்றத்திலிருக்கும் யாரும் திருடர்கள் அல்ல என்று உறுதியாக நம்பும் ரோகிணியின் கேரக்டர் அலாதியானது. போலீஸின் சந்தேகப்பிடிக்குள் வெற்றியும், கருணாகரணும் வந்தும் உண்மையில் திருடர்களான அவர்களை ரோகிணியே மீட்டெடுப்பது அவரது அப்பாவித்தனத்துக்கு சான்று.

சின்னக் கேரக்டர் என்றாலும் மைம் கோபி நிறைவாகச் செய்திருக்கிறார். பிற கேரக்டர்களில் வரும் சிறிய பாத்திரங்கள் கூட இயல்பாக நடித்திருப்பது இயக்குநரின் திறமைக்குச் சான்று.

நிறைய வசனம் பேசப்படும் என்றாலும் அலுப்புத் தட்டாமல் கேமரா கோணங்களையும், வசனங்களையும் வைத்து விறுவிறுப்பாகக் கதை சொல்லியிருக்கும் நேர்த்தி பாராட்டத் தக்கது. அவற்றுக்குள் ஷாட் கம்போசிங்கைக் கூட அற்புதமாக கையாண்டிருக்கும் இயக்குநர் எதிர்காலத்தில் இன்னும் வியக்க வைப்பார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

குறைகளைத் தேட முற்படும் படத்தில் ‘தொடர்பியல்’, ‘மையப்புள்ளி’ போன்ற கரடு முரடான வார்த்தைகளைத் தவிர்த்திருக்க முடியும். அதேபோல் ஒண்டுக் குடித்தனத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மாடியிலேயே குடியிருக்க வெற்றியும், கருணாகரணும் கொள்ளையடித்த நகை பற்றிய விஷயங்களை எந்தத் தயக்கமுமின்றி பேசிக்கொண்டிருப்பதும் இயல்புத் தன்மையைக் குறைக்கின்றன.

ஆனால், இவையெல்லாம் தாண்டி கடைசியில் ஒவ்வொரு பிரச்சினையும் அதனதன் இடத்தில் வந்து முடிவது கைத்தட்டவே வைத்து விடுகிறது.

கே.சுந்தரமூர்த்தியின் இசையும், பிரவிண்குமாரின் ஒளிப்பதிவும் படத்தின் நம்பகத்தன்மையைக் கூட்டியிருக்கின்றன.

ஆச்சரியப்பட வைத்த அறிவு ஜீவி..!