‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்..’ என்று அருணாசலக் கவிராயர் பாடலில் கேள்விப்பட்டிருக்கிறோம். கடன் படுவது எத்தனைக் கொடுமை என்று தெரிந்தவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவே செய்வார்கள். அந்த நிலைக்கு ஆளாகிறார் நாயகன் ரஞ்சித்.
அதுவும் கொடூர மனம் கொண்டவர்களிடம் கடன் பட்டதால் அதை திருப்பி செலுத்தாவிட்டால் அவர் மனைவியைத் ‘தூக்கி’ விடுவதாக கடன்காரன் சொல்ல, தற்கொலை செய்து கொள்ள முயல்கிறார். அதை மனைவி தடுத்து விட, தன் குடும்பத்தையே கொல்ல முடிவெடுக்கிறார்.
இந்நிலையில் நகரையே கலக்கும் ஒரு சைக்கோ கொலைகாரனை போலீஸ் தேடிக் கொண்டிருக்க, அவன் இவர்கள் வீட்டில் இவர்கள் அறியாமல் தஞ்சம் புக, என்ன ஆகிறது என்பதை பரபரப்புடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
நாயகன் ரஞ்சித்தின் நடிப்பு பற்றி சொல்ல வேண்டியது இல்லை. தான் இருந்து விட்டால் தன் குடும்பம் என்ன ஆகுமோ என்று ஒவ்வொரு கணத்திலும் கலங்கும் அவரைப் பார்க்க நமக்கு பரிதாபமாக இருக்கிறது.
அவரது மனைவியாக வரும் நாயகி மேகாலிக்கும் அதே நிலைதான். கணவனின் திட்டத்தை அறிந்து கொண்டு அவர் உணவில் கலக்கும் விஷயத்தை அவர் மாற்றும் போது நாம் நிம்மதி அடைகிறோம்.
அவர்களது இரண்டு குழந்தைகளையும் பார்க்கையில் பரிதாபமே மிஞ்சுகிறது.
கடன் கொடுத்தவராக வரும் வில்லன் விட்டல் ராவுக்கு வேறு வேலையே இல்லை என்பது தெரிகிறது. கடனை கொடுப்பதும் அதை திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் வீட்டு பெண்களைத் தூக்குவதும்… என்ன பிழைப்போ தெரியவில்லை.
படம் முழுவதும் அழுகாச்சியாகவே நகர்வது மிகப்பெரிய குறை. அதை விடுத்து தன் கடனைத் தீர்க்க ரஞ்சித் வேறு முயற்சிகள் எடுப்பதைக் காட்சியாக விவரித்திருக்கலாம்.
அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி விடாமல் இருக்க வாசலில் காவல் போடப்பட்டிருந்தாலும் இடையில் மேகாலியின் தந்தை உடல் நலம் கொன்றுவிட அவரை பார்ப்பதற்கு இருவரும் போய் வருகிறார்கள். அந்த சைக்கோவும் வீட்டுக்கு வந்து வந்து போகிறார்.
அதை எல்லாம் பின்பற்றி அவர்கள் அங்கே இருந்து தப்பித்திருக்கலாம்.
அல்லது சாகும்போது போலீசுக்கு எடுத்து அனுப்பும் வீடியோவை உயிரோடு இருக்கும்போது அனுப்பி இருந்தால் அவர்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கக் கூடும்.
இதையெல்லாம் கவனித்து இயக்குனர் வெங்கட் ஜனா திருத்தி இருந்தால் ஒரு கனமான பார்த்த திருப்தியாவது நமக்கு கிடைத்திருக்கும்.
அந்த சைக்கோ கொலைகாரன் பாத்திரத்துக்கு விஜய் சேதுபதி குரல் கொடுத்திருப்பது மட்டும் புத்திசாலித்தனம்..!
இசையமைப்பாளர் சுனில் லாசருக்கு சோக கீதம் இசைப்பதைத் தவிர வேறு வழியில்லை.
இறுதி முயற்சி – ஹவுஸ் அரெஸ்ட்..!
– வேணுஜி