September 16, 2024
  • September 16, 2024
Breaking News
May 22, 2024

இங்க நான்தான் கிங்கு திரைப்பட விமர்சனம்

By 0 132 Views

நகைச்சுவை ஹீரோவாக தனக்கென்று ஒரு ரூட்டைப் பிடித்து விட்ட சந்தானம், அந்த ராஜ பாட்டையில் கிங்காக வந்திருக்கும் அடுத்த படம்தான் இது.

புதிய இயக்குனர் ஆனந்த் நாராயணனுடன் அவர் கைகோர்த்து இரண்டு மணி நேரமும் நம்மை சிரிக்க வைக்க எடுத்திருக்கும் முயற்சி எப்படி இருக்கிறது பார்ப்போம்..

சென்னையில் குண்டு வைக்க வந்த தீவிரவாதியான விவேக் பிரசன்னா, சந்தானத்தின் வீட்டில் கரண்ட் ஷாக் அடித்து  கொல்லப்படுகிறார். எப்படியாவது பிணத்தை அகற்ற திட்டமிடும் சந்தானம் குடும்பத்தினர் அதைச் செய்துவிட்டு வீடு திரும்புகையில் வீட்டிற்குள் விவேக் பிரசன்னா உயிரோடு உட்கார்ந்து இருக்கிறார். அவர் யார், இவர் யார் என்பதெல்லாம் சுவாரஸ்யமான விஷயங்கள்.

ஒரு பிணத்தை மையமாக வைத்து படம் முழுவதையும் நகர்த்தி இருக்கும் சில படங்கள் வந்திருக்கின்றன என்பதால் அதைக் கருத்தில் வைத்துக்கொண்டு அந்தப் படங்களைப் பற்றியும் வசனத்தில் குறிப்பிட்டு இருப்பது புத்திசாலித்தனமான ஐடியா. இதனால் படத்தின் முதல் பாதி இறக்கை கட்டிக்கொண்டு பறக்கிறது, 

சந்தானம் வழக்கம் போல தன் தனித்துவமான காமெடியில் நம்மை லாஃபிங் மோடிலேயே வைத்திருக்கிறார். ஹீரோவான அவருக்கு இந்தப் படத்தில் ஒரு அருமையான டூயட்டும் வாய்த்து இருக்கிறது. அவரும் இதுதான் என் ரூட்டு… அதுக்கு ஆதாரம்தான் இந்தப்பாட்டு..! என்று ஜமாய்த்து இருக்கிறார்.

ஆனால், சந்தானத்தின் ஜோடியாக வரும் பிரியலயாவுக்கு அந்த ஒரு டூயட்டைத் தவிர  சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம் இல்லையென்பது வருத்தமான விஷயம். அவரது பாத்திரத்தில் இயக்குனர் கொஞ்சம் கவனம் எடுத்திருக்கலாம். 

தம்பி ராமையாவுக்கு இது ஒரு கம் பேக் படம் என்று சொல்லலாம். மனிதர் ஜமாய்த்து இருக்கிறார்.. சந்தானத்தின் மச்சானாக வரும் பால சரவணன் மாறனின் இடத்தை ரீப்ளேஸ் செய்திருக்கிறாரோ என்று நினைக்க வைக்கிறார். ஏனென்றால் இந்த படத்தில் மாறன் இருந்தாலும் அவரை சரியாகப் பயன்படுத்தவில்லை.

சந்தானத்தின் நண்பன், தீவிரவாதி என இரண்டு வேடங்கள் விவேக் பிரசன்னாவுக்கு.

முனிஷ்காந்த். மாறன், சுவாமிநாதன், சேஷு என்று சந்தானத்தின் நிலைய வித்துவான்கள் இந்தப்படத்திலும் தங்கள் வேலையைச் செய்திருக்கிறார்கள்.

டி.இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் ஓகே.

ஒரு பிணத்தை மருத்துவமனையில் இருந்து கடத்துவது எல்லாம் சாத்தியமா என்றெல்லாம் லாஜிக்குகளைக் கேட்காமல் போவனால், ஜாலியாக சிரித்து விட்டு வரலாம்.

முதல் பாதியைப் போல் கொஞ்சம் தடுமாறும் இரண்டாம் பாதியிலும் இயக்குனர் கவனம் செலுத்தி இருந்தால் முழுமையான திருப்தி கிடைத்திருக்கும்.

இங்க நான்தான் கிங்கு – வெற்றியில் கிங்குக்கு பாதிப்பங்கு..!