May 5, 2024
  • May 5, 2024
Breaking News
August 7, 2023

டெல்லி அவசர சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது

By 0 227 Views

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.

இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை (டெல்லி சேவைகள் மசோதா) மத்திய அரசு, பாராளுமன்ற மக்களவையில் கடந்த 3ம் தேதி தாக்கல் செய்து நிறைவேற்றியது.

இன்று மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தன.

விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை என்றும், ஊழலை தடுப்பதே மசோதாவின் நோக்கம் என்றும் கூறினார்.

ஆம் ஆத்மி கட்சியை திருப்திப்படுத்தவே இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதாகவும் தெரிவித்தார். விவாதத்தின் முடிவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மசோதாவை மக்களவையின் தேர்வுக் குழுவுக்கு அனுப்பவேண்டும் என எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிராகரிக்கப்பட்டது. அதன்பின்னர் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், மசோதாவிற்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவானது. இந்நிலையில், டெல்லி சேவைகள் மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.