November 22, 2024
  • November 22, 2024
Breaking News
April 28, 2022

ஹாஸ்டல் திரைப்பட விமர்சனம்

By 0 445 Views

ஒரு கட்டுப்பாடான ஆண்கள் ஹாஸ்டலில் ஓர் இரவு ஒரு பெண் தங்க நேர்ந்தால் என்ன ஆகும் – இந்த அந்தக சூழலில் கந்தகம் சேர்த்தது போல அந்த ஹாஸ்டலுக்குள் தன் காதலனைத் தேடி அலையும் ஒரு பேயும் சேர்ந்து கொண்டால் அந்த அதகளம் எப்படி இருக்கும், அதை எப்படியெல்லாம் எதிர்கொள்ள நேரிடும் என்று காமெடியாக சொல்லியிருக்கும் முயற்சிதான் இது.

இதில் இன்றைய தலைமுறை ஹீரோ அசோக்செல்வனும், பிரியா பவானி சங்கரும் சேர்ந்துகொள்ள ஒரு இளமை பேக்கேஜுடன், நகைச்சுவையின் பக்கம் முனிஷ்காந்த் ராம்தாசும், அவரது காதலைப் பெற அலையும் பேயாக அறந்தாங்கி நிஷாவும் இடம் பெற, அந்த அதகளம் ஆரம்பிக்கிறது.

இந்தக் கும்பலுக்குள் அனுபவ நடிகர் நாசரும் புகுந்து தன் பங்குக்கு காமெடி செய்து கலக்கி இருக்கிறார்.

கதை..? கந்து வட்டி ரௌடி ரவி மரியாவிடம் அசோக்செல்வன் நண்பனுக்காக ஐம்பதாயிரம் கடன் வாங்கிக் கொடுத்திருக்க, அதைத் திருப்பிக் கேட்டு ரவி மரியா டார்ச்சர் செய்ய, அந்தப் பணத்தைத் தான் தருவதாக சொல்லும் ப்ரியாவின் த்ரில்லுக்காக தன் ஹாஸ்டலில் ப்ரியாவைத் தங்க வைக்கிறார் அசோக் செல்வன். 

ஆனால், ரௌடி ரவி மரியாவின் மகள்தான் ப்ரியா என்பது அசோக் செல்வனுக்குத் தெரியாது. உண்மையில் தான் பார்த்த மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்து கொள்ள ரவி மரியா வற்புறுத்த, ஆனால் வேறு ஒருவனை ப்ரியா பவானி ஷங்கர் காதலிக்க, வீட்டை விட்டு ஓடுகிறார். ஆனால், அந்தக் காதலன் திருமணத்துக்கு பயந்து ‘எஸ்’ ஆகிவிட வீட்டுக்குப் போகாமல் மேற்படி அசோக் செல்வன் அன் கோ இருக்கும் ஹாஸ்டலில் வந்து தங்குகிறார் ப்ரியா. 

ஹாஸ்டல் வார்டனாக இருக்கும் ராம்தாஸுக்கு ஹாஸ்டலில் ஒரு பெண் வந்து தங்கியிருப்பது அரசல் புரசலாகத் தெரிய, அவளைத் தேடி வரும் நேரம் ஹாஸ்டலுக்குள் தன் காதலனைத் தேடி அலையும் பேய் அறந்தாங்கி நிஷாவின் கண்ணில் அவர் சிக்க… இப்படிப் போகிற கதை எப்படி முடியும் என்பதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. சிரித்தோமா என்பதுதான் இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் மேற்கொண்டிருக்கும் டாஸ்க்.

அசோக் செல்வன் சற்றே இளைத்து மாணவனாக நியாயப் பட்டிருக்கிறார். அவருக்கு இது எளிதான வேடம் என்பதால் ‘ஊதித்’ தள்ளி விடுகிறார். அவருடன் சக மாணர்களாக வரும் காமெடி சதீஷ், கேபிஒய் யோகி, கிரிஷ் எஸ்.குமார் முதலானோருக்கு மாணவர்களாக நடிப்பது ‘தண்ணி’ பட்ட பாடாகியிருக்கிறது.

ப்ரியா பவானி ஷங்கரும் அவரது கேரக்டரில் பொருந்தி இருக்கிறார். ஒரு ஆண்கள் ஹாஸ்டல் ரூமுக்குள் வந்து அவர் படும் பாடு பெரும் பாடு. ஒரு கட்டத்தில் அவரே அதில் எக்ஸ்பர்ட்டாகி கல்லூரி முதல்வர் நாசர் ஆய்வு செய்ய வரும் நேரம் அசோக் செல்வனே எதிர்பார்க்காமல் ஜன்னல் கம்பியைப் பெயர்த்து ரூமிலிருந்து ‘எஸ்’ ஆவதை ரசிக்கலாம்.

நாசர் தன்னைக் கட்டுப்பாடான முதல்வராகக் கருதிக் கொண்டாலும் மாணவர்கள் அவரை ஓட்டிக்கொண்டிருப்பது சிறப்பு அல்லது சிரிப்பு. அவரிடம் ஒரு கட்டத்தில் வசமாகச் சிக்கிக் கொள்ளும் அசோக் செல்வன் அன் கோ ‘கிருப… கிருப…” பாடல் பாடி தப்பிப்பது ஜோர். அதேபோல் ராம்தாஸுக்குத் தெரியும் பேயின் சென்ட் வாடை நாசருக்குத் தெரியாமல் போக, “என் மூக்குக்கே தெரியுது. உங்க மூக்குக்குத் தெரியலையா..?” என்று ராம்தாஸ் கேட்பது செம கலாய்.

ராம்தாஸ் வரும் காட்சிகள் எல்லாமே ரசிக்க வைக்கின்றன. ஹாஸ்டலுக்குள் ஒரு பெண்ணும், பேயும் இருப்பதை உணர்ந்தும் அதை நாசரிடம் நிரூபிக்க முடியாமல் போவதெல்லாம் கல கல. கடைசியில் அவரிடம் பேய் அதன் ஆசையைத் தீர்த்துக் கொள்வது லக லக.

நாலு அல்லக்கைகளுடன் அலையும் காமெடி ரவுடியாகவே ரவி மரியாவை நேர்ந்து விட்டார்கள் போலிருக்கிறது. அவரும் அசராமல் அப்படி நடித்து பேயிடம் நாயடி பேயடி வாங்கி நடித்திருக்கிறார். அப்படி வாங்கும்போது அவருக்கு எவ்வளவு அடி பட்டதோ தெரியவில்லை.

இது போன்று சமீப காலத்தில் சில படங்களைப் பார்த்திருந்தாலும் தொய்வு ஏற்படும் கட்டங்களில் எல்லாம் நகைச்சுவை குறையாமல் திரைக்கதையைக் கொண்டு சென்றிருக்கும் இயக்குனரைப் பாராட்டலாம்.

பிரவீண் குமாரின் கேமராவுக்கு பெரும்பாலும் இன்டோரில்தான் வேலை. அதையும் கிடைக்கிற கேப்பில் ஆங்கிள் வைத்து தன் திறமையை நிரூபித்திருக்கிறார். போபோ சஷியின் இசையில் கானா பாடல்கள் ‘தேவா’கானமாக ஒலிக்கின்றன.

ஹாஸ்டல் – ஹாஸ்யம் இன் டோட்டல்..!