November 22, 2024
  • November 22, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • யோகிபாபு உடல் நலத்தை கவனிக்க வேண்டும்-சித்தார்த்
June 18, 2019

யோகிபாபு உடல் நலத்தை கவனிக்க வேண்டும்-சித்தார்த்

By 0 742 Views

‘4 மங்கீஸ் ஸ்டுடியோ’ தயாரிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு, கனடா மாடல் எலிஸா நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் கூர்கா. ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் இசையை வெளியிட்டு, வாழ்த்தி பேசினார்.

Yogibabu

Yogibabu

“கூர்கா லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் விநியோகிக்கும் முதல் திரைப்படம். யோகிபாபுவின் வளர்ச்சி படத்துக்கு படம் பெரிதாகிக் கொண்டே போகிறது. சாம் ஆண்டன் இயக்கிய முந்தைய படங்கள் அனைத்துமே பெரிய ஹிட். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும், யோகிபாபுவுக்காக தான் இந்த படத்தையே ரிலீஸ் செய்கிறோம்..!” என்றார் லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர்.

“ஒரு ஜாலியான படம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான படம் இது. 34 நாட்களில் படத்தை முடிக்க வேண்டும், நாங்களே தயாரிக்கிறோம் என்றபோது நிறைய சிரமங்கள் இருந்தது. யோகிபாபு யாருக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை எங்களுக்கு கொடுத்திருக்கிறார். ஒரே கட்டமாக மொத்தமாக தேதிகளை கொடுத்தார். ரொம்ப பிஸியாக இருந்தாலும், தனக்கென ஓய்வுக்கு நேரம் ஒதுக்காமல் எல்லா படங்களுக்கும் தேதிகளை கொடுத்து, அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார்..!” என்றார் இயக்குனர் சாம் ஆண்டன்.

“யோகிபாபுவை பார்த்து நான் வியந்திருக்கிறேன், அவர் ஒரு மிகச்சிறந்த ஒரு நடிகர். அவருடன் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். யோகிபாபு ஓய்வே இல்லாமல் உழைக்கிறார். வெற்றி வந்த பிறகு எல்லோரும் உடல்நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும். அது தான் மிக முக்கியம். இவர்களை போல நிறைய தயாரிப்பாளர்கள் வர வேண்டும், ரிலீஸுக்கு முன்பே லாபகரமான படமாக இது அமைந்திருக்கிறது..!” என்றார் நடிகர் சித்தார்த்.

“எனக்கும், சாம் ஆண்டனுக்கும் நட்பு உருவானதே ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ படத்தில் இருந்து தான். எனக்கு மிகவும் சுதந்திரம் கொடுத்த ஒரு இயக்குனர். அது தான் அடுத்தடுத்து அவர் இயக்கத்தில் தொடர்ந்து என்னை நடிக்க வைக்கிறது. சத்யம் தியேட்டர் வெளியில் இருந்த நான் இந்த இடத்தில், மேடையில் இருக்கிறேன், அதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி..!” என்றார் நடிகர் யோகி பாபு.

Sidharth

Sidharth

“எனக்கு பாடல் பாடுவது மட்டுமே தெரியும். மற்ற விஷயங்களை பற்றி அவ்வளவாக தெரியாது. ஆனாலும், சினிமா துறையில் எவ்வளவோ பேர் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். ஒரு படம் வெற்றியடைந்தால் தான் அனைவருக்கும் வாழ்க்கை. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும். தண்ணீரை யாரும் வீணாக்க வேண்டாம், தண்ணீர் என்பது தங்கம், பிளாட்டினத்தை விட விலை மதிப்புடையது. தண்ணீர் சேமிப்பு என்பது மிக முக்கியம். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்வது அது ஒன்றே..!” என்றார் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம்.

இந்த விழாவில் நடிகர் ராஜ்பரத், ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த், சண்டைப்பயிற்சி இயக்குனர் பிசி, இசையமைப்பாளர் ராஜ் ஆர்யன், தயாரிப்பாளர் கதிரேசன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.