April 18, 2024
  • April 18, 2024
Breaking News
June 15, 2018

கோலிசோடா2 விமர்சனம்

By 0 1023 Views

கோலிசோடா முதல் பாகத்தில் நடித்த வாண்டுகள்தான் இந்த பாகத்திலும் நடித்திருக்கிறார்களா, அல்லது அந்தக் கதை நாயகர்கள் வளர்ந்தவுடன் நடக்கும் கதையா என்று ஏகப்பட்ட கேள்விகள் படம் பார்க்கப் போகும் முன்னே எழுவது தவிர்க்க இயலாதது.

இவை இரண்டும் இல்லாமல்… ஆனால், முந்தைய கதைக் கருவின் தொடர்ச்சி என்று வேண்டுமானால் இதைச் சொல்லலாம். வாழ்வின் அடையாளத்தைத் தேட முற்படும் இளைஞர்களுக்கு எது தடையாக நிற்கிறது. அதை எப்படி அவர்கள் எதிர்கொண்டார்கள் என்பதுதான் கதைக்களம்.

முன்னாள் காவலரான சமுத்திரக்கனி ஒரு துன்பியல் நிகழ்வுக்குப் பின் போலீஸ் வேலையை விட்டுவிட்டு மருந்துக்கடை வைத்திருக்க, ஒரு சிக்கலான வேளையில் போலீஸிடம் சிக்கி, விசாரணை இன்ஸ்பெக்டரிடம் உண்மைகளைக் கக்க, பிளாஷ்பேக்கில் விரியும் கதை.

சென்னையில் துறைமுகம் ஏரியாவைக் கலக்கும் தாதாவிடம் வேலை பார்க்கும் பாரத் சீனிக்குக் காதல் வர, அதன் காரணமாக வன்முறைப் பாதையை விட்டு குடும்பவாழ்வில் இணைய முற்படுகிறார்.

ஹைடெக் ஆட்டோ ஒட்டுநர் அண்ணாதுரையின் இன்ஸ்பிரேஷனில் முன்னேறத் துடிக்கும் இசக்கி பரத், அடுத்து கார் வாங்கி அதை இளைஞர்களுக்குப் பயிற்றுவிக்கும் முயற்சியிலிருக்கிறார்.

அதேபோல், விளையாட்டு வீரனாக இருக்கும் வினோத், அதை வைத்து அரசு வேலைக்குச் சேர முற்பட, அதுவரை ஒரு உணவு விடுதியில் வேலைபார்க்கிறார்.

இவர்கள் மூவரும்தான் கதை நாயகர்கள். இப்படி வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இவர்களுக்குள் நோக்கம் ஒன்றாக இருப்பதைத் தவிர வேறு எந்தத் தொடர்பும் இல்லை. இவர்கள் ஒவ்வொருவரின் கனவைக் கலைக்க ஒவ்வொரு ரூபத்தில் வில்லங்கம் வர, ஆளுக்கொரு வில்லன்களும் வருகிறார்கள்.

அவர்களுடன் மோத நினக்கும் இவர்களை அவ்வப்போது தலையிட்டு அமைதிப்படுத்துகிறார் அவர்களின் காட்ஃபாதராக இருக்கும் சமுத்திரக்கனி. கடைசியில் என்ன ஆகிறதென்பதை ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன்.

மூன்று இளைஞர்களும் தங்கள் பாத்திரங்களில் பொருந்திச் செய்திருக்கிறார்கள். கதையின் நாடியான “எங்களைத் தடுக்க நீ யார்..?” என்று அவர்கள் தத்தம் பிரச்சினைகாகக் எழுப்பும் ‘குரல்’ கைத்தட்டத் தோன்றுகிறது. கிளைமாக்ஸில் மட்டும் காட்டுக் கத்தல் போடாமலிருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.

வில்லனைக் கொல்ல கொண்டு வந்த ஒற்றைக் கத்தியை வைத்துக்கொண்டு கொல்லத் துரத்தும் ஒரு கூட்டத்திடமிருந்து தப்பிக்க நினைக்கும் பாரத் சீனிக்கான காட்சி ஒரு ஆக்‌ஷன் ஹீரோவுக்குரியது. ஆனால், அந்த இடத்தில் அதே நோக்கத்துடன் வந்த மற்ற இருவரும் உதவி அவரைத் தப்பிக்கச் செய்வது புத்திசாலித்தனமான கட்டம்.

அதுவே மூவருக்குமான அறிமுகமாக இருப்பதும், தனித்தனியாக இருந்த வில்லன்கள் மூவருமே கூட்டாளிகள்தான் என்று தெரியவருவதும் அதே காட்சியாக இருப்பதும் நயம்.

ஆனால், மூன்று இளைஞர்களுக்கும் ஒரு ஜோடியைத் தந்துவிட நினைத்த இட ஒதுக்கீடு இயல்புத் தன்மையிலிருந்து விலகி நிற்கிறது. (அட… சமுத்திரக்கனிக்கும் கூட ஒரு முன்னாள் காதலி இருக்காங்கப்பா..!)

தங்களுக்கான வேடங்களை அதிக சிரமப்படாமல் செய்துவிட்டுப் போயிருக்கும் சமுத்திரக்கனியும், கௌதம் மேனனும் படத்துக்கு நம்பகத் தன்மையைத் தந்திருக்கிறார்கள்.

சமுத்திரக் கனியை இன்னும் பெரிதாகப் பயன்படுத்தியிருக்க முடியும். அதேபோல் ‘டெரர்’ இன்ஸ்பெக்டராக அறிமுகமானாலும் அவர், கௌதம் மேனனாக இருக்கவே கடைசியில் ஹீரோக்களுக்கு எதிராக எதுவும் செய்துவிட மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவரது ‘டெரரை’யும் இன்னும் கூட்டியிருக்கலாம்.

இயக்குநரே ஒளிப்பதிவாளராகவும் இருப்பதால் படம் முழுதும் கேமரா நில்லாமல் சுழன்று கொண்டேயிருக்கிறது. ஒளிப்பதிவுக்கு தனியாக வெல்டன், மில்டன்..! அச்சுவின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனால், பின்னணி இசையில் ‘இரைச்சல்’ ஓவராக இருப்பதைக் குறைத்திருக்கலாம். வசனங்களில் வீரியமும், நீளமும் அதிகம்..!

சுபிக்‌ஷா, க்ரிஷா, ரக்‌ஷிதா என்று மூன்று பெண்குட்டிகளும் ஓகே. அதில் இசக்கி பரத்தின் ஜோடியாக வரும் பெண்ணுக்கு மூக்கும், முழியும் கூடவே நடிப்பும் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. பார்வைத் திறனற்ற அந்தச் சிறுமியின் முடிவு மனம் பதைபதைக்க வைக்கிறது.

ரேகா பணக்கார அம்மா போலத் தெரிகிறார். சண்டைக்குக் கிளம்பும் இளைஞர்களை ரோகிணி தடுத்து ஒரு ‘ஸ்டோரி போர்ட்’ படங்களைக் காட்டி அமைதிப்படுத்துவது ‘ஓவர் க்ளிஷே…’

சுப்ரீம் சுந்தரின் ஆக்‌ஷன் இயல்புக்கு மிகாமல் இருக்கிறது. படத்தின் இயல்புக்கு ஒட்டாமல் இருந்தாலும் ‘என் பொண்டாட்டி நீ…’ பாடலுக்கு ஸ்ரீதர் போட்டிருக்கும் ஆட்டம் ‘பலே..!’

அடக்கி வாசிக்கும் சமுத்திரக்கனியே ‘ஆர்டர்’ கொடுத்தும் கூட கிளைமாக்ஸை முடிக்காமல் மாறி மாறி ட்விஸ்ட் கொடுத்துக்கொண்டே போவது படத்தின் முழுமையைக் குறைக்கிறது. படம் முடிந்தும் கூட இன்னும் ஒரு ட்விஸ்ட் இருக்கிறதா என்று திரையைத் திரும்பப் பார்த்துக்கொண்டே வர வேண்டியிருக்கிறது.

கோலிசோடா 2 – சிறிய… ஆனால், சீரிய முயற்சி..!