April 25, 2024
  • April 25, 2024
Breaking News
February 24, 2020

காட்ஃபாதர் திரைப்பட விமர்சனம்

By 0 1285 Views

பொதுவாக காட் ஃபாதர் என்றால் ஆங்கிலத்தில் இருக்கும் பொருளே வேறு. ஆனால், கொச்சையாக இரு குழந்தைகளுக்குக் காவல் தெய்வங்களாக அவர்களது தந்தைகளே நிற்க அதுதான் காட்ஃபாதர் என்கிறார் இயக்குநர் ஜெகன் ராஜசேகர்.

எடுத்துக்கொண்ட  பிரச்சினை இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் கதைக்கு வலு சேர்க்கிறது. கொடூர வில்லனான ‘லால்’, தனக்கு எதிராக செயல்படுபவர்களை ஈவு இரக்கமில்லாமல் போட்டுத்தள்ளிவிடும் போக்குடையவர். காலம் கடந்து பிறந்த அவரது மகனுக்கு இதயத்தில் பிரச்சினை ஒன்று வர, மாற்று இதயம் பொருத்துவதுதான் வழி என்று மருத்துவம் சொல்ல, அதே வயது மற்றும் ரத்த வகையைச் சேர்ந்த சிறுவன் மூளைச்சாவு அடைந்தால்தான் அது சாத்தியம் என்றாக ஏற்கனவே கொலைகாரரான லால் அதற்குப்  பொருத்தமான நட்டியின் மகனைக் கொன்று தன் குழந்தையைக் காப்பாற்ற நினைக்கிறார்.

ஆக, லால் அராஜகத்தில் தன் குழந்தயைக் காப்பாற்ருகிறாரா, அல்லது அவரிடமிருந்து தன் மகனை நட்டி காப்பாற்றுகிறாரா என்பதில் எந்த ஃபாதர் உண்மையான காட்..? என்பதுதான் கதை. சரிதானே இயக்குநரே..?

நட்டிக்கு இயல்பான கேரக்டர் என்பதால் இயல்பாகவே நடித்திருக்கிறார். அவர் தைரியசாலியா, பயந்தாங்குள்ளியா என்பது சரிவர சொல்லப்படவில்லை. ஒரு இடத்தில் சாதாரண முரட்டு வாலிபர்களிடம் பிரச்சினை எதற்கு என்று ஒதுங்கிப் போகிறார். இன்னொரு இடத்தில் வில்லன் ஒரு மனிதனை சம்மட்டியால் அடித்துக் கொல்லும்போது அப்படியே அங்கே நின்று வேடிக்கை பார்க்கிறார்.

அவரது மனைவியாக நெடுநாள் கழித்து அனன்யா. நடிக்கத் தெரிந்த நடிகையான அவரை வெறும் அழுகாச்சி காட்டி வீணடித்திருக்கிறார்கள். நட்டிக்கும், அவருக்குமான  கணவன் மனைவி உறவுப்பிணைப்பு சரியாக வெளிப்படவில்லை.

படத்தின் மையம் அவர்களின் மகனாக வரும் அஷ்வத் தான். அவன் காப்பாற்றப்பட்டு விடுவான் என்று தெரிந்தாலும் அவனைக் காட்டும்போதெல்லாம் ஒரு பதைபதைப்பு வருகிறது. அதுவும் அப்பா அம்மவைப் பிரிந்து அவன் தனிமைப்படும்போது இன்னும் அந்தப் பதைபதைப்பு கூடுகிறது. அஷ்வத் அசத்தலாக நடித்திருக்கிறான்.

லால் என்ற ஆரோக்கியமான மலையாள நடிகர் தமிழைப் பொறுத்தவரை கொடூர வில்லன் மட்டுமே. இதிலும் அப்படியே. எந்த ஈவு இரக்கமும் இல்லாமல் அவர் மற்றவர்களைக் கொலை செய்துவிட்டு தன் மகனுக்கு ஒன்று எனும்போது கலங்குவது எடுபடவேயில்லை. அவர் தேவை நிறைவேறத் தேவையில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.

 நட்டியை பைப் இஞ்சினீயர் என்று அறிமுகப் படுத்துகிறார்கள். எதற்கு இப்படி ஒரு தொழிலை ஹீரோவுக்கு வைத்தார் இயக்குநர் என்பதற்கும் கதையில் விஷயம் இருக்கிறது. கடைசியில் ஒரு பெரும்போராட்டத்தைச் சமாளிக்க அவரது சமயோசித அறிவு தண்ணீர் வினியோகமாகும் பைப் வழியாகவே செயல்படுகிறது. ஆனால், அவர் செய்யும் செயலைச் செய்ய ஒரு பிளம்பர் போதும் என்பது வேறு விஷயம்..!

உதவி ஆய்வாளர் மாரிமுத்து வில்லன் லாலின் மச்சான். எனவே “நீங்க என்ன வேணா செய்ங்க மாமா… எங்க அக்கா கண்ணுல தண்ணி வரக்கூடாது…” என்கிறார் வில்லனை விடக் கொடூரமாக.

சண்முகசுந்தரத்தின் ஒளிப்பதிவும், நவீன்ரவீந்திரனின் இசையில் பாடல்களும் ஓகே. பின்னணி  இசையில் தேவையில்லாத இரைச்சல்.

ஒரு அபார்ட்மென்ட் உள்ளேயே கிட்டத்தட்ட மொத்தப்படமும் நடக்கிறது. அதற்காக ஒரு அபார்ட்மென்ட்டிலேயே படம் பிடித்திருந்தால் குறைந்த பட்ஜெட்டில் முடித்திருக்கலாம். ஆனால், தயாரிப்பாளர் பெரிய கை போலிருக்கிறது. அந்த அபார்ட்மென்ட்டை செட் போட்டு செலவு பிடிக்க எடுத்திருக்கிறார் இயக்குநர். 

அபார்ட்மென்ட்டை விட்டுதன் மகனை வெளியே கொண்டு வர முடியாத சூழலில் நட்டி மட்டும் பலதடவை பைப் வழியாக கீழே இறங்கி இறங்கி ஏறுகிறார். அப்படி ஒரு தடவை மகனை முதுகில் கட்டிக்கொண்டு இறங்கியிருந்தால் எப்போதோ அவர் தன் மகனைக் காப்பாற்றியிருக்க முடியும். கடைசியிலும் படத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் பிளாங்க்’காக என்ட் டைட்டில் போட்டு முடிக்கிறார் இயக்குநர்.

காட்ஃபாதர் – அப்பா… அப்பா… அப்பப்பா..!