November 22, 2024
  • November 22, 2024
Breaking News
May 31, 2024

கருடன் திரைப்பட விமர்சனம்

By 0 581 Views

சூரியை ஒரு சூர்யா ஆக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு தன் கரியரில் பாதியைப் பங்களித்து இருக்கும் வெற்றிமாறன், சசிகுமார் சமுத்திரகனி போன்றோர் பின்னணியில் இருக்க, அதை செயல்படுத்தி இருக்கும் இன்னொரு படம் இது.

படிக்காத மேதை காலத்தில் இருந்து பல காலம் கலைத்துப் போட்டு எடுத்த கதைதான். உணவளித்து தன்னை வளர்த்த காரணத்துக்காக விசுவாசத்தில் நாய் போல அந்த குடும்பத்தின் நலனுக்காகவே சுற்றிவரும் ஒரு மனிதன் எப்படி அந்த குடும்பத்தின் காவல் தெய்வமாக வாழ்கிறான் என்பதுதான் லைன்.

இரண்டு நண்பர்கள் என்று ஆரம்பித்தாலே அந்த நண்பர்களுக்குள் ஒரு கட்டத்தில் சண்டை வரும் என்பது உலகம் அறிந்த விஷயம். அப்படித்தான் சசிகுமாரும் உன்னி முகுந்தனும் நண்பர்களாக இருக்கிறார்கள். இதில் சசிகுமாரின் இமேஜ் பாசிட்டிவாக இருக்க நிச்சயமாக  உன்னி முகுந்தன்தான் நெகட்டிவ் ஆக மாறுவார் என்று நாம் எதிர்பார்த்தபடியே நடக்கிறது. 

இவர்கள் இருவரும் சிறுவர்களாக இருந்தபோது பழக்கமாகும் ஆதரவற்ற சிறுவன் சூரி அவர்களுடனே வளர்கிறான். அதிலும் உன்னி முகுந்தனின் உயிரைக் காப்பாற்றி அவர் வீட்டில் அவருடைய பாட்டி வடிவுக்கரசி கையாலேயே உண்டு வளரவே, உயிர் நண்பன் சசிகுமாரே உன்னி முகுந்தனை அடிக்க முயன்றாலும் அவரையே அடிக்கக் கை ஓங்கும் அளவுக்கு சூரியின் விசுவாசம் ஓங்கி வளர்ந்து நிற்க… அது எங்கே போய் முடிகிறது என்கிற கதை. 

ரஜினி, விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்காகப் உருகி உருகிக் காட்சிகளை எழுதுவதைப் போல் இந்தப் படத்தின் இயக்குனர் துரை. செந்தில்குமார் சூரிக்காகவே மருகி மருகிக் காட்சிகளை எழுதி இருக்கிறார்.

அதிலும் சூரி எத்தனை உண்மையான விசுவாசி என்பதைச் சொல்ல வரும்  இடங்களில் எல்லாம், அவரை நம்பிக் கேட்கப்படும் கேள்விக்கு, பொல பொலவெவென்று அத்தனை உண்மைகளையும் அவர் உதிர்த்து  விடுவது அழகு. அந்த உண்மையினால் விளையும் சாதக பாதகங்களைப் பற்றி யோசிக்காமல் ஒப்புவிக்கும் அப்பாவித்தனத்தில் சூரி மிளிர்கிறார். 

அதேபோல் உண்மைக்குப் புறம்பாக எதையும் செய்யத் தோன்றாத அவர் விசுவாசத்தின் காரணமாக அப்படி நிலை மீறும் இடத்திலும் தன் நிலை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார். 

ஆனால் கிருஷ்ண பரமாத்மா போல இருக்கிற இடத்தில் எல்லா அக்கிரமங்களையும் அவர் ஒருவரே தலையிட்டுத் தட்டிக் கேட்பது, பாவம் தீர்க்க பல உயிர்களை பலி வாங்குவது என்பதெல்லாம் காந்தாராவைத் தாண்டிய ரொம்பவும் ஓவரான விஷயம். (அந்த இடைவேளைக் கத்தல் உள்பட…)

தமிழ் சினிமாவின் ‘உயிர் நண்பன்’ கேரக்டரை 99 ஆண்டுகள் லீசுக்கு எடுத்துக் கையில் வைத்திருக்கும் சசிகுமார் இதிலும் ‘உயிரைக் கொடுத்து’ நடித்திருக்கிறார். சூரி ஹீரோவாக இருக்கும் படத்தில் இவரது ஹீரோயிஸம் இப்படியாக அமரத்துவம் பெறுகிறது.

ஆனாலும் சதிகாரர்கள் மத்தியில் தன்னுடைய கைக்குழந்தை கதறிக் கொண்டிருக்க அது பற்றி எல்லாம் கவலைப்படாமல் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதெல்லாம் உலக மகா நட்புடா சாமி..!

உன்னி முகுந்தன் அத்தனை வில்லனாக மாறிப் போவதற்கு அழுத்தமான காரணங்கள் இல்லை. அப்படி அடிப்படை குணம் உள்ளவர் என்றால் இவர்கள் இருவருக்கிடையே இவ்வளவு நாட்கள் நட்பு நீடித்திருக்க வாய்ப்பில்லை. இடையிலேயே அவருடைய வன்ம குணம் சசிகுமாரால் புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். திரைக் கதையில் இருக்கும் மாபெரும் குறை இது.

உன்னியின் பிரச்சினை பணம்தான் எனில் அதைத் தர சசிகுமார் முன்வரும்போது, யாரும் எனக்கு பிச்சை போட வேண்டாம் என்று மறுத்து விட்டு, நண்பனையே கொன்று ஒரு சதுகாரனிடம் அதைப் பெற நினைப்பதில் அந்தக் கேரக்டரே உருக்குலைந்து போகிறது.

பால்யத்தில் இருந்து அவரை உற்ற நண்பனாக நினைத்துக் கொண்டிருந்த சசிகுமார்  கேரக்டரும் இதனால் மொக்கையாகி விடுகிறது.

கடமை தவறாத காவல் அதிகாரியாக சமுத்திரக்கனி. வருகிற படங்களில் எல்லாம் அக்குளில் கட்டி வந்தவர் போல கையை விரித்துக்கொண்டு தாதாவாக சுற்றிக் கொண்டிருந்தவர் அதே நினைவில் இதில் காவல் அதிகாரியாகவும் கையை விரித்துக் கொண்டு வந்து நிற்கிறார். அவர் கைகளைப் போலவே அவரது பாத்திரமும் கதைக்குள் ஒட்டாமல் நிற்கிறது.

கடமை ஆற்றவும் கையை விரிக்கும் அவர் சொல்லும் கதையாகத்தான் இந்த கதை நகர்ந்து கொண்டிருக்கிறது என்பது மட்டுமே எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் ஆக இருக்கிறது.

படத்தில் நடக்கும் அத்தனை அக்கிரமங்களுக்கும் சூத்திரதாரியாக வருகிறார் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக வரும் ஆர் .வி.உதயகுமார். அவரைப் போட்டுத் தள்ளும் அபாயங்கள் எல்லாம் படத்தில் ஏதும் இல்லாமல் அவர் வழக்கப்படி அவர் அநியாயக்காரராகவே இருப்பது போல் படம் முடிகிறது.

மைம் கோபி பல படங்களில் வில்லனாக வந்திருந்தாலும் இதில் அவர் ஏற்றிருக்கும் பாத்திரம் கொஞ்சம் உக்கிரமானது. அத்துடன் அவர் தொடர்ந்து அணியும் யூனிஃபார்மான வெள்ளை சட்டையை மாற்றி கொஞ்சம் கலர் சட்டையும் கொடுத்திருக்கும் இயக்குனருக்கு அவர் நன்றி சொல்ல வேண்டும். 

சசிகுமாரின் மனைவியாக வரும் ஷிவதா, முன் பாதியில் நிழலாகவே நின்று பின் பாதியில் தனக்குக் கிடைத்த இரண்டு மூன்று இடங்களில் நச்சென்று நடித்து பெயர் வாங்கி விடுகிறார். 

உன்னி முகுந்தனின் மாமனாராக வரும் முத்துராமன் மற்றும் மைத்துனராக வரும் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மனைவி ரோஷினி ஹரிப்பிரியன் அனைவரும் ஃபேமிலி பேக்கேஜாக செய்யும் ‘சதி’ உன்னி முகுந்தனுக்கு புரிகிறதா இல்லையா என்பதே புரியவில்லை.

சூரிக்கு இணையாக வரும் பால் ஊற்றும்  ரேவதி ஷர்மா அநியாயத்துக்கு பால்வாடி மாணவி போல் சூரிக்குப் பொருந்தாமலேயே இருக்கிறார். நல்ல வேளை சூரி அவரை மணமுடிப்பது போலவோ அல்லது டூயட் பாடுவது போலவோ காட்சிகள் அமைக்காததில் பெருமூச்சு விடுகிறோம். அப்படி நேர்ந்திருந்தால் சூரி மேல் போக்சோ சட்டம் பாயும் வாய்ப்பு இருக்கிறது.

படம் முழுவதும் ஆட்சி செய்திருக்கிறது ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு. அதுவும் அந்த கிளைமாக்ஸில் செம்மண் புழுதி பறக்க செங்கல் பிளாக்குகளுக்குள் வைத்து எடுக்கப்பட்டு இருக்கும் ஆக்சன் பிளாக் அற்புதம். 

இந்தப் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா என்பது சொன்னால்தான் தெரிகிறது. 

கருடன் என்ற ஒரு தலைப்பை வைத்து விட்டதால் இதை எப்படிப் படத்துடன் கனெக்ட் செய்வது என்று யோசித்து யோசித்து கிளைமாக்ஸில் ஒரு வழியைக் கண்டுபிடித்து விடும் இயக்குனர், ஒரு வசனத்தைப் போட்டு ஒரு வழியாகப் படத்தை முடிக்கிறார்.

ஷிவதாவுக்கு அநியாயமாக ஒரு பாவத்தை செய்துவிட்ட சூரி, பின்னால் ஒரு நன்மை செய்தார் என்று தெரிந்ததும் அவரை ஷிவதா கையெடுத்துக் கும்பிடுவதும், உன்னி முகுந்தன் மைத்துனனின் கையை வெட்டிய சூரியை அவனுடைய மனைவி பிரிகிடா தனியாக சந்தித்து, “இப்பதான் என்னை மனுஷியாவே அவங்க வீட்ல மதிக்கிறாங்க…” என்று நன்றி சொல்வதுமாக, சூரியை ஒரு சூப்பர் ஹீரோவாக மாற்ற இயக்குனர் மெனக்கெட்டு மண்டியிட்டு முட்டி பெயர்ந்த இடங்கள்..!

“நாயாய் இருந்தவன் மனுசனானதுதான் தப்பு…” என்று விசனத்துடன் சூரி பேசும் கடைசி வசனம் பஞ்ச். இதே கவனம் படம் நெடுக இருந்திருந்தால் குறிப்பிடத்தக்க படமாக இருந்திருக்கும்.

கருடன் – தலைக்கு மேல் பறக்கும் பாவப் பட்சி..!

– வேணுஜி