தன்னுடைய காதலுக்காக ஆஸ்தி, அதிகாரம் எல்லாவற்றையும் 30 வருடங்களுக்கு முன் துறந்து விட்டு காதலியுடன் ஊரை விட்டு நகரத்தில் வந்து சராசரி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஜமீன் காந்தி ஒருபுறம்…
பணம்தான் எல்லாவற்றிலும் பெரிது என்று நம்பி காதலிக்க கூட நேரம் ஒதுக்க முடியாமல் பணத்தை துரத்திக் கொண்டு ஓடிக்கொண்டிருக்கும் இளைஞன் பாலா மறுபுறம்…
இந்த இரு வேறு துருவங்களுக்குள் ஏற்படும் ஒரு ரசவாதம்தான் இந்தப் படம்.
காந்தியாக நடித்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். அறுபது வயதான நிலையில் செக்யூரிட்டி வேலை பார்த்து வரும் அவர் இந்த வயதிலும் ஒவ்வொரு நாளும் காதல் மனைவி அர்ச்சனாவின் மீது அத்தனை அன்பு கொண்டவராக இருக்கிறார்.
அவரை மிஞ்சும் விதத்தில் அர்ச்சனாவும் இந்த 60 வயதிலும் கணவன் வெளியே கிளம்பும் போதெல்லாம் அவரது அழகின் மீது யாரும் கண் வைத்து விடக்கூடாது என்று சுத்தி போட்டு அனுப்பும் காதல் மனைவியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வரும் பாலாவோ தன்னுடைய காதலி நமீதா கிருஷ்ணமூர்த்தி காதலுக்கு கூட நேரம் ஒதுக்க முடியாமல் பணம் சேர்க்க முயன்று கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் நடத்தும் ஒரு அறுபதாம் கல்யாண நிகழ்ச்சியை நேரில் பார்க்கும் பாலாஜி சக்திவேலுக்கு தன்னுடைய பருவ வயதில் அர்ச்சனா எப்படியெல்லாம் தங்கள் கல்யாணம் நடைபெற வேண்டுமெனறு கனவு கண்டாரோ அதே அளவில் விமர்சையாக தங்கள் அறுபதாம் கல்யாணத்தை நடத்திப் பார்க்க வேண்டும் என்று பாலாவை நாடுகிறார்.
அவரது ஆசையை வைத்துப் பெரிதாக பணம் பார்த்து விட பாலாவும் திட்டம் போடுகிறார்.
பரணில் தூங்கிக் கொண்டிருக்கும் தனது சொத்து பத்திரங்களை பாலாஜி சக்திவேல் விற்று காசாக்கும் போது இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடக்க கல்யாணக் கனவு கனவாகவே போய் விடக்கூடிய சாத்தியம் ஏற்பட… அது கைகூடியதா என்பதுதான் மீதி கதை.
இதுவரை சின்ன சின்ன காமெடி வேடங்களில் நடித்து வந்த பாலாவுக்கு இதில் பம்பர் பிரைஸ் ஆக கதாநாயகன் வேடம். அவரும் அதற்கு தோதாக தனது உடல் அமைப்பு, உடல் மொழி, ஹேர் ஸ்டைல் எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டு ஹீரோவாக நடிக்கவும் முயற்சித்து இருக்கிறார்.
நடனம் சண்டை என்று எல்லா ஏரியாக்களிலும் புகுந்து புறப்படும் அவர் இன்னும் சில படங்களில் முழுமையான ஹீரோவாகத் தேறி விடுவார் என்று நம்பலாம். தான் ஏன் பணத்தை துரத்திக் கொண்டு ஓடுகிறேன் என்பதற்காக அவர் விளக்கம் கொடுக்கும் இடம் ‘ நச்..!’
அவரது ஜோடியாக நடித்திருக்கும் நமீதா கிருஷ்ணமூர்த்திக்கு பெரிய வாய்ப்பு எதுவும் இல்லை என்றாலும் கிடைத்த இடங்களில் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
ஆனால் படத்தில் நம்மை பெரிதும் ரசிக்க வைத்திருப்பது பாலாஜி சக்திவேல் – அர்ச்சனா ஜோடிதான்.
ஒவ்வொரு நாளும் ஒருவர் மீது இன்னொருவர் பொழியும் அன்பில் நாம் திக்குமுக்காடி போகிறோம். அங்கங்க அவர்கள் அளவுக்கு மீறி ஓவர் ஆக்டிங் செய்திருந்தாலும்…
ஆனால் பாலாஜி சக்திவேலின் பாத்திரப்படைப்பு கொஞ்சம் தடுமாறுகிறது. காதலுக்காக அவர் எல்லாவற்றையும் துறந்து விட்டு வந்தாலும் அவர் ஒன்றும் முட்டாள் இல்லை. ஆனால் சொத்து பத்திரங்களை விற்கும் காட்சியில் உலகம் தெரியாத அப்பாவி போலவே அவர் பேசிக் கொண்டிருப்பது ஒட்டாமல் இருக்கிறது.
பாலாவின் நட்பு வட்டத்தில் வரும் மதன், நிகிலா சங்கர், ஜீவா சுப்பிரமணியம், ரித்து சாரா, அமுதவாணன், மனோஜ் பிரபு உள்ளிட்டோரின் பங்களிப்பு தேவையை நிறைவு செய்து இரக்கிறது.
ஒளிப்பதிவாளர் பாலாஜி கே.ராஜா கை வண்ணத்தில் காட்சிகள் பளிச்சென்று இருக்கின்றன. படத்தின் நேர்த்தியும் தரமானதாக இருக்கிறது.
விவேக் – மெர்வின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பொருத்தமாக இருக்கின்றன ஆனால், அவர்களின் சிக்னேச்சர் மிஸ்ஸிங்.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் ஷெரிப், இன்றைய அவசரயுக இளைஞர்களுக்கு காதலின் உண்மையான சக்தியை புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார். அருமையான களம்தான் என்றாலும் அதை இன்னும் செதுக்கி ரசிக்க வைத்திருக்க முடியும்.
கண்டிப்பாக கிளைமாக்ஸில் இதுதான் நடக்கும் என்று விஷயத்தை நம்மால் யூகித்து விட முடிகிறது என்பதுடன் தலைப்புக்கும் கதைக்கும் பெரிய சம்பந்தம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை.
பண மதிப்பிழப்பு படத்தில் முக்கியமான காரணி என்பதால்…
‘காந்தி கண்ணாடி’ என்பதை ‘ காந்தி கணக்கு’ என்று வைத்திருந்தாலும் பொருந்தி இருக்கும்..!
– வேணுஜி