September 16, 2024
  • September 16, 2024
Breaking News
February 11, 2022

எப் ஐ ஆர் திரைப்பட விமர்சனம்

By 0 1036 Views

இந்து மதவாதிகளின் “ஜெய் ஸ்ரீராம்” முற்றுகைக்கு எதிராக இந்திய இஸ்லாம் மாணவி எழுப்பிய “அல்லாஹு அக்பர்…” முழக்கம் ஒவ்வொரு இந்தியரின் உள்ளத்திலும் எதிரோலித்துக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் பொருத்தமாக வெளியாகி இருக்கும் படம் இது. இந்திய முஸ்லிம்கள் அனைவரையுமே பயங்கரவாதிகள் போலப் பார்க்கும் பார்வைக்கு எதிராக முழக்கம் இடுகிறது இந்தப்படம்.

உலகை அச்சுறுத்தி வரும் ஐஸிஸ் அமைப்பு இந்தியாவில் குறிப்பாக சென்னையில் நடத்தவிருக்கும் பேரழிவை இந்திய முஸ்லிம் ஒருவர் எப்படித் தடுத்து நிறுத்துகிறார் என்கிற கதை. அதைத் திரையிலிருந்து கண்களை இம்மியளவும் இப்படி அப்படித் திருப்ப முடியாத அளவில் நவீன தொழில்நுட்ப உத்திகளுடன் ஒரு பரபரப்பான ஆக்ஷன் கமர்சியல் பேக்கேஜாக கொடுத்திருக்கிறார் புதுமுக இயக்குனர் மனு ஆனந்த்.

இதுவரை இப்படிப்பட்ட கதையைக் கேட்கும்போது நமக்கு விஜயகாந்தோ அல்லது ஆக்ஷன் கிங் அர்ஜுனோ நினைவுக்கு வருவார்கள். ஆனால், இந்தப் படத்தைப் பார்த்து முடித்தவுடன் இனி இப்படி ஒரு தேசப்பற்றுக் கதையை கேட்க நேர்ந்தால் இந்தப் பட ஹீரோ விஷ்ணு விஷால் நினைவுக்கு வருவார்.
 
அந்த அளவுக்கு உடல் பொருள் ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்து இந்தப் படத்தில் நடித்திருப்பதுடன் இதனை பிரம்மாண்டமாக தயாரித்தும் இருக்கிறார் விஷ்ணு விஷால். அந்தத் துணிச்சலுக்கு முதலில் பாராட்டுகள்.
 
நடிகராகவும் அற்புதமாக முன்னேறி இருக்கிறார் அவர். உடற்கட்டைப் பேணுவதில் ஆகட்டும், நடிப்பில் அடுத்த கட்டத்தைத் தொட்டு இருப்பதில் ஆகட்டும் அவர் முயற்சி கிரேட். 
 
கெமிக்கல் இன்ஜினியராக இருக்கும் அவர் எந்த இடத்துக்கு வேலை தேடிச் சென்றாலும் “நீ மதவாதியா..?” என்ற கேள்வியை எதிர்கொள்வதும் அதற்கு விடை சொல்லாமல் திரும்பி வருவதுமாகவே இருக்க மதம் பற்றிய பிரச்சினைகள் குறிப்பிடும்போது 10 பக்கம் வசனம் பேச நர்வதைத் தன் முகக்குறி ஒன்றினாலேயே உணர்த்தி அசத்தி விடுகிறார். அவரைப் பார்க்கும்போது ஒரு இஸ்லாமியரை பார்ப்பது போலவே நமக்கு தோன்றுகிறது அந்த நடிப்பினால் மட்டுமே.
 
சந்தர்ப்பவசத்தால் பயங்கரவாதியாக அடையாளப்படுத்தப்படும் அவர் ஒரு அப்பாவியின் பதட்டத்தை மிகத் துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார். அதிரி புதிரி ஆக்ஷனிலும் மின்னல் வேகம் காட்டியிருப்பதுடன் அம்மாவுடனான பாசத்திலும் மிச்சம் வைக்காமல் நடித்திருக்கிறார். முகத்தைப் பார்க்காமல் உயிர் விட்ட தாயின் முகத்தை கடைசியாகப் பார்த்துவிட அவர் ஓடி வரும் வேகம் நமக்கு நெஞ்சம் அடைகிறது.
 
அவரது உருவத்திற்கு சரியான ஜோடியாக இருக்கும் ரெபா மோனிகா ஜான் அழகிலும் நடிப்பிலும் மேலும் மெருகேறி இருக்கிறார். பிளாஷ்பேக்கில் வரும் அவருக்கும் விஷ்ணு விஷாலுக்குமான காதல் எபிசோட் ரம்மியம்.
 
வழக்கறிஞராக வரும் மஞ்சிமா மோகனின் பார்வையும் நடவடிக்கைகளும் விஷ்ணு விஷால் மீது ஒருதலையாக காதல் வைத்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஆனால் அவருக்கு இன்னொரு பக்கம் காதல் இருப்பது தெரிவதாலோ என்னவோ அடக்கியே வாசித்து இருக்கிறார். “ஒரு முஸ்லிம் தீவிரவாதிக்கு உதவி செய்தால் உன் முகத்தில் ஆசிட் ஊற்றி விடுவோம்…” என்று இந்து மத வெறியர்கள் மிரட்ட “நான் இங்கேயேதான் இருப்பேன் போய் ஆசிட் கொண்டு வா…” என்று அமர்ந்து கொள்ளும் இடத்தில் தெரிகிறார் மஞ்சிமா ஒரு பெண் சிங்கமா.
 
கிளாமரை நம்பியே சினிமாவுக்குள் வந்த ரைஸா வில்சனுக்கு இதைவிட அழுத்தமான பாத்திரம் எந்தப் படத்திலும் வாய்க்காது.
 
ஹேக்கர் பிரசாந்த் ரங்கசாமி காமெடி கலக்கல். அவரது இமேஜை வைத்தே அவர் கேரக்டரை வடிவமைத்திருப்பதும், பின்னணியில் ஒலிக்கும் ‘பாண்டா’ தீம் மியூசிக்கும் லந்து.
 
விஷ்ணு விஷாலின் அம்மாவாக வரும் நடிகையும் வழக்கமான சினிமா அம்மாக்களில் இருந்து விலகி ஒரு நிஜ அம்மா போன்றே தோற்றம் அளிக்கிறார். அவர் காட்டும் தாய்ப் பாசம் நெடுநாட்களுக்கு நம் நெஞ்சில் நிலைக்கும்.
 
தேசிய புலனாய்வு நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக வரும் கௌதம் மேனனின் மிடுக்கும் நடிப்பும் மெத்தப் பொருத்தம். அவரது எல்லா நடவடிக்கைகளுக்குப் பின்னாலும் ‘பிளான் பி’ இருப்பது எல்லாம் சரி, ஆனால் சென்னையைப் பாதுகாக்கும் திட்டத்தில் ‘பிளான் பி’யை பிரதமருக்குத் தெரியாமலேயே செயல்படுத்த முடியுமா என்பது தெரியவில்லை. (தன்னைப் போலவே தோற்றம் கொண்ட ஒருவரைப் பிரதமராக நடிக்க வைத்திருக்கும் விஷயம் மோடிஜிக்குத் தெரியுமா..?)
 
படம் ஆரம்பித்து முதல் பாதி கடந்ததே தெரியவில்லை – அவ்வளவு வேகம். இடைவேளைக்குப் பிறகு என்ன ஆகும் என்று பார்த்தால் அதைவிட ஜெட் வேகத்தில் பயணிக்கும் கதை இரண்டே முக்கால் மணி நேரம் எப்படிக் கடந்தது என்றே தெரியவில்லை. அப்படி ஒரு திரைக்கதை அமைத்து எடிட்டர் மற்றும் இசையமைப்பாளரை மிகச்சரியாக வேலை வாங்கியிருக்கும் மனு ஆனந்த் முதல் படத்திலேயே ஒரு வணிக இயக்குனராக முதல் வரிசையில் உட்கார்ந்து விட்டார்.
 
ஆனால், கடைசியில் என்ன நடந்தது என்று கௌதம் மேனனின் குரலில் விளக்கும்போது குழப்பங்கள் தீர்வதற்கு பதிலாக மேலும் சில கேள்விகள் எழுவதை தவிர்த்திருக்கலாம்.
 
பிரதமருக்கே தெரியாமல் கௌதம் மேனனே முடிவெடுத்து ஒரு திட்டத்தைச் செய்வதும், அதுவரை நடந்ததெல்லாம் பொய் நாடகம் என்று ஆகும் அளவில் அவருக்கு கீழ் இருக்கும் அத்தனை அதிகாரிகளையும் ஏமாற்றி இருப்பது சரியா..?
 
கடைசியில் ஒரு பேரழிவை விஷ்ணுவிஷால் தடுத்து விட்ட போதிலும அவரைக் கொல்ல முடிவு எடுப்பது ஏன் என்றும் தெரியவில்லை. பொய் நாடகத்தை நியாயப்படுத்த இப்படி ஒரு அணுகுமுறை தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரி தன்னிச்சையாகச் செய்ய முடியுமா..?
 
லாஜிக்குகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஒரு ஆங்கிலப் படம் பார்த்த திருப்தியை இந்தப்படம் ஏற்படுத்துவது நிஜம். 
 
அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு அபாரம். அஸ்வத் இசையில் காதல் பாடலும் சரி, வேதனைப் பாடலும் சரி மனதுக்குள் வந்து உட்கார்ந்து நெகிழ வைக்கிறது. பின்னணி இசையிலும் மிச்சம் வைக்காமல் பரபரப்பைக் கூட்ட உதவியிருக்கிறார்.
 
அற்புதமாக வடிவமைக்கப்பட்ட டீம் ஒர்க்கில் வென்று காட்டி இருகிறது எப் ஐ ஆர் ..!